Saturday, February 19, 2022
ஊஞ்சலாடும் பாரதியார் பூங்கா
Friday, February 18, 2022
வேளச்சேரி கிழக்குப் பேருந்து நிறுத்தம்
தண்டீஸ்வரத்தின் கிழக்குப் பேருந்து நிறுத்தம் மிகப் பழமையானது. கிட்டத்தட்ட வேளச்சேரி கிராமாக இருந்த போது அது கட்டியிருக்கலாம். அங்கு இருபுறமும் நீர்ப்பாசனமுள்ள வயல்வெளி இருந்திருக்கலாம். நான்கு உருளைத் தூண்களால் கட்டியெழுப்பப்பட்டிருக்கும் அதன் மேற்கூரைத் தளத்தின் நடுவே உத சூரியன் சின்னம் இருக்கும். திமுக பிரமுகர் கட்டியிருக்கலாம் என்கிற யூகம். இருபத்திரண்டு ஆண்டுகளாக இந்த நிறுத்தத்துடன் தொடர்பில் இருக்கிறேன். டவுசர் போட்ட பையனாய், பேன்ட் போட்ட இளைஞனாய், வேட்டி கட்டிய தகப்பனாய் எனப் பல்பருவங்களைக் கடந்துவந்திருக்கிறேன். இதோ இப்போது ஷர்ட்ஸுடன் நிற்கிறேன். மடிப்பாக்கத்தில் நடைபயிற்சி செய்ய இங்குதான் பேருந்து ஏறுவேன்.
வேளச்சேரி கிழக்குப் பேருந்து நிறுத்தம்
2001-2002 ஆண்டுகளில் உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் போது தினமும் இந்த நிறுத்தத்திற்கு வருவேன். பதின்மத்தின் இறுதியில் எதற்காக இங்கு வந்திருப்பேன் என்று நினைக்கிறீர்கள். உங்கள் யூகம் தவறு. நண்பனைப் பேருந்து ஏற்றிவிட. அவன் வீடு ஒட்டியம்பாக்கத்தில் இருந்தது. தடம் எண் 51B இல்தான் அங்கு செல்வான். சரி நண்பனைப் பற்றிச் சொல்கிறேன். அவன் பெயர் அருண் பிரசாத். தினமும் பள்ளிச் சீருடையை அயன் செய்துதான் போட்டு வருவான். உருண்டையான கண்கள். சிவந்த நிறமுடைய அவன் நெற்றியில் எப்போதும் திருநீறு கலையாதிருக்கும். துடைப்பக்குச்சி போன்ற தேகம். நானும் என் அண்ணனும் தங்கியிருந்த அறைக்கு அதிகம் முறை வந்தது அவனாகத்தான் இருப்பான். வந்ததும் வியர்வையில் சட்டைக் கழற்றித் தொங்கவிட்டுவிடுவான். சும்மா ஈர்க்குச்சி போன்ற அவன் எலும்புகள் பேன் காற்றில் அசைந்தாடும் என்றால் நம்பிவிடுவதற்கான வாய்ப்பு அதிகம். ஆனால், தர்க்கரீதியாக நீங்கள் மூளைக்கு வேலைகொடுத்து நேரத்தைக் குப்பைக்கூடையில் போட வேண்டாம்.
இப்போது அந்தப் பேருந்து நிறுத்தம் வயோதிகத்தன்மையடைந்துள்ளது. அல்லது கொஞ்சம் நீளமான உயரமற்ற தகனமேடை போன்று காட்சியளிக்கிறது. நின்றுகொண்டே தொட்டுவிடும் அதன் வெளிப்புற மேற்கூரையை இப்போதெல்லாம் அவ்வப்போது தொட்டுப்பார்ப்பதுண்டு. 51 B இன்றும் அதே தடத்தில்தான் ஓடுகிறது. அதைக் காணும் போதெல்லாம் கண்ணாடி அணிந்த நண்பனின் உருவம் வந்துவந்து போகும். ஆனால் அவனைப் பார்த்துதான் ஆண்டுகளாகின்றன.
18.02.2022
வெள்ளிக்கிழமை
யாழிசையின் தோழி ஹரிணி
அதிகாலை தண்டீஸ்வரம் சாலை பரபரப்பானது. சாலையின் இருவோரமும் செய்தித்தாள் கோக்கும் அடுக்கும் பணி தீவிரமாய் நடக்கும். இன்னும் சரியாக விடியாத கருக்கலில் நடைப்பயிற்சிக்காக சென்றுகொண்டிருந்தேன். பேருந்து நிறுத்தத்தில் நன்கு அறிமுகமான முகக் கவசமற்ற முகம். என் மெல்லிய புன்னகையை என் முகக் கவசம் மறைத்திருக்கும். அருகில் சிறு குழந்தை. இருவரையும் கடந்து பின்பு திரும்பி முகக் கவசத்தை நீக்கி எப்படி இருக்கீங்க என்றதும் சற்று கூர்ந்து நோக்கிய அப்பெண்மணி ``அதானே பார்த்தேன். எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறது என்று நினைத்தேன். மாஸ்க் போடவும் சரியா தெரியலை. நீங்கள் தானா? நான் நல்லா இருக்கேன். நீங்கள் எப்படி இருக்கீங்க'' என்றார். உங்க மகள் எங்க படிக்கிறாள் என்றதும் மாநகராட்சிப் பள்ளியில் என்றேன். என் மகளுக்கு ஃபீஸ் அதிகமாகிடுச்சு. நானும் வேறு எங்காவது சேர்க்கணும் என்றார். எவ்வளவு என்று கேட்டேன். அவர் பதிலில் நெஞ்சுடைந்து போவது போல் இருந்தது. காரணம் LKG கல்விக் கட்டணம் 45,000 ரூபாய்.
சர்வதேசக் குரல் - சூரஜ் யங்டே
ஒரு பக்கம் தலித் வகையறா என்கிற கருத்துத் திணிப்பும் இன்னொரு பக்கம் என் எழுத்து தலித் எழுத்தல்ல என்கிற அடையாள மறுப்பும் நிகழும் சூழலில் சாதியைப் பேசித்தான் ஆக வேண்டும் என்கிற சூரஜ் யங்டே இந்திய நிலப்பரப்பில் மட்டுமல்லாது சர்வதேசக் குரலாக ஒலிக்கும் வலிமையான குரல். தமிழில் இருக்கும் தீவிர தலித் முற்போக்கு எழுத்தாளர்களில் சிலர் பிற்போக்கின் அடிவருடியாக மாறி சலாம் போட்டுக்கொண்டிருக்கும் சூழலில் சூரஜை வாசிக்க ஆரம்பித்துள்ளேன். அரசியல் கூர்மையுடனான இவரின் உரையாடல்களை யூடியூப் சேனலில் கண்டு மெய்சிலிர்த்திருக்கிறேன். இப்படியான வலிய குரல்; கூரிய பார்வை, நெஞ்சுறுதி சமகால இளைஞர்களிடம் என்னளவில் கண்டதில்லை. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் முதல் தலித் அறிஞரான சூரஜ்ஜை வாசிப்பதில் பெருமை கொள்கிறேன். இந்த நூலினை வாங்கி வந்து கொடுத்த அன்புத் தம்பி ரவிக்கு நன்றி என்கிற ஒற்றைச் சொல் மட்டுமல்ல ; ஓராயிரம் முத்தங்கள்!
Thursday, February 17, 2022
குசுவொலி
சுமார் காலை ஐந்தரை மணியளவில் நடைப் பயிற்சிக்குத் தயாரானேன். புதிய டயரி பாதி விலையில் கிடைக்கும் என்பதை ஒவ்வொரு மாலையிலும் சிங்கப்பூர் ஷாப்பிங்கில் ஒலித்தது ஞாபகம் வர 75 ரூபாய்க்கு நேற்று ஒரு டயரி வாங்கினேன். அந்த டயரியை எடுத்துக்கொண்டு தண்டீஸ்வரம் சாலையில் நடந்துகொண்டிருந்தேன். மலிவான விலையில் வாங்கிய ஷாட்ர்ஸின் இடதுப் பக்க பாக்கெட் ஓட்டை என்பதால் வீட்டுச் சாவியை பஸ் பாஸ் வைத்திருக்கும் வலது பாக்கெட்டில் எறிந்தேன். பாரதி பூங்காவின் அருகில் சாலையைக் கடக்கும் போது V51 பேருந்துப் பலகைக் கண்ணில் பட கைக்காட்டி ஏறினேன். இரண்டு பேர் மட்டும் இருந்த அப்பேருந்து மூன்றாவதாக என்னைச் சுமந்து நகர்ந்தது.
Wednesday, February 16, 2022
`தானாய் மலரும் காலம்'
வெகு நாளாகவிட்டது நடைப் பயிற்சிக்குச் சென்று. வேளச்சேரியின் பிரதான சாலைகள், குறுக்குச் சந்துகள் எனக் கவிஞர் ஷங்கர் ராமசுப்ரமணியனுடன் சேர்ந்து நடந்ததுண்டு. குறிப்பாக வேளச்சேரி ரயில்நிலையத்தில் அதிகமான நாட்களைச் செலவிட்டிருக்கிறோம். எனக்கும் ஷங்கருக்குமான உறவு ஆரம்பத்தில் பிடிப்பற்றதாகத்தான் இருந்தது. அவரைச் சந்திக்கும் சமயமெல்லாம் சின்ன சீண்டல் இருந்துகொண்டே இருக்கும். அவை மேலும் அவரிடமிருந்து விலகல்தன்மையையே கொடுத்தன. பீஃப் கவிதைகளுக்குப் பிறகு இருவருக்கும் நல்ல இணக்கம் ஏற்பட்டது. அடிக்கடி போனிலும் நேரிலும் சந்தித்துப் பேசுவோம். குறிப்பாக விகடனில் வேலை இழந்த துயர் மிகு காலத்தில் என்னைப் பத்திரப்படுத்தினார். பொருளாதார ரீதியாக, வேலை வாய்ப்பு ரீதியாக, வாசிப்பு சார்ந்து புத்தகங்கள் அள்ளிக்கொடுப்பது எனப் பேரன்பைக் காட்டினார். நீண்ட காலமாக வாசிக்க வேண்டும் என்கிற ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலை முதல் ஊரடங்கின் போது கேட்டேன். உடனே தன் வீட்டு நூலகத்தில் இருந்து எடுத்துக் கொடுத்தார். இப்படி சில முக்கியமான நூல்களைக் கேட்டதும் கொடுத்துவிடும் மனம் ஷங்கருக்கு.
வேலையற்ற நாட்களில் எனக்கு எதுவும் ஆகிவிடுமோ எனக் கண்காணித்துக்கொண்டே இருப்பார். குரலில் தொய்வு அல்லது உடைசல் தெரிந்தால் உடனே வண்டி எடுத்துக்கொண்டு என் வீட்டுக்கு வந்துவிடுவார். பாவனை, பாசாங்கு இரண்டுமற்ற ஷங்கர் தன் அறிவை, ஆளுமையைப் பிறர் மீது திணிக்காதவர். செல்மாவுக்குப் பிறகு இப்படியான கட்டற்ற அன்பை என்மீது செலுத்தியவர் ஷங்கர் ஒருவராகத்தான் இருப்பார்.
Tuesday, February 15, 2022
நரையைப் பகிர்கிறேன்
சமீபத்தில் ஓர் இலக்கிய நிகழ்வில் கலந்திருந்தேன். அங்கு எடுத்த போட்டோ ஒன்றை நண்பர் முகிலன் அனுப்பியிருந்தார். மிகுந்த ஆர்வத்துடன் பதிவிறக்கம் செய்து பார்த்தேன். திடுக்கிடலுடன் ஏமாற்றமே எஞ்சியது. இதற்கு முன் எடுத்த நிழற்படங்களைவிட இதில் நரை கூடியிருந்தது. சற்று சுருங்கி வறண்ட தோல் வயோதிகத்தன்மையைக் காட்டியது போல் இருந்தது. ஒருவகையில் கொஞ்சம் ஸ்டைலாகவும் இருந்தது. சிறுவயதில் வாயைத் திறந்தமேனிக்கு இருக்கும் போதெல்லாம் ``டே திறந்த வாயா'' என்று சிவகாமி டீச்சர் கிண்டல் செய்வார். அவ்வாறான தன்மையுடன் இல்லையென்றாலும் துருத்துவதற்கு
பேச்சுக்குரலில் நவீனப் பட்டினப்பாலை `கபால நகரம்’ பச்சோந்தியின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பென்று நினைக்கிறேன். அவருடைய முதல் தொகுப்பு, ‘வே...
-
Pinterest நேற்று மாலை அலுவலகம் முடிந்ததும் நண்பர் செந்தில்குமாரைச் சந்திக்கச் சென்றேன். இவர் திருவல்லிக்கேணியில் உள்ள பைகிராஃப்ட் சாலை நடைமே...
-
பேச்சுக்குரலில் நவீனப் பட்டினப்பாலை `கபால நகரம்’ பச்சோந்தியின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பென்று நினைக்கிறேன். அவருடைய முதல் தொகுப்பு, ‘வே...
-
என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...