இப்போதெல்லாம் பள்ளி மாணவரைப் போல் நடுநிசியில் எழுந்து படிக்க ஆரம்பித்துள்ளேன். நடுநிசி, அதிகாலை மட்டுமல்ல எப்போது விழிப்பு வருகிறதோ அப்போதெல்லாம். இன்று 3:30 மணிக்கு எழுந்து வெவ்வேறு மூன்று புத்தகங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகப் படித்தேன். அதிகாலையில் முகம் கழுவ மேலே சென்றபோது, மல்லிகை மணத்துடன் பாத்ரூமில் இருந்து வந்த மனைவியிடம் கதவைச் சாத்திவிடாதே என்று பவ்யமாகச் சொல்லும் போது கொஞ்சம் சிரித்துவிட்டாள். ச்சே!!! ராத்திரி மேலயே தூங்கியிருக்கலாம் என்கிற ஏக்கம் ஒட்டிக்கொண்டது.
பல் துலக்கி, முகம் கழுவி வரும் போது மீண்டும் பாத்ரூமுக்குச் சென்றுவிட்டாள். லைட்டைப் போட்டால் பிள்ளைகள் விழித்துவிடுவார்கள் என்பதால் அலுமினிய அரிசி அண்டாவின் மீதிருக்கும் பவுடைரைப் பார்வையற்றவனைப் போல் தடவித் தடவித் தேடினேன். அங்கு இல்லை. பின்பு அதனோரமிருந்த பிள்ளைகளுக்கான டப்பாவில் ஒட்டிக்கொண்டிருந்த கொஞ்சூண்டு பவுடரை அடித்து விட்டுக் காத்திருந்தேன். வெகுநேரமாய் வராமல் இருந்ததால், குப்பையை எடுத்துக்கொண்டு நடைபயிற்சிக்குச் சென்றுவிட்டேன். இரவு தூங்குவதற்கு முன், காலையில் நடைப்பயிற்சி செல்லும் போது குப்பையை எடுத்துச் சென்று விடுங்கள் என்பது வழக்கமான கட்டளை. பாலித்தீன் அருகே கிடந்த தேங்காய் நாரையும் தயிர் பாக்கெட்டையும் அள்ளித் திணித்தேன்.
மேட்டுத் தெரு மீன் சந்தை தாண்டிச் சென்றுகொண்டிருந்தேன். புதிதாய்ப் போட்ட தார்ச்சாலையில் தேங்கிய நீர் கண்ணாடி போன்று இருந்தது. அல்லது திரவ இரவு போல் இருந்தது. வாசற்கோலத்தைத் தாண்டி ஓடும் நீரின் இருபுறமும் வெண்கரையாய் ஒதுங்கியிருந்தது கோல மாவு. வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள குப்பைக் கிடங்கில் கொட்டும் போது மின்சார கேபிள் பதிக்கும் பணி நடைபெறுகிறது என்கிற எச்சரிக்கை. ஹாட்ஸ் சிப்ஸ் கதவின் அடியில் உள்ளொளி படர்ந்திருந்தது. மஞ்சள் ஒளியில் பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தேன்.
மடிப்பாக்கம் நிறுத்தத்தில் V51 பேருந்தின் முன்பக்கம் வழியாக இறங்கும் முன் ஓட்டுநரின் பின்பக்கம் பார்த்தேன். 'உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து' திருக்குறள் இருந்தது. பின் பக்கம் இறங்கிய வெண்ணிறச் சுரிதார் அணிந்த பெண் செல்போனில் சத்தம் கேட்காதவாறு பேசிச் சென்றாள். அடர்நீல வானில் ஒற்றை விண்மீன் ஒளிர்ந்துகொண்டிருந்தது. சாலையைக் கடந்து ஏரியை அடைந்த போது தேநீர் கடையில் `ஒரு வாய் சோறு ஊட்டும் தாய்முன்
உட்கார்ந்திருப்பதைக் காணுங்கள்' என்னும் குருவாயூருக்கு வாருங்கள் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.நடைபாதையோரம் நிறுத்தப்பட்டிருந்த வண்டியில் சாய் பாபா பனியில் நனைந்தபடி ஆசிவழங்கிக்கொண்டிருந்தார். பனையின் அடியில் காய்ந்த மாஞ்சருகுகளைக் கொண்டிருந்த ஆடுகள் புதரை நோக்கி மே... மே... வெனக் கத்தின. எஞ்சிய வேப்பிலையைக் கடித்துத் தின்று கருங்கிளை மீது வாய் துடைக்கும் அணிலை, வெவ்வேறு கோணத்தில் கண்டு ரசித்தேன். நாணலின் மீது நடுங்கிக் குறுகியிருக்கும் நாரைகள். கரையோரம் காகிதமாய் மிதக்கும் கொக்கை அலைகள் அசைத்துக்கொண்டே இருந்தன. இரண்டாய்ப் பிளந்துகிடந்த கொக்கின் மஞ்சள் பகுதியின் கறுப்புக் கண்கள் கிடைமட்ட வானை வெறித்தபடியே!
03.03.2022
வியாழக்கிழமை
No comments:
Post a Comment