இன்று காலை 6.45 மணியளவில் நடைப்பயிற்சி செல்லப் புறப்பட்டேன். அப்போது ஷங்கரைப் பார்த்து நீலம் மார்ச் இதழ் தரலாமே என்று தோன்றியது. தகவல் தெரிவித்துவிட்டுப் போகலாம் என்று அழைத்தால் அவரின் எண் அணைத்துவைக்கப்பட்டிருந்தது. எப்படியும் எழுந்துவிடுவார் என்று கையில் இதழை எடுத்துக்கொண்டேன். M70 பேருந்தில் ஏறி பேபி நகர் நிறுத்தத்தில் இறங்கினேன். கிட்டத்தட்ட 90 களிலிருந்தே வேளச்சேரி அறிமுகம் என்றாலும் விஜய நகருக்கு அடுத்து முதலில் வருவது பேபி நகரா, டான்ஸி நகரா என்கிற குழப்பம் நீண்ட காலமாகவே இருந்து வந்தது. சமீபத்தில் அக்குழப்பம் தீர்ந்துவிட்டது. மர்பிதாஸ் சாலை நடை மேம்பாலத்தில் ஏறினால் பேபி நகர் 2 வது பிரதான சாலையில் இறங்கிவிடலாம். வள்ளுவர் தெரு, கம்பர் தெரு, பாரதி தெரு, வாஞ்சிநாதன் தெரு ஆகிய தெருக்களைக் கடந்து செல்லும் போது காய்ந்த வேப்ப இலைகள் நடனமிட்டபடி உதிர்ந்தன. குப்பைத் தொட்டியின் முன்னே அப்போதுதான் வெட்டப்பட்ட நாரத்தை மரம் துண்டு துண்டாகக் கிடந்தது. அருகில் துப்புரவுப் பணியாளர் செல்போனைக் கண்ணுக்கு அருகில் வைத்துக் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார். ஞாயிற்றுக்கிழமை என்பதால் மனித நடமாட்டம் மிகக் குறைவாகக் காணப்பட்டது. சுருக்கமான தோலினைக்கொண்ட பெண் வாசலின் ஈரத்தில் குனிந்து கோலம் போட்டுக்கொண்டிருந்தார். மிச்சமுள்ள புள்ளிகளையும் புள்ளிகளை விழுங்கிய கோடுகளையும் பார்த்தவாறு ஷங்கரின் வீட்டை நெருங்கினேன்.
Sunday, March 6, 2022
நீங்களும் மாஸ்டர்தான் ஷங்கர்
அப்பார்ட்மென்ட்டின் கதவுகள் மட்டுமல்லாது ஷங்கர் வீட்டு ஜன்னல்களும் திறந்திருந்தன. பூட்டிய கதவின் முன் நின்ற படி அவர் எண்ணுக்கு அழைத்தேன். அப்போதும் அணைத்துவைக்கப்பட்டிருந்தது. ஹாலிங் பெல்லை அழுத்தலாம் என்று தோன்றியது. ஒருவேளை உறங்கிக்கொண்டிருந்தால் தொந்தரவாக இருக்குமென்று இதழை இரும்புக் கதவின் இரு கம்பிகளுக்கிடையே செருகிவிட்டு வந்துவிட்டேன்.
மேட்டுத் தெருவில் உள்ள கசாப்புக் கடையில் நுழைந்து 1/4 கிலோ மட்டன் எவ்வளவு என்றேன். டேக்ஸோடு வேண்டுமா டேக்ஸ் இல்லாமல் வேண்டுமா எனக் கடைக்காரர் கேட்க. என்னங்கய்யா, கறி வாங்க வந்தால் டேக்ஸ்ன்னு சொல்லி மோடி மாதிரி பயத்தைக் காட்டுறீங்க என்றேன். மோடியா? ங்கோத்தா நாட்டையே குட்டிச் சுவராக்கிட்டான். அவனை ஏய்யா ஞாபகப்படுத்துகிற என்றபடி `கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா' என்கிற பாடலைப் பாடினார். நான் அந்தப் பாடலில் மூழ்கிப் போனேன். சிறுவயதில் அப்பா அடிக்கடி சொல்லிக் காட்டும் பாடலில் இதுவும் ஒன்று. கடைசி வரிகளுக்குப் பதிலாக ஹம்மிங் கொடுத்தார். `சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா' என அந்த ஹம்மிங்கை நிரப்பிவிட்டு மீண்டும் 1/4 கிலோ மட்டன் என்ன விலை என்றேன். 225 ரூபாய். கறுப்புப் பாலித்தீனில் கறியை வாங்கிக்கொண்டு `கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம், கல்லைக் கனியாக்கும் உந்தன் ஒரு வாசகம்' என்கிற மயக்கும் வரிகளைப் பாடியபடி வீடு சென்றேன்.
பிள்ளைகளுடன் தேநீர் குடித்துக்கொண்டிருக்கும் போது ஷங்கர் அழைத்து வீட்டுக்கு வந்திருந்தீர்களா என்றார். நீலம் இதழ் இருந்தது சரி நீங்கள்தான் வந்திருப்பீர்கள் என்று அழைத்தேன் என்றார். சுதாகர் கத்தக் நேர்காணல் வந்துள்ளது. உங்களுக்கு ஒரு இதழ் தரலாம் என்று வந்தேன் என்று சொல்லி முடிப்பதற்குள் பார்த்தேன் நல்லா வந்திருக்கிறது. நேர்காணல் அறிமுகம் இரண்டும் மிகத் துல்லியமாக வந்திருக்கிறது. ஆனால், நேற்று நீங்கள் அனுப்பிய blog link உரைநடை எழுதத் தெரியாதவர் போல் தட்டுத் தடுமாறுகிறீங்க. ஏன் இந்த வேறுபாடு எனக் கேட்டார். நேர்காணலை நான்கைந்து முறை எடிட் செய்தேன். Blog இல் டைப் செய்வதை அப்படியே பதிவிடுகிறேன் என்றேன். திரும்பக் கூறுதலும் தேவையற்ற சொற்களை உருவுதலும் மிக முக்கியம். நடேஷ் சின்ன வயதிலிருந்தே தரையில் ஓவியம் வரைந்திருக்கிறார் . ஓவியக் கல்லூரியில் அவர் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் தட்டு போட முயற்சி செய்துள்ளார். மிகுந்த சிரமத்திற்குள்ளாவதைப் பார்த்த பாஸ்கரன் வட்டம் எப்போது முப்பரிமாண தட்டாக மாறும் என்பதைச் சொல்லிக் கொடுத்திருக்கிறார் என்கிற குட்டிக் கதையைச் சொன்னார். மேலும் மண்ட்டோ, சுந்தரராமசாமி, அசோகமித்திரன் ஆகியோரைப் படிக்கிறீர்கள். இவர்கள் உரைநடை எழுதுவதில் மாஸ்டர்ஸ். தினமும் எழுதுங்கள்.
படிப்பது - எழுதுவது, எழுதுவது - படிப்பது இதைத் தாண்டி வேறொன்றும் இதற்கு வழியில்லை. உங்களுக்கென்று தனித்த உரைநடையை உருவாக்குங்கள், அது நீங்கள் பயணித்துக்கொண்டிருக்கும் ஊடகத்துறைக்கு மிகவும் பலனளிக்கும். மிகச் சுருக்கமாகச் சொல்வதென்றால் வட்டம் எங்கே தட்டாக மாறுகிறது என்பதுதான் மிக முக்கியம் என்றார்.
மண்ட்டோ, சுந்தரராமசாமி, அசோகமித்திரன் மட்டுமல்ல நீங்களும் மாஸ்டர்தான் ஷங்கர்.
06.03.2022
ஞாயிற்றுக்கிழமை
Subscribe to:
Post Comments (Atom)
பேச்சுக்குரலில் நவீனப் பட்டினப்பாலை `கபால நகரம்’ பச்சோந்தியின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பென்று நினைக்கிறேன். அவருடைய முதல் தொகுப்பு, ‘வே...

-
என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...
-
பேச்சுக்குரலில் நவீனப் பட்டினப்பாலை `கபால நகரம்’ பச்சோந்தியின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பென்று நினைக்கிறேன். அவருடைய முதல் தொகுப்பு, ‘வே...
-
நேற்று மாலை சிவராஜ் பாரதியும் நானும் அலுவலகத்தில் உரையாடிக்கொண்டிருந்தோம். வரவேற்பரையில் கரகரத்த குரல் ஒலித்தது. யாரென்று பார்த்தேன். புத்...
நாளை நீங்களும் மாஸ்டர்தான்
ReplyDelete