அப்போதுதான் அலுவலகம் வந்திருந்தேன். அறையைச் சுத்தம் செய்பவர் ஒரு பத்து நிமிடங்கள் வெளியில் காத்திருங்கள் என்றார். நடக்கலாம் என்று கீழிறங்கி நல்ல தம்பி தெருவுக்கு வந்தேன். எல்லிஸ் சாலையில் நுழைந்து முதல் இடது பக்கம் திரும்பினால் இங்கு வந்திடலாம்.
கொத்துவதற்கு அலகுகளற்று நடுச்சாலையில் கிடந்தது எலிக்குடல். அதனால் கிழக்குப் பக்கம் போகாமல் மேற்கில் நடந்தேன். மேற்கின் முனையோரக் குப்பைத்தொட்டிகள் மூச்சைப் பிடிங்கிவிடும்.
ஒரு முறை கேமரா வாங்க ஸ்ருதி டிவி கபிலன், ராஜனுடன் சமஸ் இங்கு வந்திருந்தார். தோழர் இலஞ்சிக் கண்ணன், தம்பி கே.சி.ரஞ்சித் மூவரும் தேநீர் சாப்பிட்டு வரும்போது அவர்களைச் சந்தித்துப் பேசினேன். அடிமனதிலிருந்து பச்சோந்தி என்று அழைப்பவர் சமஸ். என்ன இந்தப் பக்கம் என்றார். எதிரில் இருக்கும் கட்டடத்தைக் காட்டி இதன் முதல் மாடியில்தான் அலுவலகம் இருக்கிறது என்றேன். ஓ... அதன் கீழிருக்கும் கற்கள் பதிந்த திட்டில்தான் நண்பர்களுடன் அமர்ந்து பேசுவோம். என்ன, எல்லிஸ் சாலை வழி வந்தால் மூச்சைப் பிடித்துக்கொண்டு வரணும். அதற்கு இப்படிச் சுத்தி வந்திடலாம் என்றார்.
சுற்றி வரும் வழியில்தான் கிட்டத்தட்ட நான்கைந்து நாட்களாகத் துருப்பிடித்த ஆட்டோவின் கீழ் இரண்டு பெருச்செலிகள் கிடக்கின்றன. காயமின்றி எப்படிச் செத்தன என்று தெரியவில்லை. அதுவும் ஒன்றுக்கொன்று அருகருகே. காலையில் அந்த இடத்தைக் கடந்துவரும்போதெல்லாம் விஷம் வெச்சுக் கொன்றுவிட்டார்களா அல்லது வலைவைத்துக் கொன்று எறிந்துசென்றார்களா என்கிற சந்தேகம் எழும். இன்று நடுச்சாலையில் குடல் பிதுங்கிக்கிடந்தது மற்றொரு பெருச்செலி. இங்கு குப்பை மட்டுமல்ல பெருச்செலிகளும் நிறைந்துகிடக்கும்.
எல்லாம் இருநூறாண்டு கட்டடங்கள். அவற்றில் சில புழங்குதலற்றுக் கிடக்கின்றன. உடைந்த ஜன்னல்களில் புறாக்கள் சிறகுதிர அலைவுறும். ஓர் நாள் தெருவின் முனையில் இருந்த மின்பெட்டியின் மறைவில் அழுக்கு உடையணிந்த பெண்ணொருத்திச் சிறுநீர் கழிக்கத் துணியைத் தூக்கியிருப்பார் போல, அப்போதுதான் வண்டியிலிருந்து இறங்கிய அருகில் கடைவைத்திருந்தவன் ச்சீ அங்கிட்டுப் போகமாட்ட, நாய் மாதிரி என்று திட்டி அனுப்பினான். அவள் தூக்கிய துணியை இறக்கிவிட்டபடி மெதுவாய் நகர்ந்தாள்.
போட்டோ பிரின்ட், மொபைல் உதிரி பாகங்கள், பேக்கரி, மருந்துக் கிடங்கு, காய்லாங்கடை ஆகியவை இத்தெருவில் உள்ளன. மேற்குப் பகுதியில் செல்லும் போது மட்டும் உயிர் மூச்சைக் கையில் பிடித்துதான் செல்ல வேண்டும். எல்லிஸ் சாலையின் முனையில்தான் தமிழ் இந்து அலுவலகம் இருக்கிறது. அதன் முனையில் எப்போதும் திறந்து கிடக்கும் கழிவுநீர் வடிகாலைத் தாண்டும் போதெல்லாம் சிறுது நேரம் செத்துப் பிணமாகிதான் உயிர் பெற முடியும். சமீபத்தில் சட்டசபை ஓமந்தூர் தோட்டத்தில் நடைபெற்ற போது வடிகால் அருகே போலீஸ் ஜீப் எப்போதும் நின்றுகொண்டே இருந்தது. பாவம் காவலர்களின் உயிரை உருவி எடுத்திருக்கும் போல, ஓரிரு நாளில் வடிகாலை சிமென்ட் போட்டு மெழுகிவிட்டார்கள். திறந்த வெளிச் சாக்கடை இருக்கும் இடங்களில் எல்லாம் அரசாங்கம் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தால் அத்தனையும் சரியாகிவிடும் அல்லவா.
எப்போதும் அழுகலான நீர் தேங்கியே இருக்கும். குப்பைத் தொட்டியின் மறைவிலோ அல்லது மறைவற்ற சுவரோரமோ யாராவது ஓர் ஆண் அவ்வப்போது சிறுநீர் கழித்துக்கொண்டுதான் இருக்கிறார். ஒரே தெருதான். பெண்ணை அடித்து விரட்டும் அத்தெருவில் சதா ஆணின் சிறுநீர் பெய்தபடியே இருக்கிறது. பேருதான் நல்லதம்பி தெரு...
01.03.2022
செவ்வாய்க்கிழமை
No comments:
Post a Comment