Saturday, January 18, 2025

 

பேச்சுக்குரலில் நவீனப் பட்டினப்பாலை

 


`கபால நகரம்’ பச்சோந்தியின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பென்று நினைக்கிறேன். அவருடைய முதல் தொகுப்பு, ‘வேர் முளைத்த உலக்கை’க்கும், `அம்பட்டன் கலயம்’ தொகுப்புக்கும் முன்னுரை எழுதியிருக்கிறேன். கடந்த ஏழு எட்டு ஆண்டுகளில் கவிஞர் பச்சோந்தி வலுவான பல அடிகளைத் தமிழ்க் கவிதையுலகில் தடங்களாய்ப் பதித்திருக்கிறார். உள்ளிருந்து ஒலிக்கும் குரல் அவருடையது என்பதால், சமூகப் பிரச்சனைகளைப் பேசும் சர்ச்சைக்குரிய கவிதைகளாய்ப் பலவற்றை அவர் எழுதிப் பார்த்திருக்கிறார். வெறும் அனுபவம் சார்ந்த வெளிப்பாடுகள், அழகியலின் நுட்பங்கள், அரசியல் குரல்கள், சொந்த வாழ்வின் சோகங்கள், தத்துவச் சாயல்கள் எனப் பல முகங்களுடையது நவீனத் தமிழ்க் கவிதை. இதில் அமுக்கப்பட்ட மனிதர்களின் கருத்தியல் குரலாய் வெளிப்படுவதைத் தம் கவிதைகளின் அடிநாதமாய்ப் பச்சோந்தி பேணிவந்துள்ளார்.

இத்தொகுப்பில், உரைநடையையே கவிதையாக வளைக்கும் முயற்சியில் பச்சோந்தி இறங்கியிருப்பதாகத் தோன்றுகிறது. க.நா.சு செய்து பார்த்த ஒரு பரிசோதனை முயற்சிதான் இது. சொற்களுக்காகத் தவங்கிடந்து கொண்டிருக்காமல், மனதில் தோன்றுவதைக் கூடுமானவரையில் சாதாரணமான சொற்களிலேயே எழுதிப் பார்க்கும் தம் முயற்சியில் பெருமளவுக்குப் பச்சோந்தி வெற்றி பெற்றிருப்பதாகவே அவதானிக்க முடிகிறது. பார்ப்பதை, கேட்பதை, நினைப்பதை, உணர்வதை அந்தந்தத் தருணங்களிலேயே பதிவு செய்துவிட ஒரு கவி மனம் அவாவும்போது, அன்றாட நடைமுறை சார்ந்த பேச்சுமொழியாகக் கவிமொழி பரிணமிப்பதில் வியப்பில்லைதானே.

ஒரே ஓர் உதாரணம் மட்டும் காட்டலாம். ‘மண்டையோட்டை முகக் கவசமாக்கியவனைக் கோயம்பேட்டில் கண்டேன். ஓட்டின் தலைப்பகுதியில் வெட்டுத் தழும்பு. தண்டவாளத்தின் அடியில் கிடைத்ததாம். ஒன்றை எடுக்கும் கணத்தில் ஊற்றாய் மண்டையோடுகள் பெருகப் பெருக, மிரண்டு ஓடிவந்துவிட்டானாம். ஓர் தாய் தண்டவாளத்தில் குப்புறக்கிடந்த அரும்பு மீசையின் பாதத்தைக் கன்னத்தில் அழுத்தி அழுகிறாள். சிதறிய ரத்தத்துளிகளில் எண்ணற்ற ரயில்கள் தடதடத்தன’ என்றெழுதுகிறார். புனைகதையில் வருவது போன்றே, கவிதையிலும்கூடத் தயக்கமின்றி இவ்வரிகள் இடம்பெறுகின்றன. கவித்துவம் என்பதைச் சொற்களிலும் மொழியிலும் மட்டுமே காண்பது பழைய வாசிப்பு முறை. கவித்துவத்தைக் கவிஞரின் பார்வையிலும் ஒத்துணர்விலும் காண்பதுதான் நவீன வாசிப்பு. இதற்கு அணிசெய்திருக்கிறார் பச்சோந்தி.

சென்னைப் பெருநகரின் சாலைகளிலும் தெருக்களிலும் ரயில்வே ஸ்டேஷன்களிலும் பேருந்து நிறுத்தங்களிலும் நடைபெறும் பல்வேறு விசித்திரக் காட்சிகளைப் பச்சோந்தியின் கண்கள் விடாமல் படம்பிடித்துக்கொண்டேயிருக்கின்றன. ஓர் அநாதரவான மனோநிலையும் வெட்டவெளியின் உணர்வோட்டமும் இக்கவிதைகளில் அலையலையாய்ச் சிதறியபடியேயுள்ளன. மனித நாகரீகம் எவ்வளவு குரூரமானது, மனிதர்கள் எவ்வளவு கேவலமானவர்கள் என்பதையெல்லாம் தாண்டி, மனித இருப்பு எவ்வளவு அவலமானது என்ற புள்ளியில்தான் குவிந்திருக்கிறது கவிஞரின் மனம்.

‘விளக்குகள் எரியா சிக்னலில், கேள்விக்குறியைக் கைத்தடியாக்கிய பெரியார் சிலை, பறவையின் காய்ந்த எச்சத்துடன், முற்றும் தூசி படிந்துள்ளது’ எனக் காலத்தின் உறைவை நம்பிக்கை வறட்சியுடன் சித்திரித்தாலும், ‘ஆரவாரத்துடன் மண்டையோடுகளில் பறையிசைக்கிறது, மூலக்கொத்தளம் சுடுகாட்டுக்குள் நுழையும் தங்கரதம்’ எனச் சாவுக்குப் பின்னும் உருத்திரளும் எதிர்ப்புணர்வைப் பாடுவதிலும் பச்சோந்தி துடிப்புடன்தானிருக்கிறார்.

மெல்லத் தன் தோலை உரித்துப் பறையடித்தாடும் ராமனையும் சீதையையும் பச்சோந்தியின் கவிதைகளில்தாம் நீங்கள் பார்க்க முடியும். ‘பிரியும் இரு தண்டவாளங்களுக்கு நடுவே பாழடைந்த மைதானத்தில் இளைப்பாறும் காற்பந்தைப் பன்றிகள் புதருக்குள் எத்திச் செல்கின்றன’ என்கிறார்.

 ‘பாழடைந்த கட்டடத்தின் உடைந்த கண்ணாடியில் ஒளிர்கிறது சூரியன்’ என்கிறார். ‘இது காலணியல்ல, நம் இனத்தின் கடைசிக் கால்கள்’ என்கிறார். ‘ஆலம் விழுதுகள் தூண்களாகிப் போன வீட்டினைப் பார்த்து’ என்கிறார். இங்கே வாழ்வது என்பதை விடவும் கொடுமையானது வேறில்லை என்ற மனநிலைக்கு அருகில் சென்றுவிட்டார் பச்சோந்தி. பைத்தியம் பிடிக்காமல் இங்கு மனிதர்கள், சகஜபாவத்துடன் எப்படித்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்களோ! புத்தி பேதலித்த சொற்களையே கவிஞன் இங்குச் சிதறடித்துக்கொண்டிருக்கிறான். சொற்களெல்லாம் வலிமையிழக்கும் ஒரு காலத்தில் கவிஞன் ஏதிலியாகிறான். இன்னுமின்னும் எத்தனை காலத்துக்குக் கவிதை மட்டுமே எழுதுவது என்று அவனைத் துரத்தித் துரத்தி விடாமல் கேட்டுப் பிளிறுகிறது அவன் மூளை. வாழாமையே வாழ்வாகும் கொடுமைக்குக் கவிதையே சாட்சியாய்ப் பச்சோந்தி எதிர்நீச்சலிடுகிறார்.

 சென்னை - வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை என்று மூன்றாகப் பிரிந்து கிடக்கிறது. இத்தொகுப்பில் சென்னையின் உழைக்கும் மக்கள் பற்றிய பதிவை - அவர்களின் எல்லாமும் பிடுங்கப்பட்டு வெறும் மனித இயந்திரங்களாக அவர்கள் சுருக்கப்பட்டுச் சுரண்டப்படுவதன் அவலத்தைச் சித்திரித்திருக்கிறார். இந்த நகரின் பூர்வீகக் குடிமக்கள் - எப்படி அதிகாரக் குறுக்கீடுகளாலும் லாபம் மட்டுமே ஒரே குறியாகக்கொண்ட பெருவணிகத்தாலும் நுகர்வுக் கலாச்சாரத்தாலும் உள்ளீடற்ற வார்த்தைப் பந்தல்களாலும் துண்டாடப்பட்டுச் சிதைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற வரலாற்றை ஒரு கவிஞனின் சமூகப் பிரக்ஞையோடு பதிவுசெய்திருக்கிறார். தர்மமிகு சென்னையாக வள்ளலாரால் பாராட்டப்பட்ட அதே மாநகரம், இப்போது அதன் அப்பாவி மக்களை வெளித்தள்ளுவதில் எப்படி முன்நிற்கிறது என்ற வஞ்சனையின் வலைப்பின்னலை அம்பலப்படுத்துவதில், ஒரு நவீனப் பட்டினப்பாலையையே பாடிவிடுகிறார் பச்சோந்தி என்று சொல்லலாம். ஆம். நிலம் என்பதும் வீடு என்பதும் வாழ்வின் இருப்பை நிச்சயப்படுத்துவதற்குப் பதிலாகப் போராட்டச் சிதிலங்களாக மேன்மேலும் மக்களை நிலைகுலையச் செய்யும் பட்டினப்பாலைதான் பச்சோந்தியின் சென்னை.

 நவீனக் கவிதையில் பச்சோந்தியின் இடம் எது? மக்கள்சார்புக் கருத்தியலைப் பேசுவதையே கடமையாக ஏற்றுச் செயல்படும் பச்சோந்தி, நமது பண்பாட்டு மரபுகளுக்குப் பின்னாலுள்ள மேலாதிக்கத்தையும் அன்றாட வாழ்வில் புரையோடிப் போயுள்ள அமனித உணர்வுத் திரிபுகளையும் வெளிக்கொண்டு வரும் அழுத்தக் குழுவின் வேலையைத் தனியாளாய்ச் செய்கிறார். மக்களே போல்வராய்க் கயவர் உலவும் நிலப்பரப்புகளில் கவிஞன், மலர்வண்டியா ஓட்டிக்கொண்டிருக்க முடியும்! உள்ளத்திற்குள் இடையறாது ஒழுகும் குருதியைச் சிந்தையில் உணர்ந்தபடி, நடைப்பிணங்களுக்கிடையில் ஊர்ந்து ஊர்ந்து மூச்சையாவது இழுத்திழுத்து விடவேண்டியதுதான்! மண்ணின் அந்த முதல் நாளுக்குப் போக முடியாதபோதும் இந்த நாளைச் சகித்திருப்பது எப்படியென்ற கேள்வியில்தான் ஒட்டிக்கொண்டிருக்கிறது கவிஞனின் உயிர். ‘நாளை நமதே’ என்ற குரலைக் கவிதையிலாவது அவன் எழுப்பித்தான் தீர வேண்டியிருக்கிறது. அவனுடைய கவிதைகளைக்கூடப் படிக்காத அவனுடைய மக்களுக்காகவும் பொதுவெளியில் வந்து அவன் சற்றே கூக்குரலிடத்தான் வேண்டியிருக்கிறது. இக்கூக்குரலைச் சலிப்பின்றித் தொடர்ந்து எழுப்புவதில்தான் பச்சோந்தியின் இடமிருக்கிறது. அந்தவகையில் பேச்சிழந்தவர்களின் பேச்சுக் குரலே பச்சோந்தி!

 

கல்யாணராமன்

26.11.2022

 

 

Saturday, January 6, 2024



என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப் கவிதைகளுக்குப் பின். 

இரண்டாயிரம் ஆண்டு தொன்மைவாய்ந்த கவிமொழியின் மரபில் வந்த நாம் கவிதையெல்லாம் யாருங்க படிக்கிறாங்க, கவிதைத் தொகுப்பெல்லாம் யாருங்க வாங்குகிறாங்க என்று பதிப்பகங்களே சலிப்புற்றுப் பேசும் சூழலில்தான் பீஃப் கவிதைகள் வெளிவந்து கொண்டாடப்பட்டது. 2020 ஆம் ஆண்டு புத்தகச் சந்தையில் அதிகம் விற்பனையான 10 புத்தகங்களில் ஒன்றாக பீஃப் கவிதைகளை `தி இந்து தமிழ் திசை’ நாளேடு அறிவித்திருந்தது. எங்கு சென்றாலும் என் முகம் தெரிகிறதோ இல்லையோ பீஃப் கவிதைகள் என்றால் கல்லூரி மாணவர்கள்கூட அறியும் அளவிற்குச் சென்றடைந்திருக்கிறது. அதே நேரத்தில் இதன்மூலம் உண்டான அடையாளம் பணிச் சூழலிலும் தனிப்பட்ட வாழ்விலும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக இப்பனுவலை ஓர் தொடர்வண்டிப் பயணத்தில் விடிய விடிய வாசித்த திருமுருகன் மாமா அதிகாலையில் இதை நம் ஊருக்குள் யாரிடமும் படிக்கக் கொடுத்துவிடாதே என்றார். இதை ஒருவகையில் வரவேற்கிறேன். ஏனென்றால் வெறுமனே அழகியலையும் பெருமிதத்தையும் மட்டுமே முன்னிறுத்தாமல் நமக்குள் இருக்கும் கசடுகளையும் சுயமதிப்பீட்டுடன் அணுகவேண்டும் என்பதை முக்கியம் என்று கருதுகிறேன். 

கொரோனா காலகட்டத்தில் உலகம் முழுவதுமுள்ள பல பெருநிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களை எந்தவிதக் குற்றவுணர்வுமின்றிக் கூண்டோடு பணிநீக்கம் செய்தன. நோய்த் தொற்றில் கொத்துக் கொத்தாக இறந்துகொண்டிருந்த சமயத்தில் உயிரோடு இருந்தாலே போதும் என்பதே அதிகப்பட்ச வேண்டுதலாக இருந்தது. இச்சூழலில்தான் ஆனந்த விகடன் 170 தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்தது மிகப் பெரிய பேசு பொருளானது.

'எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறு ஒன்று அறியேன் பராபரமே! என்னும் தாயுமானவர் பாடலைத் தன் இலச்சினையில் பொருத்தியுள்ள ஆனந்த விகடன் எந்தவிதப் பாகுபாடுமின்றி 170 பேரைத் தெருவில் முகக் கவசத்துடன் நிற்கவைத்தது. விசுவாசமானவர்கள் - விசுவாசமற்றவர்கள், அனுபவமிக்கவர்கள் - புதிதாய் வேலைக்குச் சேர்ந்தவர்கள், வயதானவர்கள் - இளைஞர்கள், ஒத்த அரசியல் உடையோர் - எதிர் அரசியல் பேசுபவர் எனப் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் பல ரகம். பணிநீக்கம் செய்யப்பட்டதைக் காட்டிலும் அதற்காக விகடன் மேற்கொண்ட முயற்சிகளும் நடந்துகொண்ட விதமும்தான் மிகவும் அருவருப்பூட்டின. நிறுவனம் நினைத்தபடி அனைவரையும் தன் வழிக்கு இணங்கவைத்தது; ஒற்றை ஆளைத் தவிர. அந்த ஒற்றை ஆள் நிறுவனத்திற்கு எதிராக நின்று போராடினான். இறுதியில் வெற்றியும் பெற்றான். இவ்வெற்றியில் அரண்செய் ஆசிரியரும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர் சங்கத்தை ஏற்படுத்தியவருமான தோழர் ஹசீப்க்கு மிக முக்கியப் பங்குண்டு. 

170 பேரை பணிநீக்கம் செய்த விகடனுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காதவர்கள், எதிர்த்துப் போராடிய என்னை மிகவும் ஆபத்தானவனாகச் சித்தரிப்பது கேலிக்குரியதாகவே இருக்கிறது. யாருடனும் சகஜமாகப் பேசமுடியவில்லை. எங்கும் வேலை பெற முடியவில்லை. மிகவும் நேசித்தவர்கள்கூடப் பேசுவதற்கும் சந்திப்பதற்கும் தயங்குகிறார்கள் என எண்ணத் தோன்றுகிறது. அரண்செய், நீலம் பணி ஆறுதலாக இருந்தது. விகடனை எதிர்த்து நான் பெற்ற வெற்றி நீலத்தையும் அசைத்துப் பார்த்துவிட்டது போல் உணர்ந்தேன்.

ஒருமுறை எழுத்தாளர் தமிழ்ப் பிரபாவுடன் சகஜமாகப் பேசிக்கொண்டிருக்கையில் நீங்கதான் ஆஊன்னா கேஸ் போடுற ஆளாச்சே என்று சொன்னது மன உளைச்சலைத் தந்தது. இந்தப் புரிதல் நீலத்திலும் நீடிப்பது கடினம் என்பதையும் அறிவுறுத்தியது. சின்னச் சின்ன புரிதலற்ற தன்மையால் நீலமும் என்னைப் பணிநீக்கம் செய்தது. இது விகடன் பணிநீக்கத்தைவிட மிகுந்த மனவேதனையைக் கொடுத்தது. `நீலத்திலேயே வேலை செய்யாதவன் இனி எங்கு போய் வேலை செய்வான்' என்று பிறர் நினைக்கக் கூடுமே. இது எதிர்காலத்தை மிகவும் கேள்விக்குறியாக்கிவிடுமே என்று எண்ணிக் கொஞ்சம் இலகுவாகப் பேச முயன்றேன். இறுதியாக வாசுகி பாஸ்கர் ``நீங்கள் என்னதான் மன்றாடினாலும் எங்கள் முடிவை மாற்றிக் கொள்ளப்போவதில்லை. ஏதாவது பேசி எங்களின் நேரத்தை வீணாக்காதீர்'' என்றார். இனிப் பேசிப் பலனில்லை என்பதை அறிந்து அங்கிருந்து விடைபெற்றேன். 

பணிநீக்கம் செய்யப்பட்டு 8 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. தொடர்ந்து வேலை தேடிக்கொண்டிருக்கிறேன். இந்நிலையில் பிள்ளைகளைப் பள்ளியில் விடுவதும் மீண்டும் மாலையில் வீட்டிற்கு அழைத்து வருவதும் முதன்மையான பணியாகிவிட்டது. வீட்டிலேயே தங்காதவன் தினமும் வீட்டில் இருப்பது எவ்வளவு அவஸ்தையானது. அப்போது டைபாய்டு காய்ச்சலால் உடல் இளைத்தேன். மீண்டு வந்தேன். 

ஒருமுறை நண்பர் சீனுவிடம் பிள்ளைகளுடன் ஏற்பட்ட ஓர் அனுபவத்தைப் பகிர்ந்தேன். அவர் மிகவும் துயருற்றார். இக்காலத்தை ஏன் எழுதக் கூடாது என்று தோன்றியது. அவ்வாறு எழுதிக்கொண்டிருக்கையில் கஜேந்திரன் ஐயாவிடம் ஓர் உரையாடலினூடே பணிநீக்கம் செய்யப்பட்டவனின் நாட்குறிப்புகள், பணிநீக்கக் காலச் சித்திரங்கள் ஆகிய விசயங்களைப் பகிர்ந்தேன். பணிநீக்கம் செய்யப்பட்டவனின் நாட்குறிப்புகள் மிகவும் புதிய பாடுபொருளாக இருக்கிறது. உலகில் இப்படியான விசயத்திற்கு நீங்கள்தான் கரு கொடுத்து உரு கொடுக்கிறீர்கள் என்ற போது இதன் முக்கியத்துவத்தைத் தீவிரமாய் உணர்ந்தேன். ஏற்கெனவே எழுதிக்கொண்டிருந்த நாவல், புதிதாய் எழுதிக்கொண்டிருந்த சிறுகதைகள் அனைத்தையும் விட்டுவிட்டு இதில் கவனம் செலுத்தத் தொடங்கினேன். 

ஆறு ஆண்டுகளாய்ப் பணிநிமித்தமாக மகளைப் பிரிந்து வாழ்ந்த போது அவளுக்கு எழுதியதுதான் என் முதல் உரைநடை. அது `ஓர் விடுமுறைக்காய்க் காத்திருப்போம் மகளே' என்னும் தலைப்பில் இந்நூலில் இடம்பெற்றுள்ளது. பிறகு, விகடன் தடம் இதழுக்கு `நான் ஏன் எழுதுகிறேன்' என்னும் பகுதிக்குக் கவிஞர் வெய்யில் வற்புறுத்திக் கேட்க எழுதியது. பிறகு, பீஃப் கவிதைகளுக்கு முன்னுரை எழுதியது. இதையும் வெய்யிலின் வற்புறுத்தலின் பேரில்தான் எழுதினேன். என் எழுத்தின் மீது அவருக்குச் சந்தேகம் இருந்தது. இவன் தெரிந்து எழுதுகிறானா இல்லை குருட்டாம் போக்கில் எழுதுகிறானா என்னும் சந்தேகம் வெய்யிலுக்கு இருந்தது. அச்சந்தேகம் `நான் ஏன் எழுதுகிறேன்', பீஃப் கவிதைகள் முன்னுரை மூலம் தெளிவானது. 

கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியன் முதல் சந்திப்பின் போதே எழுத்தாளர் சுந்தரராமசாமியின் மேற்கோளுடன் உரைநடையின் முக்கியத்துவத்தை உணர்த்தினார். எப்போதும் போல் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் விட்டுவிட்டேன். பிறகு, ஷங்கரின் தொடர் வற்புறுத்தலால் ஏதாவது எழுதுவோம் என்று வலைத்தளம் தொடங்கி அதில் எழுதி வந்தேன். அவருக்கு அனுப்பினால் உடனடியாக வாசித்துவிட்டுக் கருத்துக் கூறுவார். இப்படி வெய்யில், ஷங்கர்ராமசுப்ரமணியன் இருவரால்தான் உரைநடையின் பக்கம் கவனம் செலுத்தினேன். 

பணிநீக்கக் காலத்தில் ஷங்கர் மிகவும் உறுதுணையாக இருந்தார். எப்படியாவது என்னை கரை சேர்க்கப் போராடினார் என் அப்பனைப் போல். இறுதியில் சிங்கப்பூர் அனுப்பவும் ஏற்பாடு செய்தார். ஆனால், அவரின் செயல்களுக்கு நான் உறுதுணையாக இருக்கவில்லை. பிறகு, என்னால் உங்களின் கண்ணீரைத் தொடர்ந்து வேடிக்கை பார்க்க முடியாது என்று விடைபெற்றார். ஷங்கரைப் போல் இக்காலத்தில் மிகவும் உறுதுணையாக இருந்தவர் எழுத்தாளரும் எங்கள் கல்லூரி பேராசிரியருமான பிரவீண் பஃறுளி. பொருளாதார தடுமாற்றத்திற்குத் தன்னால் இயன்ற அளவு பங்களித்தார்.

பலரும் கொஞ்சம் கொஞ்சமாக விலகிக்கொண்டிருந்த சமயத்தில் நூல்கள், திரைப்படம் சார்ந்த விசயங்களுக்குத் தக்க ஆலோசனைகள் வழங்கி ஆரத்தழுவும் கவிஞர் வே.நி.சூர்யாவுக்கு நன்றி. தன் பணிகளுக்கு நடுவே இத்தொகுப்பை வாசித்துப் பின்னட்டைக் குறிப்பு எழுதிக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் சில தர்க்கரீதியான கேள்விகளையும் செம்மையாக்கம் செய்யவேண்டிய அவசியத்தையும் உணர்த்திய எழுத்தாளர் பாலசுப்ரமணியன் பொன்ராஜுக்கு நன்றி. அட்டை ஓவியம் வரைந்த பிரேம் டாவின்ஸி, நூலை வடிவமைப்பு செய்த சந்தோஷ் கொளஞ்சி, ஓவியர் கோபு, நிழற்படக் கலைஞர் பாலாஜி கங்காதரன் ஆகியோருக்கு நன்றி. இக்கொடிய காலத்தில் துயரங்களைப் பகிர்ந்து வாழும் மனைவி சுகன்யா, பிள்ளைகள் யாழிசை, மீகாமன் ஆகியோருக்கும் நன்றி. 

மீண்டும் என்னை எழுதத் தூண்டியவர்களில் எழுத்தாளர் ஜீவகரிகாலனுக்கு மிக முக்கியப் பங்குண்டு. இந்நூலை வெளியிடும் யாவரும் பதிப்பகத்திற்கும் ஜீவகரிகாலனுக்கும் நன்றி. 

ஈரத்துடன் பச்சோந்தி

Thursday, December 8, 2022

ஆடுதொட்டி: மாமிச நிலத்தின் வரைபடங்கள்


சீமை ஓடுகள் வேய்ந்த கூரையின் கிழக்குப் பகுதியின் ஓடுகள் முற்றிலும் உதிர்ந்துள்ளன. பாதி உடைந்த ரீப்பாக்கள் மட்டுமே இடிந்த சுவரின் மேல் இருக்க, ஆங்காங்கே உடைந்த ஓடுகளுக்குள் தெரியும் வானத்தின் வழியே எட்டிப் பார்க்கும் பறவையின் அலகுகள். மூங்கிலில் தலைகீழாய்த் தொங்கும் தோலுரிக்கப்பட்ட மாடுகள். சிமென்ட் தரை எங்கும் அலையடிக்கும் ரத்தச் சமுத்திரத்தை அள்ளும் ரப்பர் வாளிகள். ரத்தத்தில் பீறிடும் தரையில் துடிதுடிக்கும் மாட்டின் அறுந்த கழுத்து. ஈக்களின் ரீங்காரத்தில் அடுக்கப்பட்டிருக்கும் காதுகளும் நாக்குகளும் கூடவே நீலம் ஏறிய கண்களும். எஞ்சிய உறுப்புகள் சிதறிக் கிடக்கும் நடைபாதைக்கும் கிழக்கே அழுகிய மாட்டு எலும்புகளின் மீது அமர்ந்த பறவைகள் கண்களைக் கொத்தி உறிஞ்ச, பற்களும் கண்களும் ஒட்டிய தலை எலும்புகள் குண்டானில் அள்ளப்பட்டு கேன்டர் வண்டியில் ஏற்றப்படுகின்றன. இறைச்சி துண்டங்களுக்கு இடையே மனிதர்களும் மனிதர்களுக்கு இடையே இறைச்சி துண்டங்களுமாகக் காட்சி மாறி மாறி நகர்கிறது.

சென்னைப் புளியந்தோப்பிலுள்ள ஆடுதொட்டி 1903இல் அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கட்டப்பட்டது. மேற்கில் ஓட்டேரியும் வடமேற்கில் பெரம்பூரும் வடக்கே வியாசர்பாடியும் வடகிழக்கே பேசின் பாலமும் தெற்கே பட்டாளமும் சூழ இவற்றின் மையத்தில் அமைந்துள்ளது புளியந்தோப்பு. திரு.வி.க நகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இப்பகுதி நகரமாய், பெருநகரமாய் சென்னை உருவாவதற்கு முன்பே கிராமமாக இருந்தது. பெயருக்கேற்றவாறே புளிய மரங்கள் நிறைந்த பகுதி இன்னும் அதன் புராதனத்தன்மையை இழக்காது இருக்கிறது. கண்கூசும் விளக்குகள் எங்கும் இல்லை. இருளை விலக்கிக் காட்டும் கருஞ்சிவப்பு ஒளியே எங்கும் நிறைந்துள்ளது.

பிரிட்டிஷார் வருகைக்குப் பிறகு பின்னி மில், ஆடுதொட்டி போன்ற ஆலைகளும் தொழிற்சாலைகளும் இங்கு அமைந்தன. சென்னையின் பிற இடங்களுக்குச் செல்லும் பெரும்பான்மை இறைச்சி இங்கிருந்துதான் போகிறது.

இப்பகுதிக்குச் சென்றாலே மாட்டுக்கறி காற்றில் மிதந்து நாசியைத் துளைத்த வண்ணம் இருக்கும். அழுகிய எலும்புகள் குவிந்துகிடக்கும் பகுதிக்குச் சென்றால் மட்டும் குடலைப் பிடுங்கும் துர்நாற்றம் அடிக்கும். மாட்டின் காயாத இரத்தம், இறைச்சித் துண்டுகள், மாட்டு எலும்புகள், சேறும் சகதியுமான கழிவுகள் என அத்தனையும் தேங்கிப்படிந்துள்ளன. நடைபாதையின் மீதே மாட்டின் காது, நாக்கு, கொம்பு, கால்கள் என அங்குமிங்குமாகச் சிதறிக் காணப்படும். கால்வாயிலும் சாலையோரமெங்கும் எலும்புகள் கலந்த சதைச் சகதி குவிந்துகிடக்கும்.

இந்தக் குவியலுக்கு நடுவே உள்ள பகுதிகளிலும் ஆங்காங்கே கோணிப்பைகளை விரித்துக் கூறு கூறாய் மாட்டுக்கறி விற்கப்படுகிறது. அதன் முனையில் மீன்பாடி வண்டியிலிருந்து இறக்கப்படும் ஆட்டுத்தோல்கள் பதப்படுத்தப்பட்டுப் பாண்டிச்சேரிக்குக் கொண்டுசென்று அங்கிருந்து அயல்நாடுகளுக்கு ஆடை உற்பத்திக்காக ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஆடுதொட்டியில் அம்பேத்கர் சாலைக்கு மேற்கே சுமார் 50 ஏக்கர் அளவில் காலியாக உள்ள இடம் இன்னும் பூர்வ கிராமத்தின் எச்சத்தைச் சுமந்திருக்கிறது. பின்னி மில்லின் எதிரே அமைந்துள்ள இதன் நுழைவாயிலில் குழிநீரில் ஊறிய மாட்டுத் தோலைக் கவ்வி இழுத்துச் சென்றது நாய். கொட்டாமணக்குச் செடிகள் விரவிக்கிடக்கும் நிலமெங்கும் கண்ணுக்கு எட்டும் தூரமிருந்த பச்சையத்தைச் செம்மறி ஆடுகளும் வெள்ளாடுகளும் மேய்ந்த வண்ணம் இருந்தன.

மணலி அருகே உள்ள சின்னமாத்தூரைச் சேர்ந்த சிறுவன் மேய்ப்பர்களில் ஒருவன். அவனின் இடது கன்னம் தசையற்று இருந்தது. கீழ்ப்பாக்கம் மருத்துவமனைப் பிணவறையில் பணி செய்த அவனது தந்தை அளவுக்கு மீறி மது குடித்ததால் சிறுநீரகம் செயலிழந்து இறந்துள்ளார். அதன் பின் இவ்வேலைக்கு வர நேர்ந்ததாகச் சொன்னவனிடம் வருமானம் குறித்து கேட்டேன். உதட்டைப் பிதுக்கித் தெரியவில்லை என்றபடி ஆடுகளை வளைத்து வர ஓடினான். எல்லை மீறும் ஆடுகளுக்குக் கற்கள் நிரப்பிய வெற்றுத் தண்ணீர்ப் போத்தலைக் குலுக்கிச் சத்தமிட்டான்.

ஆடுதொட்டிக்கு எதிரே அமைந்திருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புச் சிதைந்து, உருக்குலைந்து போர்க்காலத்தில் எஞ்சிய பகுதிபோலத் தோற்றம் அளித்தது. முக்கால்வாசிக் குடும்பங்கள் காலி செய்யப்பட்டு மாற்று இடத்தில் குடியமர்த்தப்பட்டுள்ளன. மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு சிலர் இன்னும் அங்கு வசிக்கின்றனர். நாய் குரைக்கும் சத்தத்தை விரட்டிப் படியேற முயன்றபோது படிமுனைகள் உடைந்திருந்தன. சோடா பாட்டில் மூடிகளும் உடைந்தும் உடையாத மது போத்தல்களும் விரவிக் கிடந்தன.

அரசாங்கம் பல முறை காலி செய்யச் சொல்லியும் காலி செய்யாததால், தரைத் தளத்துப் படிகள் மட்டும் இடித்துத் தள்ளப்பட அவ்விடத்தில் குட்டியானை வண்டியை நிறுத்திக் கழற்றப்பட்ட கதவு, ஜன்னல்களுடன் ஒவ்வொரு பொருளாய் இறக்கிக்கொண்டிருந்தனர். மாட்டு எலும்புகள் கொட்டப்பட்ட அடுக்குமாடியின் ஓரம் அன்னை மரியாள் புழுதியைப் போர்த்தியிருந்தாள். புதைசாக்கடை செல்லும் கால்வாய் சீரமைப்புப் பணி சாலை வாகனங்களை நகர்த்தாமல் இயக்கிக்கொண்டிருந்தது. இடைவிடாது ஒலிக்கும் வாகனங்களின் ஒலிப்பான்கள் காதைப் பிளந்தன. தீபாவளி பண்டிகையை அறிவுறுத்தும் பட்டாசு மட்டும் அங்கு வெடிக்கப்படவே இல்லை.

ஆடுதொட்டிக்குத் தெற்கே உள்ளது டிக்காஸ்டர் சாலை. இங்கு கூண்டில் அடைக்கப்படாத அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. 14.09.1997 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி அளவில் சிலையைத் திறந்து வைத்துச் சிறப்புரை ஆற்றியுள்ளார் வாழப்பாடியார். கூண்டற்ற அம்பேத்கர் சிலைகளைப் புளியந்தோப்புத் தெருக்களின் பல இடங்களில் காணலாம்.

தேங்கிய குண்டானில் ஒட்டியிருந்த மாட்டுச் சாணத்தை சாலையில் தேங்கிய மழைநீரில் அலசிக் கழுவியவனின் மேல் சேற்றை அள்ளி வீசிச் செல்கிறது வாகனம். ஆடுதொட்டி வாசலின் இடதுபுறமிருக்கும் ‘கேஜிஎஃப் ஹரிஃபா பிரியாணி சென்டர்’  மிகவும் பிரபலமான அதிகாலை பிரியாணி கடை. விடிவதற்கு முன்பு 3 மணிக்கே சுடச் சுட பிரியாணி இங்கே கிடைக்கும்.

சென்னையில் சில இடங்களில் கடிப்பதற்குக் கடினமான கறித்துண்டுகள் இருக்கும். ஆனால், ஹரிஃபா கடை பிரியாணியில் கறித்துண்டுகள் மைசூர் பாகைப் போல் வாயில் வைத்ததும் மேல்கீழ் அன்னங்களின் அழுத்ததில் கரைந்து கரைசலாக மாறிவிடுகிறது. சில சமயம் அது அல்வா துண்டுபோலும் இருக்கும். டிக்காஸ்டர் சாலை ஏ1 பீஃப் ஸ்டாலில் தலைகீழாய்த் தொங்கும் மாடு கத்தியால் வகுந்தபடி இருந்தது. அதன் எதிரே அமைந்துள்ள இஃப்ரான் பிரியாணிக் கடையில் நல்லி எலும்புகள் எண்ணெயில் கொதித்து ஆவியை எழுப்பின.

2017இல் பெய்த கனமழையில் வெள்ளநீர் ஆடுதொட்டியில் உட்புகுந்து ஏராளமான ஆடுகள் செத்து மடிந்துள்ளன. கட்டிவைக்கக்கூட இடமின்றிச் சாணச் சகதியின் மீதே கால்நடைகள் நிற்கும் இங்கு இருசக்கர வாகனம், மீன்பாடி வண்டி, ஆட்டோ, குட்டியானை, லாரி போன்ற எண்ணற்ற வாகனங்களில் இறைச்சி ஏற்றிச் செல்லப்படுகிறது. புதிதாக வந்து செல்பவர்கள் மூக்கைப் பொத்தி முகம் சுளிக்கும் அளவுக்குக் கழிவுகள் தேங்கிக் கிடக்கின்றன.

2017ஆம் ஆண்டு ஆடுதொட்டியைப் பார்வையிட்ட சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் தாயகம் கவி, ஒரு மாதத்திற்கும் முன்பே இவ்விடத்தை இடிக்கச் சொல்லி வலியுறுத்தியும் இன்னும் ஏன் இடிக்கவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளார். நாம் இடிக்கவில்லை என்றால் கட்டடம் தானாக இடிந்து விழுந்து மாடுகளோடு மனிதர்களும் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுமென எச்சரித்தும் உள்ளார். ஓய்வெடுக்க இடமின்றித் தவிக்கிறோம் என அங்குள்ள தொழிலாளர்கள் தங்களின் மனக்குறையைத் தாயகம் கவியிடம் முறையிட்டுள்ளனர். அதற்குப் பதிலளித்தவர், ஏற்கெனவே இதற்கும் சேர்த்து நடவடிக்கை எடுக்கச் சொல்லியிருந்தேன். ஆனால், எதுவும் செய்யவில்லை என்பது இப்போதுதான் எனக்கே தெரிகிறது என்று அயர்ச்சியுற்றுப் பேசியுள்ளார். மேலும், இதுகுறித்து அப்போது ஊடகத்திற்குப் பேட்டியளித்த தாயகம் கவி “2009ஆம் ஆண்டு அண்ணன் தளபதியால் அடிக்கல் நாட்டப்பட்ட `நவீனமுறை ஆடுதொட்டி’ என்னும் திட்டமென்பது 2011ஆம் ஆண்டு முழுமை பெற்றது. பின்னர் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, திமுக ஆட்சியில் அண்ணன் தளபதி கொண்டு வந்தார் என்கிற ஒரே காரணத்திற்காக அத்திட்டத்தைக் கிடப்பில் போட்டுவிட்டது. அதற்குப் பிறகு மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதுகுறித்து நவீனமயமான ஆடுதொட்டியைத் திறந்துவிட வேண்டுமென்று சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளேன். அதைத் தொடர்ந்து பல்வேறு சமயங்களில் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு இங்கு நிலவிவரும் சுகாதாரச் சீர்கேட்டைக் கலைய வேண்டுமென்று பலமுறை கேட்டும்கூட இந்த அதிமுக ஆட்சித் தன் காதில் போட்டுக்கொள்ளாமல் இங்கு பணிபுரியும் ஒட்டுமொத்தத் தொழிலாளர்களின் வாழ்வையும் சிதைத்துக்கொண்டிருக்கிறது. என்னுடைய தொகுதி மேம்பாட்டிற்காக ஐம்பது இலட்ச ரூபாய் ஒதுக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால், நான் கொடுக்கும் தொகையை ஏற்றுக்கொண்டு இந்த விசயத்தையெல்லாம் சரிசெய்வதற்கு மாநகராட்சி கைக்கொடுக்குமா என்பதுதான் தெரியவில்லை’’ என்று கூறியுள்ளார். 

தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய ஆட்டுச் சந்தையான ஆடுதொட்டியிலிருந்துதான் பல்வேறு இடங்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. நாம் விவசாயத்தைக் கைவிட்டதனால் தமிழ்நாட்டுக்கு உள்ளிருந்து 25 சதவீதம் ஆடுகளும் மகாராஷ்டிரா, குஜராத், அசாம், பஞ்சாப், கர்நாடகா, ஆந்திரா போன்ற பிற மாநிலங்களிலிருந்து 75 சதவீதம் ஆடுகளும் இறக்குமதி செய்யப்படுகின்றன.

இவை யாவும் பருவகாலத்திற்குத் தக்கதான வரத்தாக இருந்தாலும் ஜோத்பூர், ராஜஸ்தான் ஆகிய இடங்களில் இருந்து எப்பொழுதும் வந்த வண்ணமிருக்கும். “தமிழ்நாட்டு ஆடுகளுக்கு வெறுமனே புல்தான் தின்னக் கொடுப்போம். ஆனால், வடமாநிலங்களில் ஆடுகளுக்குச் சிறுதானியங்கள் கொடுப்பார்கள். இதனால் கறியின் சுவையும் மாறுபடும். மலைப் பகுதியில் வளரும் ஆடுகளை வாலாடுகள் என்று அழைப்பது உண்டு. ஆனால், அதை நாய்க் கறி என்று பொதுவில் விமர்சனம் எழுப்பியதால் பெரிய அளவில் எங்களின் வியாபாரம் பாதிக்கப்பட்டது’’ என்கிறார் ஆடுதொட்டி சங்கச் செயலாளரான ராஜ். இப்போதைய சந்தை நிலவரப்படி கிலோ 620 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆடுகளின் வரத்து அதிகமாகும்போது விலை குறையவும் வரத்து குறையும்போது விலை அதிகமாகவும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்.

ஆடுதொட்டியின் நுழைவாயிலின் இருபுறமும் ஆண்களும் பெண்களும் கடைவிரித்திருந்தனர். மென்பச்சைச் சட்டையுடன் கறுப்புக் குல்லா அணிந்த பாய் வெண்கோணியை விரித்து நெருப்பில் வாட்டிய ஆட்டுக் கால்களை நான்கு நான்காகக் கூறுபோட்டிருந்தார். வழக்கமான நாட்களில் ஒரு கூறு 230 ரூபாய்க்கு விற்கப்படும் என்றும் தீபாவளி அன்று கூறு 350 ரூபாய்க்கு விற்கப்படும் என்றும் தெரிவித்தார். தீபாவளிக்கு முந்தைய நாள் 450 ரூபாய்க்கு விற்றதைக் கடைக்காரரின் பேரன் கூறினான்.


புரட்டாசி மாதம் முடிந்த மறுநாள் என்பதால் கூட்டம் அலைமோதியது. ஆனால், ஆட்டுத் தலை வழக்கமான விலையான 130 ரூபாய்க்கே விற்கப்பட்டது. அருகில் மரப்பலகையில் விரிக்கப்பட்ட கோணியில் நீர்நிரப்பிய பலூனைப் போல் குடல் இருப்பதாகத் தோன்றியது. ஆனால், அதனுள் கோலிக்குண்டைப் போல் பத்துப் பதினைந்து உருண்டைகள் இருந்தன. அது என்னவென்று வினவியபோது, “இதுதான் கருவறை. இதனுள் இருப்பதெல்லாம் சினைமுட்டைகள். இதைத் தின்றால் முதுகுவலி சரியாகும்” என்றார் கடைக்காரர்.

குழந்தைகளின் கழுத்து நேராக நிற்கவில்லை என்றால் ஆட்டுத்தலையைத் தாய் தின்றால் நின்றுவிடும் என்றவரிடமிருந்து விடைபெற்று ஆடுதொட்டியின் நுழைவுப் பகுதியை நோக்கிச் செல்லத் தொடங்கியபோது சகதியில் கோணியை விரித்துக் குடல்களை விற்றுக்கொண்டிருந்தார் ஒரு பெண். மேலும் சில பெண்கள் வானவில் நிறக் குடைகளை விரித்துக் குடற்கூறுகளின் மேல் மொய்த்த ஈக்களைக் கைகளால் விரட்டிக்கொண்டிருந்தனர். சாலைக்கு வந்தபோது அவ்விடத்தைக்  கடப்பவர்கள் மூக்கைப் பொத்தியபடிச் சென்றனர்.

சுவரில் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் படங்கள் பொறித்த வண்ணச் சுவரொட்டிகளும் கறுப்பு நிறக் கண்ணீர் அஞ்சலிச் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. மாட்டுக்கொழுப்பைப் போல் மிதந்தூறும் கழிவுகளில் ஊன்றிக் கண்கள் தெளிவின்மையைத் தோற்றுவித்தன.

ஆடுதொட்டியின் கிழக்கு நுழைவாயிலின் மூலையில் வயிற்றுக் கன்று அறுக்கப்பட்டுக்கொண்டிருந்தது. கருமையான வெற்று மீன்பாடியும் கேன்டர் வண்டியும் நின்றுகொண்டிருக்க, கோணியில் கட்டி அடுக்கப்பட்டிருந்த எலும்புகளின் மீது காக்கைகள் கரைந்த வண்ணம் இருந்தன. சுவரையொட்டித் தொங்கிய கயிறுகளில் துணிகளைப் போல் தொங்கிக்கொண்டிருந்தன குடல்கள். தரையில் குவிந்திருந்த விலா எலும்புகளை அள்ளிக்கொண்டிருந்தவரின் கைக்குவியலிலிருந்து விறகுகளைப் போல் நழுவி விழுந்தன எலும்புகள். முதுகில் ‘N’ என்று எழுதப்பட்ட நான்கு மாடுகளைத் தாழியைப் போல் வயிற்றைத் தொங்கவிட்ட ஒருவர் பிடித்துச் சென்றார்.

காலணிகளற்ற கால்களுடன் அடர்பச்சைச் சராய் அணிந்திருந்த அவர் மாட்டின் நான்கு கழுத்துகளும் கோக்கப்பட்ட ஒற்றைக் கயிற்றைப் பிடித்திருந்தார். அந்நான்கு மாடுகளின் பின்பகுதியைத் தன் வலக்கைக் குச்சியால் அடித்தபடி இடக்கையில் முதுகில் ‘EB’ எனப் பொறிக்கப்பட்ட செவலை மாட்டை இழுத்துச் சென்றான் சிறுவன். தொட்டியின் கிழக்குப் பகுதியில் முற்றும் பூசப்படாத செங்கல் வீட்டின் இரண்டாவது மாடியின் சுவரோரம் ஆலமரம் கிளை பரப்பியிருந்தது.

தொட்டியின் பூட்டிய கழிப்பறை வாசலில் துண்டு துண்டாக நறுக்கப்பட்ட மாட்டுக்கறிகளை ஈக்கள் மொய்க்க, எதிர்த்திசையில் எண்ணிலிறந்த மாட்டின் கரும்பாதங்கள் அந்தரத்தில் தொங்கியபடி இருந்தன. கறுப்பு நிற மாமிசச் சகதியின் மேல் மஞ்சள் நிற வண்ணத்துப்பூச்சி சிறகடித்துப் பறந்தது.

பட்டாசுச் சத்தங்களுக்கும் பறவைகளின் கீச்சொலிகளுக்கும் நடுவே மாடுவெட்டும் இடத்திற்குள் நுழைந்தேன். மூங்கில் கழியில் எண்ண முடியாத அளவுக்கு மாடுகள் தலைகீழாய்த் தொங்கிக்கொண்டிருந்தன. இடையே தரையில் கிடத்திச் சங்கறுக்கப்பட்ட மாட்டின் கழுத்திலிருந்து பீறிட்ட இரத்தம் தரையெங்கும் தெறித்தது. ரத்தக் குழம்பில் விரிக்கப்பட்ட பச்சை மாட்டுத் தோலில் குடல்களும் கொம்புகளும் தலைகளுமாகக் குவிந்துகிடக்க, நரம்புப் புடைக்க உள்ளிருந்து அறுத்த மாட்டைத் தூக்கிவருபவர் தன் இரு சக்கர வாகனத்தின் முன்பக்கத்தில் திணித்தார். மற்றொருவர் உடல் அழுந்த தூக்கிவந்த மாட்டின் ஒரு பாதியை மீன்பாடி வண்டியில் எறிந்தார்.

அந்த இடத்தில் காத்திருந்த கணக்கற்ற வாகனங்களில் தங்களுக்கான இறைச்சியை ஏற்றிய வண்ணம் இருந்தனர். கீறல்விட்ட சுவரின் அருகே பாலித்தீனை விரித்துத் தோலுரிக்கப்பட்ட மாட்டின் தலைகள் நீலக் கண்களுடன் வானம் பார்க்கத் தலைகீழாய்க் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தன. வெகுநேரமாய்த் தெருவிளக்கின் மீது அசைவற்று இருந்த ஓர் ஒற்றைப் பறவை தனக்கான மாமிசத் துண்டைக் கவ்வி மேற்கூரை இடிந்து பாழடைந்த சுவரைத் தாண்டிக் கிழக்குத் திசையில் மறைந்தது. மேற்கூரையற்ற இடம் கழிவுநீரில் மிதந்துகொண்டிருந்தது.

தொட்டியின் கிழக்குத் திசையில் உடன் பிறந்த சகோதரிகளின் அருகருகே தனியே கடைவைத்திருந்தார் ஜானகி. தன் 12 வயதில் தொட்டியில் வியாபாரம் செய்யத் தொடங்கிய இவருக்குத் தற்போது 85 வயது. மாட்டின் குடல், ஈறல், நாக்கு ஆகியவற்றைக் காலின் கட்டைவிரல் இடுக்கில் கத்திபிடித்து அறுக்கும் பழக்கமுடையவர். இவ்வாறு காலிடுக்கில் கறியறுக்கும் லாவகம் வாடிக்கையாளர் மட்டுமல்லாது சக வியாபாரிகளே வியக்கும் வண்ணம் இருக்கும்.

தான் வியாபாரம் ஆரம்பித்த தொடக்கக் காலத்தில் ஒரு கிலோ மாட்டுக்கறி 2 ரூபாய் 50 பைசா என்பவர், ஒருநாளைக்குப் பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்த நினைவுகளை மீட்கிறார். “லாரியில் ஏற்றிவரும் மாடுகள் செத்துப் போனால் எங்களிடம் கொடுத்துவிடுவார்கள். ஏனென்றால் செத்த மாட்டை பாய்கள் அறுக்க மாட்டார்கள். இப்போது அதுவும் நடைமுறையிலில்லை, மாடு செத்துவிட்டால் அதன்மீது பினாயிலை ஊற்றி லாரியில் ஏற்றிவிடுவார்கள்” என்கிறார்.

மாட்டின் எந்தவோர் உறுப்பும் வீண் இல்லை; அத்தனையும் பொன். ஆடுதொட்டியின் சாணம் முழுவதையும் பிரபல நடிகர் ஒருவர் குத்தகைக்கு எடுத்துத் தன் தோட்டத்திற்கு எடுத்துச் செல்கிறார். மாடு அறுக்கும், விற்கும் தொழிலில் இஸ்லாமிய - தலித் சமூக மக்கள் மட்டுமே ஈடுபடுகின்றனர். மூன்று, நான்கு தலைமுறைகளாயினும் இருவருக்கும் இடையே எந்தவொரு பிணக்கும் ஏற்பட்டதில்லை என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் மாடு அறுக்கும் இடத்திற்குக் காரில் வந்த பிராமணப் பெண், காச நோய்க்கு என்னென்னவோ மருத்துவம் பார்த்தேன் ஒன்றும் சரியாகவில்லை என்று புலம்பியுள்ளார். கடைசியில் மருத்துவர் அப்பெண்ணை இங்கு அனுப்பியுள்ளார். மாட்டைக் கடவுளாகக் கும்பிடும் அப்பெண், மாட்டின் பச்சை ரத்தத்தைப் பல்லைக் கடித்துக் குடித்ததோடு, கடந்த வாரம் நோய் குணமானதைத் தெரிவித்து ரத்தம் கொடுத்த பெண்ணைக் கும்பிட்டு நன்றி தெரிவித்ததோடு மாட்டின் ரத்தம் தோய்ந்த தொட்டியின் மண்ணைத் தொட்டு வணங்கியும் சென்றுள்ளார்.

மாநகரின் பல்வேறு இடங்களுக்கும் இறைச்சியை விநியோகிக்கும் ஆடுதொட்டியின் சுற்றுச்சூழல் மிகவும் துயர் படிந்துள்ளது. மேலும், இது அழுகிய நகரமா எனவும் எண்ணத் தோன்றுகிறது.

எங்கும் விலங்கின் சதைகளும் எலும்புகளும் மண்ணோடு மண்ணாகக் கலந்து போவதற்கு இடமின்றித் தேங்கியுள்ளன. இக்கழிவுகளுக்கிடையேதான் விலங்குகளை அறுப்பதும் வியாபாரம் நடத்துவதும் நடக்கின்றன. டிக்காஸ்டர் சாலை முழுவதும் விதவிதமான பிரியாணிக் கடைகளும் ஏராளமான இறைச்சிக் கடைகளும் உள்ளன. ஆடுதொட்டியைச் சுற்றியுள்ள வீடுகள் விலங்குகளின் அழுகிய வாசத்திற்குப் பழகிவிட்டன போலும். இங்குள்ளோர் கேட்பதற்கு நாதியற்ற மக்களாய்ப் போயுள்ளனர். உதாரணமாகச் சமீபத்தில் பெய்த மழைக்கு மின்மாற்றியின் கீழ்ப் பகுதி மழைநீரில் மூழ்கியிருந்தது. ஆடுதொட்டியின் கிழக்குப் பகுதியில் உள்ள சாலையில் இருபுறமும் எலும்பும் தோலும் நிறைந்த சகதி நீண்ட காலமாய் அகற்றப்படாமல் தேங்கியுள்ளது.


மாநகரின் பல பகுதிகளில் சாலை ஓரம் குப்பையற்ற மண்ணைச் சுரண்டும் தொழிலாளர்களை நாம் பலமுறை பார்த்திருப்போம். என்னவென்று விசாரித்தால் அமைச்சர் வருகிறார் என்பார்கள். இன்னும் சில இடங்களில் சாலையின் மத்தியில் உள்ள புல்வெளிகளுக்குக் களையெடுத்தல், நடைபாதைக்கு வண்ணம் பூசுதல் போன்ற வேலைகளையும் அவ்வேலைகளை மேற்பார்வையிடும் மேலதிகாரிகளையும் பார்த்திருப்போம். இப்போது பெண் துப்புரவுப் பணியாளர்கள் விடிய விடிய சென்னை மாநகரையே சுத்தம் செய்த வண்ணம் உள்ளனர். இவ்வாறான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும்போது, ஆடுதொட்டியின் உள்ளும் புறமுமுள்ள கழிவுகள், குப்பைகள் மட்டும் ஏன் மாதக் கணக்கில் சுத்தம் செய்யப்படாமல் உள்ளன.

இடிந்து விழும் சுவர்களைப் புனரமைப்புச் செய்து புதிய கட்டடங்களை ஏன் கட்டித்தரவில்லை. மேற்கூரையுடன் சுவர் இடிந்து விலங்குகளும் மனிதர்களும் பலியானால்தான் இதற்கு அரசு செவி சாய்க்குமா? எந்தவித அக்கறையில்லா அரசுகள் வெறுமனே வாக்குச் சீட்டுகளாக மட்டுமே புளியந்தோப்பு மக்களை எண்ணுவது பேரவலம் அல்லவா?  

புளியந்தோப்பை விட்டு ஏதேதோ காரணங்களுக்காக எங்கெங்கோ சென்றுகொண்டிருக்கிறேன். ஆனால், என் உடலெங்கும் அழுகிய விலங்கின் நாற்றம் வீசியபடி இருக்கிறது. சிற்சில சமயங்களில் அந்நாற்றம் நாசியின் நுனியில் ஒட்டி வெளிப்படுவதான உணர்வு மேலிடுகிறது!


அருஞ்சொல் இணைய இதழில் வெளிவந்த கட்டுரையின் முழு வடிவம். அருஞ்சொல் லின்க் இங்கு இணைத்துள்ளேன்.

https://www.arunchol.com/panchothi-on-aaduthotti-and-beef

Monday, November 7, 2022

என்னை நன்றியுள்ளவனாக்கு இயற்கையே!


நாம் மிகவும் நேசிக்கக்கூடியவர்களின் ஒவ்வோர் அசைவையும் அவர்கள் அடையும் உயரங்களையும் கண்டு நெகிழ்ச்சியடைந்து அவர்கள் மேற்கொள்ளும் பயணத்திலுள்ள சாதக பாதகங்களைப் பகிர்ந்து அவர்களின் நலம்விரும்பியாக இருப்போம். ஆனால், அவர்கள் நம்மீது சிறு அடிப்படைப் புரிதலுமின்றி இருப்பார்கள். தெரிந்தும் அவர்களின் மீது தொடர்ந்து அன்பு செலுத்திவருவோம். அவர்களும் தொடர்ந்து நம்மைச் சந்தேகத்திற்கு உட்படுத்தி, யூகங்களால் நம்மை மதிப்பிட்டபடியே இருப்பார்கள். மேலும் மேலும் இவர்களின் அன்பைப் பெற நடத்தைச் சான்றிதழை நெற்றியில் ஒட்டியபடி வாழ நேரிடும். இன்னும் சிலர் சாதிச் சான்றிதழைக் கண்டு நெருங்குவார்கள். மாறாக ஒருவரின் நடத்தை, சாதி இரண்டையும் பொருட்படுத்தாமல் எங்கோ இருக்கும் ஒரு சாமானியரை, வாழ்வின் விளிம்பில் தத்தளிப்பவரை உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் செல்லவேண்டுமென்ற அரிதான உறவையும் கண்டிருப்போம். என் வாழ்வில் ஓர் அரிதான உறவுதான் எழுத்தாளர் கே.வி.ஷைலஜா. 

2015 ஆம் ஆண்டின் மத்தியக் காலத்தில் கணையாழியில் வேலை செய்த போது வேறு எந்தப் பத்திரிகை அலுவலகத்திலும் வேலை தேடிச் சென்றது கிடையாது. அங்கு பணிநீக்கம் செய்த பிறகு இதைவிட நல்ல இடத்தில் வேலைக்குச் சேர வேண்டும் என்கிற வைராக்கியம் உதித்தது. இப்போதும் கணையாழிதான் என் முதல் பள்ளி. ம.இராசேந்திரன்தான் என் முதல் ஆசிரியர் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை. திடீர் திருமண வாழ்வை எதிர்கொள்ள முடியாது தத்தளித்த போதுதான் கணையாழியில் பணிக்குச் சேரும் வாய்ப்புக் கிடைத்தது. மேலும், வியாபாரமா இலக்கியமா என்கிற குழப்பம் வேறு. இரண்டிற்கும் தீர்வு சொன்னது கணையாழிதான். ம.இராசேந்திரன் சக மனிதன் மீது செலுத்தும் அன்பும் அவர் குடும்பத்தில் ஒருவருக்கிடையே இருக்கும் அந்நியோன்னியமும்தான் என் இல்லற வாழ்விற்குத் தெளிவைக் கொடுத்தது.  

மகன் மீகாமன் பிறந்த தருணத்தில் மிகத் தீவிரமாக வேலை தேடிக்கொண்டிருந்தேன். பொருளாதார நெருக்கடியின் போது நண்பன் ஆன்மன் போன்றோர் மிகவும் உறுதுணையாக இருந்தனர். மிகவும் துயருற்ற சமயத்தில் என் மகனை நினைத்து ஒரு கவிதை எழுதி முகநூலில் பதிவிட்டிருந்தேன். அதைப் படித்த கவிஞர் பீனிக்ஸ் ஷைலஜாவிடம் சொல்லி இருக்கிறார். பச்சோந்தியைக் கூப்பிடுங்க அவனுக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று ஷைலஜா - பவா சொன்னதாக பீனிக்ஸ் என்னிடம் தெரிவித்தார். யார் அழைத்தும் அவ்வளவு எளிதில் அடைக்கலம் தேடிச் செல்ல விருப்பமில்லாதவன் ஷைலஜா, பவா இருவரின் அன்பில் அடைக்கலமானேன். அதற்குமுன் வம்சி புத்தகக் கடை வீட்டிற்கு மாறிய போது நண்பன் ம.நவீனுடன் அங்கு சென்றிருக்கிறேன். அந்நிகழ்வில்  எழுத்தாளர் பிரபஞ்சன் 360 டிகிரியில் தன் மென்னுரையை ஆற்றிக்கொண்டிருந்தார். ஓலையின் அடியில் இளஞ்சிவப்பு வெளிச்சத்தில் அமர்ந்தபடி அவரின் பேச்சை ரசித்துக்கொண்டிருந்தேன். அருகில் கிருஷ்ண மூர்த்தி, ஷபி இருவரும் அமர்ந்திருக்கத் தங்களை அறிமுகம் செய்துகொண்டோம். இவர்கள் இருவரும் சேர்ந்துதான் என் முதல் நூலான 'வேர்முளைத்த உலக்கை'க்கு திருவண்ணாமலை அடிவாரத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார்கள். எழுத்தாளர் அழகிய பெரியவன் சிறப்புரையாற்றிய இந்நிகழ்வுக்கு ஷைலஜா, பவா இருவரும் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர். அந்நிகழ்வின் ஏற்புரையில்கூட நான் சுமாராகத்தான் பேசியிருந்தேன். இப்படி எந்த நெருக்கமுமில்லாத என்னை அழைத்துத் தங்கள் வீட்டில் தங்கவைத்து வம்சி பதிப்பகத்தில் வேலை கொடுத்தார்கள். அதுவும் வேறு வேலை கிடைக்கும்வரை வருமானம் கிடைக்கச் செய்ததுதான். ஒரு சமயம் விகடன் ஆசிரியர் ரா.கண்ணன் தனக்குத் தெரிந்தவர்தான் அவரிடம் உனக்கு வேலை கேட்டுப் பார்க்கிறேன் என்றார் ஷைலஜா. சொன்னதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து என் வேலை குறித்து அவ்வப்போது அவருக்கு நினைவூட்டினார். மாதங்கள் உருண்டோட நம்பிக்கையற்ற ஒரு பொழுதில் சென்னையிலுள்ள ஒரு புத்தகக் கடைக்கு என்னை நேர்காணலுக்கு அனுப்பினார் பவா. அங்கு மிகக் குறைவான சம்பளம் தருவதாகச் சொன்னதால் நான் மறுப்புத் தெரிவித்துவிட்டேன். 

இடைவிடாத நம்பிக்கையுற்ற ஷைலஜா கவலைப்படாத பச்சோந்தி விகடனில் உறுதியாகக் கிடைக்கும் என்று நம்பிக்கையளித்து ஆற்றுப்படுத்தினார். ஓர்நாள் அந்தக் காத்திருப்புக்கு அர்த்தம் கிடைக்கும் வகையில் ரா.கண்ணன் உன்னைச் சந்திக்க வரச் சொல்லியிருக்கிறார் என்று சொன்னதும் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தேன். அதற்கு முன்பு `இவன்தான் பாலா' போன்ற தொடர் படித்திருந்தாலும் ரா.கண்ணனின் முகம்கூட எனக்குத் தெரியாது என்று இப்போது சொல்வதில் வெட்கமாகத்தான் உள்ளது. என் முதல் நூலையும் அடுத்து வரவிருந்த நூலின் பிரின்ட் அவுட்டும் கூடவே கணையாழி, தமிழ் ஸ்டூடியோ `கூடு'வில் வெளியாகியிருந்த இரண்டொரு கட்டுரைகளின் நகலுடன் ஆனந்த விகடன் வரவேற்பறையில் காத்திருந்தேன். 

சட்டென்று என்னைப் பார்த்த ஒருவர் நான்தான் கண்ணன் வாங்க பாஸ் என்று கண்ணாடிச் சுவர்களாலான சிற்றறைக்கு அழைத்துச் சென்றார். மிகக் குறுகிய நேரம்தான் என்னிடம் பேசினார். உங்க பெயர் ரொம்ப unique ஆக இருக்கே அதென்ன பாஸ் பச்சோந்தி என்று ரா.கண்ணன் கேட்கச் சட்டென்று mother of god என்று பதிலளித்தேன். இதற்கு முன்பு என் புனைபெயர் குறித்து இவ்வளவு நேர்மறையாக யாரும் என்னிடம் கேட்டதில்லை நானும் இப்படி பதில் சொன்னதில்லை. இதுவரை யாருக்குமே சிபாரிசு செய்யாத ஷைலஜா உங்களை அனுப்பியிருக்கிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. கட்டாயம் ஏதோ உங்களிடம் இல்லாமல் அனுப்பியிருக்கமாட்டார். ஆனால், உங்களைப் பற்றி எதுவும் எனக்குத் தெரியாது, தெரிந்துகொண்டு அழைக்கிறேன் என்று அனுப்பிவைத்தார். 

ஒரு நாள் அழைத்துத் தேர்வு வைத்தார்கள். ரவிபிரகாஷ்தான் அத்தேர்வை நடத்தினார். வெண்ணிறத் தலைமுடியுடன் இந்தியன் தாத்தாவைப் போல் தோற்றத்திலும் குரலிலும் மிரட்டலாக இருந்த இவர்தான் பின்னாளில் ஆனந்த விகடனில் எனக்கு மிக ஆதர்சமாக இருந்தார். 

தான்தோன்றித்தனமாக, திக்கற்ற திசையில், இது இரவா பகலா என அறியாது பயணித்துக்கொண்டிருந்த என் வாழ்வில் மாபெரும் தீபத்தை ஏற்றினார் ஷைலஜா. வேலைக்குச் செல்லுமுன் எக்காரணத்தைக் கொண்டும் வெளியில் வந்துவிடக் கூடாது எதுவாக இருந்தாலும் முதலில் எங்களிடம் சொல்லு பச்சோந்தி பிறகு நாம் முடிவு எடுத்துக்கொள்ளலாம் என்று பவாவும் ஷைலஜாவும் என்னைத் திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு அனுப்பிவைத்தனர். விகடனில் வேலை செய்த 2016 டிசம்பர் முதல் 2020 ஜுன் வரை எந்தப் புகாரும் அவர்களிடம் சொன்னதில்லை. ஏன் அதன்பிறகு திருவண்ணாமலைக்கே ஒருமுறைதான் சென்றேன். அதுவும் என்னுடைய இரண்டாவது கவிதை நூலான `கூடுகளில் தொங்கும் அங்காடி' நூல் வெளியீடு நிலத்தில் நடைபெற்ற போது சென்றதுதான். அதன்பிறகு அவ்வப்போது ஷைலஜா, பவாவுடன் பேசவுமில்லை. 

ஆனந்த விகடனில் என் பணியை நிரந்தரமாக்க, என்னை நீரூபிக்க மிகக் கடுமையாகப் போராடினேன். ஆரம்ப காலத்தில் தேநீர் குடிக்கக் கூட வெளியில் வந்ததில்லை, மதிய வெயிலைப் பார்த்ததில்லை. முதல் சந்திப்பின் போது விகடன் மனிதவள மேம்பாட்டுத்துறையைச் சேர்ந்த புவனேஸ்வரி ஏன் விகடனைத் தேர்ந்தெடுத்தீர்கள் எனக் கேட்டார். பத்திரிகைத் துறைக்கு இது ஒரு பல்கலைக்கழகம் என்றேன். எங்கோ ஒரு மூலையில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த என்னை விகடன் போன்ற பல்கலைக்கழகத்தில் படிக்கவைத்தவர் எழுத்தாளர் ஷைலஜா. அவரை அவ்வப்போது நினைத்துப் பார்ப்பதைத் தவிர எந்நன்றியும் அவருக்குச் செய்ததில்லை. ஷைலஜாவின் இப்பிறந்தநாளில் என்னை நன்றியுள்ளவனாக்கு என்று இயற்கையிடம் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.



Tuesday, October 18, 2022

பழைய வாழ்வை மீட்கிறேன்

 


2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி பீஃப் கவிதைகள் எழுதி முடித்தேன். அதன் பிறகு பல்வேறு சூழலால் தொடர்ந்து கவிதைகள் எழுத இயலவில்லை. இடையிடையே கவிதைக்கான மனநிலை நிலவினைப் போல் வளர்வதும் தேய்வதுமாக இருந்தது. நான் வளர்பிறையைத் தேய்பிறையிலும் தேய்பிறையை வளர்பிறையிலும் மாறி மாறி உணர்ந்தவாறே இருந்தேன். எண்ணிலிறந்த பௌர்ணமிகளும் அமாவாசைகளும் கடந்து சென்றன. பழைய வாழ்க்கையை மீட்கும் போராட்டத்தில் எழுதுவதை மறந்தேன். ஒருமுறை ஷங்கருடன் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது படைப்புலகில் தொடர்ந்து பலர் இயங்குவதைக் குறிப்பிட்டேன். என் வருத்தத் தொனியைப் புரிந்த அவர் ``கவலைப்படாதீங்க பச்சோந்தி, இடைவெளிவிட்டு எழுதும் போது அது வேறொன்றாக இருக்கும்'' என்றார். சில முறை பீஃப் கவிதைகளுக்குப் பிறகு என்னால் எழுத முடியுமா என்கிற சந்தேகமும் எழுந்ததுண்டு. ஏப்ரல் 2022 வரை இப்படித்தான் கடந்தது. ஒருநாள் நடைப்பயிற்சிச் செய்யும் போது திணைகள் இதழுக்கு உங்களின் கவிதைகள் வேண்டும் என்றார் ஷங்கர். நான் திகைத்தபடி நின்றதைக் கண்டு ``எனக்காக எழுதுங்கள்'' என்று கெஞ்சலுடன் சொன்னார். கொஞ்சம் கொஞ்சமாக எழுதும் மனநிலைக்குத் தயாராகிக்கொண்டிருந்த மனதிற்கு  ``எனக்காக எழுதுங்கள்'' என்னும் ஷங்கரின் சொற்கள் உத்வேகமளித்தன. 

ஒருமுறை அண்ணாசாலையிலிருந்து கலை விமர்சகர் ஜமாலனைச் சந்திக்கச் சென்றுகொண்டிருந்தேன். அண்ணா திரையரங்கம் அருகே நடந்துகொண்டிருந்த போது வெ.நி.சூர்யாவுடன் போனில் பேசினேன். என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்கள் என அவர் வினவினார். அக்காலகட்டத்தில் இவ்வாறான கேள்வியைக் கேட்பவரிடம் ``கடுமையான  பொருளாதார நெருக்கடி எதுவும் எழுதவில்லை'' என்கிற template ஆன பதிலைச் சொல்லி வந்ததையே சூர்யாவிடமும்  சொன்னேன். அப்படியென்றால் அதை எழுதுங்கள் என்றார். சூர்யாவின் பதிலில் என்னை நானே ஏமாற்றிக்கொண்டு வருடங்களை வீணடித்தாகத் தோன்றியது. அந்நேரத்தில் மிக நெருங்கிய நண்பர் ஒருவர் ஏற்படுத்திய அவமானம், வலி என்னை முரட்டுத்தனமான வாசிப்புக்குள் தள்ளியது. தொடர்ந்த வாசிப்பினுடே சிறிய பயணத்தை யதேச்சையாக மேற்கொள்ள நேர்ந்தது. அப்படியான பயணத்தில் எழுதிய முதல் கவிதையை ஷங்கர், வெ.நி.சூர்யா, பெரு விஷ்ணுகுமார் மூவருக்கும் அனுப்பினேன். மூவருக்கும் பிடித்திருந்தது. ஆனால் வெ.நி.சூர்யா தலைப்பை மாற்றலாம் என்கிற ஆலோசனை சொன்னார். அந்நேரத்தில் தனிமை வெளி இதழுக்குக் கவிதைகள் வேண்டுமென்று பிரவீண் பஃறுளி கேட்கத் தலைப்பைக்கூட மாற்றாமல் அனுப்பி வைத்தேன். லேஅவுட் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் `நடனமற்றுத் தரையிறங்கும் ஆகாயம்' என்னும் தலைப்பைத் தனிமை இதழின் ஆசிரியர் குழுவுக்கு அனுப்பிய கையுடன் சூர்யாவுக்கும் அனுப்பினேன். அவருக்குத் தலைப்பு பிடித்திருந்தது. முதலில் கவிதைகள் கேட்ட ஷங்கருக்குக் கவிதைகள் அனுப்பவில்லையே என்கிற குற்றவுணர்வு என்னுள் எழுந்தது. திணைகள் இதழ் பணி தொடங்க இன்னும் கொஞ்சம் நேரம் எடுக்கும் அதற்குள் எழுதித் தாருங்கள் என்று ஷங்கர் கேட்டதற்கு இணங்க அடுத்தடுத்து எழுதிய ஏழு கவிதைகளை அனுப்பினேன். 

விகடனில் இருந்து கிடைத்த பணத்தில் கடன் பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டதாக ஒருமுறை பெரு விஷ்ணுகுமாரிடம் கூறினேன். அப்போது அவர் ``அவ்வளவுதான் ப்ரோ மீண்டும் பழையபடி இயங்க ஆரம்பியுங்கள்'' என்றார். இப்படி எனக்குள் இருந்த என்னை மீட்ட ஷங்கரை, சூர்யாவை, விஷ்ணுவை இத்தருணத்தில் நினைத்துப் பார்க்கிறேன். ஆமாம் பழைய வாழ்க்கையை மீட்கத் தொடங்கியுள்ளேன். தனிமை, திணைகள் இதழ்களை அடுத்து தற்போது `அகநாழிகை கலை இலக்கிய இதழ்' இல் `உப்பலையும் கரையும் மாநகரம்', `ஒயினென்ற வார்த்தையைக் குடித்தல்', `மண்டையோடுகளின் பறையிசை' என்னும் தலைப்பிலான பச்சோந்தியின் மூன்று கவிதைகள் வெளிவந்துள்ளன. அகநாழிகை இதழுக்கும் அதன் ஆசிரியர் பொன் வாசுதேவனுக்கும் மிக்க நன்றியை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

அகநாழிகை கலை இலக்கிய இதழில் வெளியான மூன்று கவிதைகள்


உப்பலையும் கரையும் மாநகரம்



ஒயினென்ற வார்த்தையைக் குடித்தல்





மண்டையோடுகளின் பறையிசை

Sunday, October 9, 2022

சுஜாதாவின் பச்சோந்தியும் அன்னப்பறவையும்

 


அறிவியல் புனைவுகளின் மேல் தீரா மோகம் ஏற்பட்டுள்ளது. அறிவியல் புனைவு புரியவேண்டுமென்றால் அறிவியல் என்றால் என்ன என்கிற அடிப்படைப் புரிதல் வேண்டும். இரண்டையும் அறியும் வேட்கையில் இருக்கிறேன். ஒரு பனுவலைப் படித்துப் புரிந்துகொள்வதைவிடக் காட்சியின் மூலம் உணர்தல் மிக எளிது என்பதால் சினிமாக்களைப் பார்க்க ஆரம்பித்தேன். ஏற்கெனவே Gravity, Avatar போன்ற படங்கள் பார்த்திருந்தாலும் கிறிஸ்டோபர் நோலனின் Inception, Interstellar பார்த்த பிறகு இந்த உலகை அறிவியல் நோக்குடன் பார்க்கும் விதம் முற்றிலும் மாறியது எனலாம். அதற்குக் காரணம் படங்கள் பார்க்கப்பட்ட காலகட்டமே. ஒருநாள் be4books சென்றிருந்த போது அறிவியல் புனைவு திரைப்படங்கள் பார்த்துக்கொண்டிருப்பது குறித்துக் கவிதைக்காரன் இளங்கோவிடம் சொன்னேன். அவர் utopia and eutopia என்னும் சொற்களின் அர்த்தங்களை google இல் தேடிப் பாருங்கள் பல்வேறு திறப்புகளை ஏற்படுத்தும் என்றார். தேடிப் படித்தேன் புரிந்தும் புரியாமலும் இருந்ததால் நண்பர்களுக்கு வாட்ஸ் அப் செய்தி அனுப்பினேன். பெருவிஷ்ணுகுமார் ஒரு லின்க் அனுப்பி இருந்தார், அதற்குள் நேசமித்திரன் மிகத் தெளிவான பதிலை அனுப்பி இருந்தார். பிறகு அறிவியல் சார்ந்த கதை, கட்டுரைகளைச் சேகரிக்கத் தொடங்கினேன். அவற்றில் ஒன்றாக சுஜாதாவின் `ஏன், எதற்கு, எப்படி'. 

இன்று அப்பனுவலைப் புரட்டிக்கொண்டிருக்கையில் பின்பக்கம் இருந்த சப்ஜெக்ட்ஸ் இல் இடம்பெற்ற பச்சோந்தி என்னும் சொல் கண்ணில்பட்டது. பச்சோந்தி என்றதும் உங்களுக்கு என் நினைவு வரலாம், பலருக்குத் தன்னையேகூட நினைவு வரலாம். ஆனால், இந்தப் பச்சோந்தி `விலங்கு... பறவை... பூச்சி...' என்னும் உப தலைப்பின் கீழ் இருந்தது. 164 ஆம் பக்கத்திற்குத் தாவினேன். `பச்சோந்தியின் நெர்வஸ் சிஸ்டத்தில் இருக்கிறது நிறம் மாறும் சூட்சுமம்' என்று தன் பதிலில் கூறியிருந்தார் சுஜாதா. மேலும்,  அபாயம் வந்தால் மட்டுமல்ல... வெளிச்சம், உஷ்ணம், எண்ண ஓட்டம் இப்படிப்பட்ட சங்கதிகளுக்கும் பச்சோந்தி தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும் என்பது மிகவும் உற்சாகமாக இருந்தது. இதில் என்ன உற்சாகம் என நீங்கள் கேட்கலாம் பச்சோந்தி என்று பெயர் வைத்ததால் அதன் பின்னுள்ள லாபநஷ்டங்கள் பச்சோந்திக்கே தெரியும். அதைப் பின்னொரு சமயத்தில் விரிவாக எழுதுகிறேன்.

மாலை 5.30 மணியளவில் குருதிபலி செந்திலைப் பார்க்கச் செல்லும் போது ஏன், எதற்கு, எப்படி, மார்கழி பாவியம் ஆகிய இரண்டு நூல்களையும் கையில் எடுத்துச் சென்றேன். கையில்தான் இரண்டு ; பையில் இன்னும் இருந்தன. எங்கு சென்றாலும் கையிலும் முதுகிலும் புத்தகங்கள் சுமந்து சில நேரங்களில் அயர்ச்சியடைவது உண்டு. ஆனால், அந்தச் சுமையோடு அலைந்து திரிவதுதான் என் பலம். சிம்ஸன் சிக்னலில் 29A பேருந்தில் ஏறி பைகிராஃப்ட்ஸ்  சாலையில் இறங்கினேன். கடைக்கு வந்த வாடிக்கையாளரிடம் பேசிக்கொண்டிருந்த செந்திலுக்கு வணக்கம் சொன்னதும் கைகளை இறுகப் பற்றி வாங்க பச்சோ என்றார். அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று  `ஏன், எதற்கு, எப்படி' பனுவலைப் புரட்ட ஆரம்பித்தேன். அதில் இடம்பெற்ற பாலையும் நீரையும் அன்னப்பறவை பிரிக்காது என்னும் பதில் குறித்து சற்று நேரம் கழித்துச் செந்திலிடம் பேசினேன். பாலையும் நீரையும் பிரிக்கும் என்பதை நேரிடையான அர்த்தத்தில் எடுத்துக்கொள்ளாமல் அறிவியல்பூர்வமாக நீர் கலந்ததா, கலக்காததா என்பதை வாசனை, சுவையின் மூலம் அன்னப்பறவை அறியும் என்பதாகப் புரிந்துகொள்ளலாம் என்றார். இந்தப் பதில் ஒருவகையில் தர்க்கரீதியாகப்பட்டது. பிறகு அன்னம் என்கிற சொல் முதலில் சோற்றுப் பருக்கைக்கு வந்ததா இல்லை அன்னப்பறவைக்கு வந்ததா என்னும் கேள்வியுடன் இரண்டும் வெண்மை நிறமுடையது என்பதால் இப்படிக் கேட்கிறேன் என்றார். சற்று யோசித்து பறவை, பருக்கை இரண்டில் பறவைதான் முதலில் தோன்றியது. எனவே அன்னம் என்பது பறவைக்குத்தான் முதலில் இருந்திருக்கும் என்றேன். ஆந்திராவில் அன்னம் என்னும் சொல் இன்னும் பேச்சு வழக்கில்  இருப்பதைச் சுட்டிக்காட்டினார். 

அன்னத்திலிருந்து ஆங்கிலத்திற்குச் சென்ற செந்தில் த்ரீ என்னும் ஆங்கிலச் சொல் சமஸ்கிருதத்தில் இருந்துதான் கையாண்டிருக்க வேண்டும் என்பதை `திரிசூலம், திரிகடுகம், திரிலோகாதிபதி என்னும் சொற்களின் உதாரணத்துடன் கூறினார். சமஸ்கிருதம் படித்தவன் என்கிற முறையில் ஏகம், த்வீ, த்ரீணி, சத்வாரி, பஞ்ச, ஷட், சப்த, அஷ்ட, நவ, தச, ஏகாதச என்று சொற்களில் ஓட ஆரம்பித்து த்ரீணி சொல்லுக்கு மீண்டும் ஓடிவந்தேன். அட ஆமா செந்தில் அப்படியும் இருக்கும் அல்லவா என்றேன். நிலம், கடல் என எல்லை தாண்டும் சொற்கள் எத்தனை வியூகங்களை வகுக்கின்றன. 

Thursday, October 6, 2022

ரமேஷ் பிரேதனின் ` பட்டாம் பூச்சி'யை வாசித்தல்

Pinterest


நேற்று மாலை அலுவலகம் முடிந்ததும் நண்பர் செந்தில்குமாரைச் சந்திக்கச் சென்றேன். இவர் திருவல்லிக்கேணியில் உள்ள பைகிராஃப்ட் சாலை நடைமேடையில் புத்தக்கடை நடத்தி வருகிறார். தன் அப்பாவின் மரணத்திற்குப் பிறகு அவர் மேற்கொண்ட பணியைக் கடந்த 25 ஆண்டுகளாகச் செய்துவருகிறார். பத்து நாட்களாகத்தான் செந்திலைத் தெரியும். நான்கைந்து நாட்களாக தினசரி சந்தித்து வருகிறோம். இதற்கு முன் தினசரி சந்திப்பு என்பது வெய்யில் மற்றும் ஷங்கரராமசுப்பிரமணியம் இருவருடன்தான். வெய்யிலுடன் ஆறு மாதங்களுக்குள்ளும் ஷங்கருடன் ஒன்றரை ஆண்டுகளுக்குள்ளும் தினசரி சந்திப்பு முடிவுக்கு வந்துவிட்டது. வேறு யாரையும் சந்திக் கூடாது என்றெல்லாம் இல்லை, கடந்த 24 ஆண்டுகளாகச் சென்னை வாழ்க்கையை ஏக்கத்துடனும் பசியுடனும் அறியாமையுடனும் ஏகாந்தமாய் வாழப் பழகிவிட்டேன். அவ்வளவுதான். 

ஐந்து நாட்களில் முதல் மூன்று நாட்கள் அந்தரங்கமான விசயங்களை மட்டும் பகிர்ந்தோம். விஜயதசமி அன்று கடை விடுமுறை என்பதால் நண்பகல் நேரத்தில் அழைத்திருந்தார். நல்லதம்பி தெருவுக்கு வரவழைத்து வாலஜா சாலையில் தேநீர் அருந்தியபடி உரையாடினோம். இன்று மாலை வெளியில் செல்லலாமா என்றேன். யாரும் செல்லத் தயங்கும் இடத்திற்குச் செல்லலாமா என்றேன். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாதீங்க எங்க போக வேண்டுமென்று மட்டும் சொல்லுங்கள் நான் அழைத்துச் செல்கிறேன் என்றார். Broken Bridge ஐப் பார்க்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை அங்கு அவ்வளவு எளிதாக உள்ளே போக முடியாது என்று நண்பர் சொன்னதாகக் கூறினேன். அந்த இடம்பற்றித் தெரியவில்லை ஆனாலும் போகலாம் என்றார். வெறுமனே வேடிக்கை பார்ப்பதும் சொந்த விசயங்களைப் பகிர்ந்துகொள்வது மட்டுமல்லாமல் ஏதாவது வாசிக்க வேண்டும் என்று மனதில் தோன்ற `மார்கழி பாவியம்', `மர்ம நபர்' கவிதைத் தொகுப்புகளை அவரிடம் கூடச் சொல்லாமல் எடுத்துச் சென்றேன். காமராஜர் சாலையைக் கடந்து நொச்சிக்குப்பக் கருவாட்டுக் காற்றின் உப்பை நுகர்ந்தபடி சென்றோம். Broken Bride சென்று வந்த அனுபவத்தைப் பிறகு பகிர்கிறேன். இரவு 9.30 மணிக்குச் சாம்ராஜைச் சந்திக்க செந்தில் செல்ல இருந்ததால் 8.30 க்கு இருவரும் கிளம்புவதாக முடிவெடுத்தோம். 

பெசன்ட் நகரில் இருந்து மைலாப்பூர் கிரி ட்ரேட்க்குச் சென்று சில புத்தகங்கள் வாங்கிக் கொண்டு மெரினா நோக்கி வந்தோம். கவிதை வாசிக்கலாம் என்று முடிவெடுத்துக் கடற்கரைக்குள் சென்றோம். விண்மீனற்ற வானின் கீழ் சோளப்பொறிகள் வாட்டும் அடுப்பிலிருந்து தீச்சிறகுகள் பறந்தவண்ணமிருந்தன. செம்மஞ்சள் நிற உச்சி விளக்கின் ஒளியில் தேவதச்சனின் கவிதைகள் ஒன்றிரண்டை வாசித்தோம். வழக்கமாக தனியே ஒரு கவிதையை வாசிக்கையில் தனிமனிதச் சிந்தனையோடு அதாவது ஒற்றைத்தன்மையோடு முடியும். அரிதான பொழுதுகளில் ஒருவரின் பன்முகத்தன்மையும் வெளிப்படும். ஆனால், இது என்ன சொல்கிறது நாம் என்ன புரிந்துகொண்டோம் என்பதைக் கலந்து பேச நினைக்காமல் அடுத்தடுத்த கவிதைகளுக்குத் தாவிவிடும் தட்டையான வாசிப்பிலேயே முடிவடையும். இது புரியவில்லையே என்று யாரிடமாவது கேட்கலாம் என்றால் கவிதைக்கு விளக்கமெல்லாம் கேட்கப் படாது என்று முட்டுக்கட்டை போட்டு விடுவார்கள். அதற்கு நேர்மாறாக செந்தில் இருந்தார். ஒரு கவிதை வாசித்தால் அது என்ன சொல்கிறது என்று உங்களுக்குத் தெரிந்ததை நீங்க சொல்லுங்க, எனக்குத் தெரிந்ததை நான் சொல்கிறேன் என்று முடிவெடுத்துக்கொண்டோம்.

தேவதச்சனின் சில கவிதைகளை வாசித்து பிறகு ரமேஷ் பிரேதனின் `கவையில் தேனடை' கவிதையை வாசித்தோம்.

கவையில் தேனடை

என் நண்பனின் திருமணத்தில் பங்கேற்க இயலவில்லை. பாரீசிலிருந்து புதுவை வந்து தேனிலவு முடித்து ஊர் திரும்பிய தம்பதியரைச் சந்தித்து வாழ்த்தி தேன் பாட்டிலைப் பரிசளித்தேன். அவன் `ஙே' என்று விழித்தான். அவள் வெட்கத்துடன் சமையலறைக்கு எடுத்துச் சென்றாள். விடைபெறும் போது நண்பனின் காதில் தேனில் பட்டாம்பூச்சியை ஊறவைத்துத் தின்றால் இல்லற சுகம் கூடும், இது பிரெஞ்சு முறை என்றேன். 

நான் பாரீசுக்குத் திரும்பி ஒரு மாதம் கழித்து நண்பனின் மனைவி தொலைபேசியில் அழைத்தாள்; அவன் பட்டாம்பூச்சிகளை வேட்டையாடப் பூங்காக்களே கதி என்றிருக்கிறானாம்.

நான் தலையில் அடித்துக்கொண்டேன். அவள் உடைபட்ட கண்ணகியின் சிலம்பு போலச் சிரித்தாள். காதில் தேன் வந்து பாய்ந்தது. 

இக்கவிதையை வாசிக்கும் முன்பே தலைப்பை மட்டும் கேட்ட செந்தில் `கவை என்றால் என்ன' என்றார். நானும் `ஙே' என்று விழித்தேன். இதற்கும் இக்கவிதையைப் பலமுறை வாசித்து இதன் உள்ளிருக்கும் அறியாமையை, எள்ளலைப் பலமுறை ரசித்திருக்கிறேன். அப்போதெல்லாம் கவை என்னும் சொல் கவ்வை என்பதாகப் புரிந்துகொண்டேன். ஊரில் உண்டிக்கோலைக் கவ்வான் என்றும் வேலி அடைக்க வெட்டிய முட்களை அள்ளும் V வடிவ மரக் கருவியைக் கவ்வை என்று அழைப்போம். அதன் பொருளியே புரிந்திருந்தேன். ஆனால், அர்த்தமென்ன என்று கேட்டதும் திடுக்கிடல் உண்டானது. சில சொற்களின் சித்திரம் அல்லது ஒலி நன்கு அறியப்பட்டது போல் மயக்கம் தருமல்லவா. பொது வெளியில் நாம் அன்றாடம் பார்க்கும் முகம் அல்லது மரம், செடி, பூ எல்லாம் நமக்கு நன்கு பரிச்சயமானவைதாம். ஆனால், பெயரென்ன என்று கேட்டால் திருதிருவென முழிப்போம் அல்லவா அப்படித்தான் கவ்வை என்ற சொல்லைத் தாண்டி வேறெதுவும் சொல்ல இயலவில்லை.  


செந்தில்குமார்

உடனே google இல் தேட செல்போனை எடுத்தேன். உடனே அகராதியைத் தேடாமல் கொஞ்ச நேரம் மனதிற்குள் அசைபோடுங்க விடை கிடைக்கும் என்றார் செந்தில். ஒரு சொல்லுக்குப் பல பொருள் இருக்கும் ஏதாவது ஒன்றில் பொருந்திப் போகிறா என்று பார்ப்போம் என்றார். சொற்களை நீங்கள் சொல்லுங்கள் சரியா இல்லையா என்று நான் சொல்கிறேன் என்றேன். கவைக்கு உதவாது என்று சொல்வார்கள் அல்லவா என்றதும் ஆமாம் அந்தப் பொருளில்தான் வரும் எதுக்கும் உதவாத செயலைச் செய்பவனைத்தான் குறிக்கும் என்றேன். சரி என்றால் உங்களின் திருப்திக்காக அகராதியைத் தேடுங்க என்றார். மரக்கிளை, கவைக்கோல், கரிசனை, கோட்டை, எலும்புக்கவை, காரியம் ஆகிய சொற்களின் நடுவே `பகட்டு ஆ ஈன்ற கொடு நடை குழவி கவை தாம்பு தொடுத்த காழ் ஊன்று அல்குல்' என்னும் பெரும்பாணாற்றுப் பாடல் வரிகள் கிடைத்தன. ஒருவழியாக கவிதையை வாசித்து முடித்ததும் சிரிப்பொலியில் பட்டாம்பூச்சி என்கிற படிமம் எதைக் குறிக்கிறது என்கிற அடுத்த வினாவுக்கு எதை எதையோ யோசித்து பிறகு பெரும்பாணாற்றுப் பாடலின் `அல்குல்' சொல்லில் மனம் ஊன்றியது. அல்குல் என்றால் பெண்ணின் பிறப்புறுப்பு அல்லவா, ச்சே யோனியை எப்படித் தேனில் ஊறவைப்பது இவ்வாறு மனதிற்குள்ளே யோசித்தவாறு எனக்குள்ளே வெட்கமுற்று நெளிகிறேன். 

ரமேஷ் பிரேதன் யோனியை விதவிதமாகக் கவிதையில் கட்டமைத்திருப்பார். ஒரு இடத்தில் இரண்டாக வகுந்த ஆப்பிளைப் போல் உள்ளது என்று யோனியை வருணித்திருப்பார். இயற்கையிலேயே காய்களும் கிழங்குகளும் ஆணுறுப்பு வடிவிலும் பழங்கள், இலைகள், பூக்கள் எல்லாம் பெண்ணுறுப்பு வடிவிலும் இருக்கும் என்று வாசித்து உணர்ந்திருக்கிறோம் அல்லவா. அதனால்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறேன். பட்டாம்பூச்சி சிறகு விரித்தால் திறந்த யோனியைப் போல்தானே இருக்கும். இவ்வாறெல்லாம் யோசித்து எதுவும் சொல்லாமல் கூகுளில் காட்டிய சொற்களில் ஒன்றான மரக்கிளை என்ற சொல்லை உச்சரிக்கிறேன். மரக்கிளைக்கு எதற்கு இவ்வளவு அழுத்தம் தரவேண்டுமென்று செந்தில் கேட்கிறார். இவ்வாறு இருவரும் யோசித்துக்கொண்டிருக்கையில் `பே.... ' என்று ஒரு குழந்தை பயமுறுத்தியது. ஐயோ நாங்க ரொம்பவே பயந்துட்டோம் என்றதும் அக்குழந்தை எங்களுக்கும் மேற்கே மணலில் அமர்ந்திருந்த தன் அப்பா அம்மாவை நோக்கி ஓடியது. சற்றுத் தொலைவில் ஒலிக்கும் உருமிச் சத்தத்திற்குத் தாயும் தந்தையும் மகனுமாக நடனமாடுகிறார்கள்.

இரவு 9.30 மணி ஆகவும் திருவல்லிக்கேணி ரயில் நிலையத்தில் என்னை இறக்கிவிட வந்தார் செந்தில். விடைபெற்றுத் திரும்பும் போது அந்த பட்டாம்பூச்சி என்கிற இமேஜ் என்ன என்று நாம் விடாது யோசிக்கணும் செந்தில் என்றேன். டிக்கெட் வாங்கிப் படியேறுகிறேன் செந்திலிடமிருந்து அழைப்பு, சொல்லுங்க செந்தில் என்றேன் அந்தப் பட்டாம்பூச்சியைக் கண்டுபிடித்துவிட்டேன் என்றார். என்ன அது என்றேன் ஆர்வமாக, பெண்ணின் பிறப்புறுப்பைத்தான் அப்படிச் சொல்லியிருக்கிறார் என்றார். கரெக்ட்டு நானும் அப்பவே யோசித்தேன் ஆனால் சொல்ல ஒரு மாதிரியா இருந்தது என்றேன். கூச்சத்தைக் குப்பையில எறிங்க பச்சோ என்றார். எந்தக் குப்பையில் போடுவதென்றுதான் தெரியவில்லை ஆனால் இப்படிச் சொல்ல ஒரு நண்பன் கிடைத்துவிட்டான். இனிக் குப்பையைத் தேடுவோம்.

06.10.2022

வியாழன்

Thursday, September 8, 2022

பச்சோந்தியின் 2 கவிதைகள் - தனிமை இதழில் வெளியானவை

 



நடனமற்றுத் தரையிறங்கும் ஆகாயம்


கோவிந்தப்ப நாயக்கர் தெருவில் நடந்துகொண்டிருந்தேன்.

இடிந்து நொறுங்கிய வீட்டின் எஞ்சிய சுவர்

வேர்களால் வேயப்பட்டிருந்தது.

அதன் மீது சாய்ந்திருக்கிறது

ஒரு முனை உடைந்த மூங்கில் ஏணி.

வெட்டுத் தழும்புகளுடன் நின்றிருக்கும் அரச மரத்தின்

பாதி உடைந்த கிளை

அக்கினி வெய்யிலில் எரிகிறது.

அந்த நெருப்பில் சுருட்டைப் பற்றவைக்கிறான்

வாயற்ற வயோதிகன்.

சுருள் சுருளாய் மேகங்கள் சஞ்சரிக்கையில்தான்

தொண்டையில் மடித்துவைத்திருந்த உதடுகள்

எட்டிப் பார்த்தன.

பழக்கூடையில் ஊன்றிய குடை

காற்றில் சாயாதபடி 

கண்ணாடி வளையல்கள் இறுக்கிப் பிடிக்க

மற்றோர் கையின் வளையலோசை

பலாச் சுளைகள் மீது அமர்ந்த ஈக்களை விரட்டுகிறது.

நடனமற்ற அரசின் பழுத்த இலை

ஆகாயத்தைத் தரையிறக்கும் பொழுதில்

ரத்தக்கறை படிந்த லுங்கியொன்று

நடைமேடை மீது தூங்கித் தூங்கி வழிகிறது.

சிலையாய் நிற்கும் ஜார்ஜ் மன்னன்

சுட்டாலும் பாதத்தை மட்டும் நகர்த்தாமல் 

மண்டையைக் கழட்டிக் கிரீடத்தைச் சொரிகிறான்.



 பத்ரியன் மலர்ச் சந்தையைப் பற்றவைத்தேன் 


பாரிமுனைப் பத்ரியன் மலர்ச் சந்தையை உரசி

சிகரெட்டைப் பற்றவைத்தேன்.

படங்களாய்க் குவிந்து கிடக்கும் கடவுள்களின் மீது

ஊதுவத்தியின் சாம்பல் படர்கிறது.

வட்டமான மூங்கில் கூடையில்

தாழம் பூக்களை அடுக்குபவனிடம்

வாசத்தை நுகரக் கேட்டேன்.

தென்னங்குருத்தைப் போன்ற இலையால்

நாசித் துளைகளை அடித்து விரட்டலானான்.

சற்றும் அசையாது

ஒரு வண்டைப் போல் சதா ரீங்கரித்தேன்.

நடுக்கமுற்ற அவன் தாய்

பூவைப் பிய்த்து என் திசை பார்த்து எறிந்தாள்.

கண்களால் கவ்விச்சென்று

மேற்கூரை இடிந்த வீட்டின் திண்ணையில் அமர்ந்து

முகர்ந்துகொண்டே இருந்தேன்.

நாசியின் விளிம்பில் ஒட்டிய

சாமை போன்ற மென்துகள்களை

நுனி விரலில் கிள்ளி எடுக்கப் பார்த்த போது

என் முதுகு தட்டப்பட்டது.

தட்டிய ஓசையைத் தேடினேன் 

ஆலம் விழுதுகளால் நெய்யப்பட்ட சுவர்தான் நின்றிருந்தது.

பாதி உடைந்த ஜன்னலில் எட்டிப் பார்த்தேன் 

நிழலில் காயவைத்த தாழம் பூவைப் 

பொடிசெய்யும் பசியற்ற வயிறு

வெந்நீரில் கொதித்த தாழம் பூவில்

பனைவெல்லத்தைக் கரைக்கும் தேகச் சூடு உள்ளவன் 

தாழம் பூ இலையை நெய்யில் வதக்கும் நீர்க்கடுப்பு உள்ளவன்

தாழம் பூ இலை கொதித்த நீரில் 

தொண்டையால் நீச்சலடிக்கும் தோல் நோயாளி

எண்ணற்ற நிழல்கள் 

மேற்கூரை இடிந்த சுவருக்குள்

மீண்டும் பற்றவைத்தேன்

மலர்ச் சந்தையை.

பச்சோந்தியின் 7 கவிதைகள் - திணைகள் இதழில் வெளியானவை


 

நின் அப்பம் சிறகுகளாலானது


தண்டீஸ்வரம் பிரதான சாலையின் நடுவே

நசுங்கிய மாங்கனியை மிதித்தவன்

சற்றுத் தொலைவில் பிதுங்கினான்

சேவல்கொண்டைகளாய் உதிர்ந்து கிடக்கும் செங்கொன்றைப் பூக்கள்

ரத்தத் துளிகளாய்ச் சொட்ட

கூட்டிப் பெருக்கி வண்டியில் ஏற்றும் துப்புரவுத் தொழிலாளி

சிவக்கச் சிவக்க வெற்றிலையை வானில் இறைக்கிறார்

யாருமற்ற தேவாலய வாசலில் வெகுநேரமாய் ஏந்தும் கைகளில் கொட்டும்

கருங்கற்களில் வழியும் சிலுவையின் ரத்தம்

சிதறும் தேங்காய்ப் பருப்புகளைக் கவ்விச் செல்லும்

முதுகெலும்புகள் காய்த்த விலங்கு

மட்கும் குப்பையைக் கொத்திப் பறக்கும் அலகுகள் உடைந்த பறவை

அடுக்கிய பழங்களை ரீங்கரித்தபடி துளையிடும் காலிழந்த வண்டு

வெகுநேரமாய் ஏந்திய கைகள் காலியான தூக்கை வான்பார்த்து எறிய

ஆலய மணி ஒலிக்கும் வானில் புறாக்களின் சிறகுகள்.


காற்றில் விளையும் நறுமணம்


மேட்லி சாலையில் முடிவுறாது நிற்கிறது

மாம்பல ரயில்நிலைய இரும்பு மேம்பாலம்

நெருப்புச் சில்லுகள் விழும் அதனடியில் 

கரும்பின் கணுக்களைச் சீவி அடிக்கட்டையை வெட்டி எறிகிறான்

எறும்புகள் மொய்க்கும் இனிப்பென்ற வார்த்தையில்

ஒரு கட்டு அறுகம்புல்லைப் 

பத்து ரூபாய்க்கு விற்பனை செய்பவள் 

நாவற்பழச் சுவை மீது உப்பைத் தடவுகையில்

வெய்யிலில் காயும் பூணூல்

தோல் நீங்கிய சுளைகளில் கண்களைச் செருகுகிறது

வாகனங்களுக்கிடையே ஊக்குகளை வயிற்றில் ஏந்தி விற்பவனிடம்

சந்தைக்கே நறுமணம் பூசியவள்

ஒரு கொத்து ஊக்குகளைக் கூடுதலாய் விலைக்கு வாங்கிச் செல்கிறாள்

நெருக்கடி மிகுந்த அங்காடித் தெருவில் 

மீன் வடிவப் பீப்பியை ஊதுகிறான் சிறுவன்

அது வளைந்து நீண்டு ஒலிக்கிறது

ஒருமுறை வானை இழுத்தும் மறுமுறை பூமியைத் தூக்கியும்

விளக்குகள் எரியா சிக்னலில்

கேள்விக்குறியைக் கைத்தடியாக்கிய பெரியார் சிலை

உச்சந்தலையில் காய்ந்த பறவையின் எச்சத்துடன்

முற்றும் தூசி படிந்துள்ளது.


இரைப்பையைப் பகிர்ந்து ஊட்டுதல்


ராட்டினமாய்ச் சுற்றும் குடையின் கீழ்

நடைமேடையை அள்ளித் தின்னும் சிறுவன்

வெற்றுத் தண்ணீர்ப் போத்தலைக் கவ்வியபடி

வான் நோக்கி நடனமிடுகிறான்

பதாகை கிழிந்த கம்பிகளுக்கிடையே

விடுபடமுடியாச் சிறகடிக்கும் பறவை

மயில் தோகைகளைச் சுமந்து சென்றவன்

தன்னை விரித்து ஆட

மிக்ஸியில் அரைபடும் மாதுளங்கனிக்கு உடைபடும் ஐஸ்கட்டி

மேகங்கள் பொழியும் மாதுளம் மழையை

நாக்கடியில் சேகரிக்கும் மாநகரம்

முன்சக்கரமற்ற மிதிவண்டி அருகே

நிரம்பி வழியும் குப்பைத்தொட்டி

அதன் உச்சியை இழுத்துச் செல்லும் பூனை

பதுங்கிச் செல்லும் வாகன நிழலில்

பாலித்தீனில் வாய் வைத்த மிருகத்தின் முதுகுத்தண்டில் 

மாதுளம் மழை பெய்ய

தன் உடலைக் குலுக்கி ஓடி

செல்போன் கடையின் தூசி படிந்த படிக்கட்டை நக்குகிறது

அந்த நக்குதலின் மீது

தன் இரைப்பையைப் பகிர்ந்து வைத்த வயோதிகன்

நேர்க்கோட்டைப் போன்ற வானத்தின் அடியில்

அறுந்த கால்களைத் தைத்துக்கொண்டிருக்கிறான்.


எலும்புச் சுள்ளிகளின் கூடுகள்


சுரங்கப்பாதை நடையில் வெய்யில் காயும் வரமிளகாய்

காரத்தைக் கண்களில் கசக்கிய சாம்பல் நிற மிருகம்

வீசியெறிந்த கெட்டிச் சாம்பாரை

நாவினால் பறித்துச் சுவைக்கையில்

தொந்தியால் எட்டுவைத்தவன் 

அச்சுவை மீது கஞ்சா நெடியை எறிந்தான்

மேகங்களை வகிடெடுக்கும் உடைந்த கட்டடத்திலிருந்து

எலும்புச் சுள்ளிகளைக் கவ்வியபடி சிறகடித்த பறவை

உச்சந்தலையில் எச்சமிட்டது

அன்று வனமற்ற மாநகரில் ஒற்றை மரம் முளைத்தெழுந்தது

இப்படித்தான் மனிதர்களின் தலைகளில் பழங்கள் பழுத்தன மகனே

வேர்களின் எடையைத் தாங்க இயலா மானுடம் 

தலையை அரிந்து வானில் எறிந்தது

இருப்பதிலேயே பெரிய பழம் 

இரவில் பழுக்கும் நிலாதான் மகனே

எறியப்பட்ட அத்தனை தலைகளும் 

ஒன்றாய்ச் சேர்ந்து எரியும் மகா கனியைச் 

சற்றும் புசிக்க விரும்பாதே மகனே

முண்டத்திற்கு வயிறு மட்டும் எதற்கென்று 

இரைப்பையையும் பிய்த்து எடுத்துவிட்டோம்

அழுகிய காலை தலைக்கு வைத்து உறங்கும் 

ஒரு ஜோடி காலணியில்

எத்தனை பாதைகள் தேய்ந்தனவோ

அதிர்ச்சியுறாதே மகனே

இது காலணியல்ல 

நம் இனத்தின் கடைசிக் கால்கள்.


மெழுகுவத்திச் சுடர்களின் நடுவே


தொலைந்த செம்மறி ஆட்டைத் 

தன் வெண்தாடிக்குள் யேசு தேடுகையில்

இரண்டு மெழுகுவத்திச் சுடர்களின் நடுவே

ஜெபமாலையைக் கவ்விப் பறக்கிறது வெண்புறா

நீண்டு வளர்ந்த தாடி

ஆலஞ்சடையாய்ப் பூமியெங்கும் வேர்விட

கிழிந்த செருப்பைத் தைத்தல்

பலாச்சுளைகளைக் கூறு போடுதல்

பூண்டுகளைப் பாலித்தீனில் இறுக்கி முடிதல்

மண்ணொட்டிய வேர்க்கடலைகளைப் படியளத்தல்

அத்தனையும் அதன் நிழலில் சம்பவிக்க

தாடியிலிருந்து தன்னைப் பிடுங்கியவர்

உலகின் ஒவ்வொரு மனிதரிடமும் சென்று

செம்மறியை விசாரிக்கையில்

கோடை முடிவுற்றது

நடுங்கும் பற்களுடன் தெருவிளக்கொளியில்

ஒருக்களித்துப் படுத்திருந்தார் யேசு

நடுக்கத்தின் மீது

கம்பளியைப் போர்த்தினான் ஒரு வழிப்போக்கன்

யேசுவின் உடல்

இடைவிடாது கத்துகிறது...


உடைந்த கண்ணாடியில் சூர்யோதயம்


தன்னை விரித்து உறங்கும் சிறுவனை

இறுக்கிப் போர்த்தியிருக்கிறது பாய்

இன்னும் திறக்கப்படாத பிரியாணிக் கடையின் முன் 

மியாவ்... மியாவ்... சத்தம்

அந்தச் சத்தத்தின் மீது ரொட்டியை வீசியும்

மியாவ் மியாவ் நின்றபாடில்லை

மின் சாதனப் பெட்டியின் பின்புறம் சிறுநீர் வெப்புராளம்

தொப்புளைத் திறந்து பழுப்பு நிறப் பணப் பையை உருவியவள்

ஆய்ந்து எறிந்த முருங்கைத் தண்டினால் முதுகு சொரிகிறாள்

கருமையான குறுந்தடியை ஊன்றி ஒட்டகம் போல் நடக்கும் மூதாட்டி

அவள் முதுகின் கீழ் தண்ணீர்ப் போத்தல் சலசலக்கிறது.

குன்றின் வடிவக் கோதுமை மாவை உருட்டிப் பிசைகிறான்

ஈரமற்ற மாவின் மீது அவன் வியர்வைத்துளிகள் விழுந்த பிறகுதான்

பிசைதல் இலகுவானது.

எடைக்கல்லால் துலாக்கோலினைச் சரிபார்த்தவன்

கிழிந்த அட்டைப் பெட்டியால் தரையைக் கூட்டுகிறான்

பின் இரும்பு முறமுள்ள நெளிந்து அழுக்கடைந்த ஈயச்சட்டியைச் சுமந்து

கிழக்கு திசையை நோக்கிப் புகையை ஊதுகிறான்

அப்போதுதான்

பாழடைந்த கட்டடத்தின் உடைந்த கண்ணாடியில் சூரியன் உதயமானது.


விதைப்பையைச் சூரியனில் காயவைப்பவன்


எஞ்சிய கிளையில் தூளி ஆடுகிறாள் சிறுமி

கால் நுனியால் பூமியை அள்ளிச் சுமந்து

முன்னும் பின்னுமாய்த் திசைகளை ஆட்டுகிறாள்

சிதறி விழாது காலிடுக்கை இறுக்கிப் பிடித்திருக்கின்றன 

கடுகளவிலான பூமிகள்

தக்குதீன்கான் தெருமுனைச் சுவரோடு கால்பந்தாட்டமாடும் சிறுவன்

துருப்பிடித்த இரு மின் இணைப்புப் பெட்டியின் நடுவே

சராயை அவிழ்த்துச் சிறுநீர் பெய்கிறான்

பெய்தலினிடையே `தனி வீடு 18 லட்சம்’ எஞ்சிய சுவரொட்டியைக் கிழிக்கிறான்

அவனற்றுச் சுவரோடு ஆடி 

ஆட்டோவின் அடியில் பதுங்கிய பந்தை

மியாவ் சத்தம் உதைத்துத் தள்ளியது

இரும்புக் கம்பிகளை உடுத்தியிருக்கும் சுவரில் பொருத்தப்பட்ட அடிகுழாய்

விதைப்பையைச் சூரியனில் காயவைத்தபடி 

மீன்பாடி வண்டியில் உறங்குபவன் மீது

புரண்டு படுக்கிறது நடைமேடை

பானை வயிற்றைத் தடவி வாசலில் நடமாடும் பெண்

வெற்றிலை எச்சிலால் தெருவையே சிவக்க வைக்கிறாள்

அருகே தானிய மணிகளை மேயும் கால்நடை

மூர்க்கத்துடன் குப்பைத்தொட்டியைத் தலையில் கவிழ்த்துக்கொள்கிறது

ஆலம் விழுதுகள் தூண்களாகிப் போன வீட்டினைப் பார்த்து

தலைகுனிந்தபடி வெகுநேரமாய்க் காத்திருக்கிறது இந்தச் சாலை.



Monday, September 5, 2022

மண்டையோடுகளின் பறையிசை


paintingvalley

சுடுகாட்டின் கிழக்கு மேற்காக நீளும்

முதுகெலும்பின் தண்டவாளங்களில் கபால ரயில்

எஞ்சிய புதைமேடுகளை மண்டியிட்டு மேய்ந்த வெள்ளாடுகள்

தேரினை இழுத்துக் கடிக்கின்றன   

சுடுகாட்டின் வடமேற்கைத் தரைமட்டமாக்கி

அளவைக் கல்லை நடும் அதிகாரி

பெயர்த்தெடுத்த மண்டை ஓடுகளை 

அரவை எந்திரத்தில் பொடியாக்குகிறான்

புதைமேட்டைக் கேரம் பலகையாக்கி

அடிப்பானால் காய்களை அடித்துக் கலைக்கும் சிறுவன்

உடைந்து நொறுங்கிய பெயர்ப்பலகையை

நெஞ்சோடு அணைத்துக் கதறியோடுகிறான்  

இரும்பு வேலியைத் தடுப்பாக்கிக்

கூடைப்பந்து விளையாடியவன்  

அம்மாவின் புதைகுழியைத் தேடி

பூமியைக் குத்தி வானத்தை உதைக்கிறான்

காய்ந்த சுள்ளிகளை விறகொடிப்பவள்

குழந்தை புதைந்த இடம்தேடி

பால் கனத்த மார்புகளை அறுத்துத் திசைகளை எறிகிறாள்

வடகிழக்கில் திறந்துகிடக்கும் புதைகுழியை

எட்டிப் பார்க்கிறேன்

சிறுகுட்டையில் தூண்டிலிடும் வாலிபன்

தண்ணீரின் எடையைத் தூக்க முக்கி முனகுகிறான்

கிழக்கை அலறவிட்டபடி

குப்பையைக் கிளர்ந்து தின்னும் வெண்பன்றிகளைக்

கல்லெடுத்து விரட்டும் வயோதிகன்

லுங்கியைத் தூக்கியபடி புதரில் மறைந்தான்

சாராயப் போத்தலைப் புதைமேட்டில் வைத்து

எரிந்து உதிரும் ஊதுபத்தியைக் குனிந்து பார்த்தபடி

கண்ணீர் சொரியும் பெண்ணின் அருகே 

அவளின் மகன் தானும் தலைகுனிந்து நிற்கிறான்

மூலக்கொத்தளம் சுடுகாட்டுக்குள் நுழையும் தங்கரதம்

மண்டை ஓடுகளில் பறையிசைக்கிறது ஆரவாரத்துடன்



Thursday, September 1, 2022

உப்பலையில் கரையும் மாநகரம்

 

pinterest


கக்கத்தில் ஒன்றும் கையில் மற்றொன்றுமாய்

விளக்குமாற்றைச் சுமந்து 

தேங்கிய மழைநீரில் தலைகீழாய் நகர்பவள் 

முகக் கவசத்தைக் கழற்றி எச்சில் பெய்கிறாள் 

மழைநீரின் கொள்ளளவு உயர்கிறது

மினுங்கும் நாவற்பழங்களுக்குப் 

பாடப் புத்தகங்களைக் கிழிப்பவள்

சடுதியில் கொலுசுமணிகளைத் திருகுகிறாள்

கடுகுநிற மணிக்கட்டுகள் 

கழன்று கழன்று விழுந்து வானை முட்டி

மழைத்தாரைகள் சிந்திய நடைமேடையில் உருண்டோடுகின்றன 

உடைந்து நெளிந்த பூக்கடைப் பேருந்து நிழற்குடையின் கீழ்

இளஞ்சிவப்பு சேலை உடுத்திய மூதாட்டி

ஒற்றைக் கண்ணில் நீர்வடிக்கிறாள்

நைந்த வெண்மேகக்கோணியில் 

குவிந்த பலாக்கொட்டைகளின் மீது

ஈக்கள் ரீங்கரிக்கின்றன  

பெயர்ப் பலகையில் அமர்ந்த பறவை

ரீங்காரத்தில் எச்சமிடுகிறது

மற்றைக் கண்ணில் ஒழுகும் நீரில்

மெல்ல கரைகிறது இம்மாநகரம்

Thursday, August 18, 2022

ஒயினென்ற வார்த்தையைக் குடித்தல்

 


Fineartamerica

நடுநிசி நிலவு

ஜன்னல் கம்பிகளால் கோடுகோடுகளாய்க் கிழிந்திருந்தது 

கோடுகளை விலக்கிவிட்டு

தலையணையளவு பனுவலை வாசிக்கலானேன்   

பெருக்கெடுத்தோடும் வாக்கியங்களுக்கிடையே 

ஒயின் என்கிற வார்த்தை தென்பட்டது

கிறக்கமுற்று பக்கங்கள் மங்கலாகின

தேனில் அகப்பட்ட சிற்றெறும்பாய் அச்சொல்லில் மீது

கொஞ்சம் கொஞ்சமாய் எகிற எத்தனித்தேன்

மாறாகக் கொஞ்சம் கொஞ்சமாய் மூழ்கத்தான் முடிந்தது

மூழ்கடிக்கப்படுவது உறுதியான பின்

முழுவதுமாய் முழுக ஒப்புக்கொடுக்க

குடித்து அடுக்கப்பட்ட வெற்றுப் போத்தல்களை உருட்டினேன் 

ஐந்து போத்தல்கள் ஒன்றையொன்று உரசும் ஒலிகளில்

அக்கம்பக்கத்துக் குடியிருப்புகளின் மஞ்சளொளி எரிந்தணைந்தது

கண்ணாடிச் சில்லுகளில் எஞ்சிய ஒயினைக் கைகளால் அள்ளமுடியாது

நாக்கினால் உறிஞ்ச முற்பட்டேன்

மிகப் பிரமாதமான உறிஞ்சலில் சில்லுகள் செக்கச் சிவந்தன

அச்சில்லில் கிழித்த சதைத் துண்டங்களை பெப்பர் தூவி வறுத்துத் தின்றேன்

அதிகாலையில் எழுந்த மகள்

குங்குமத்தை வீடெல்லாம் கொட்டிப் பரப்பியது யாரென்று வினவுகிறாள்

அதானே என்ற அதற்றலில் தொடையைத் தட்டினேன்

தையல் கிழிந்து குங்குமம் சிந்தச் சிந்த 

அந்திச் சூரியன்

ஜன்னல் கம்பிகளால் கோடுகோடுகளாய்க் கிழியத் தொடங்கியது

 




Thursday, August 11, 2022

தண்டவாளத்தைச் சள்ளிடும் மிருகம்

sunnewsonline

முன்னிரவை இழுத்துச் செல்ல ஆயத்தமாகும் ரப்தி சாகர் ரயில்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில்

குப்பைகளில் மூழ்கிய முன்பதிவற்ற பெட்டியின் இருக்கைகளை 

அகவடியால் தூய்மைப்படுத்தும் போதுதான்

இருக்கைகளைப் பிடிக்கும் சமரைக் கண்டேன் 

வேர்க்கடலை ஓடு, பிய்த்து எறிந்த ரொட்டி, தேநீர்க் குவளை,

பான் மசாலா, குட்கா ஹன்ஸ் பொட்டலப் பைகளோடு 

எண்ணெய் வடியும் அயர்ச்சியான வடநாட்டு முகங்கள்

சுருங்கிய தோலுக்காய் ஒரேயோர் இருக்கை கேட்டு

அகதேசியாய்க் கையேந்துகிறான் சிறுவன்

பிளந்த ஆடிக்கரு இருக்கையை நனைக்கையில் 

வெகுநேரமாய்ச் சள்ளிட்ட மிருகம்

தண்டவாளத்தைக் கவ்வி விரைகிறது 


லக்கேஜ் வைக்குமிடத்தில் முழு உடலைப் பொருத்தித் தோல்வியுற்றவன்

குப்பை மீதே தன்னை விரித்துக்கொண்டான்

பெருகும் நாற்றத்திற்கு மூக்குகளைக் கழற்றிக் கைக்குட்டையில் ஒளித்துவைத்தபடி 

ஒடிந்த சன்னி நரம்புகளின் நகங்களோடு

அவனின் பாதங்கள் குப்பைத் துகளைச் சுமந்தபடி ஊஞ்சலாடுகின்றன  

காலியிடத்தில் துண்டை விரிப்பதற்குள்

கழிவு நீரைச் சொட்டிச் செல்லும் ஒரு ஜோடி காலணிகள்

அதன் ஓசையை வெறிக்கையில் 

லக்கேஜ் கம்பிகளுக்கிடையே ஆடும் சாம்பல் நிறத் தொட்டில்

நிகழ்காலத்தைக் கடந்த காலத்திற்குள் அழைக்கிறது


செல்போன் வெளிச்சத்தில் காலணிகளைத் தேடியெடுத்தவன் 

தாழ்ப்பாலற்ற கழிவறையை நோக்கினான்

ஒரு கையால் இடுப்பையும் மறு கையால் குண்டியையும் 

தாங்கியபடி நிற்கும் வரிசை 

குட்டி ரயிலைப் போல் நீண்....டு செல்கிறது

நீல நிறக் குப்பியைத் தட்டி 

கைரேகை தேய கசங்கும் கஞ்சா 

இரு இருக்கைகளுக்கு நடுவே 

ஷூட் கேஸை வைத்து உறங்கியவனை எழுப்பி 

சூரியனின் சோம்பலை முறிக்கிறது


கழுத்தொடிய உறங்கி விழும் மலையாளி

அவ்வப்போது விழித்து 

மனைவியின் இருப்பைப் பரிசோதித்துக்கொள்கிறான்

உறக்கத்தை அடகு வைத்த ரயில் பெட்டி

கஞ்சாவின் நறுமணத்தில் தள்ளாடுகிறது

இரவு தன் உடையை அவிழ்க்கும் திருப்பூர்ச் சந்திப்பில் 

இளைப்பாறும் ரயில் திசையை முடுக்குகிறது

வட நாட்டு வாலிபர்கள் அமர்ந்த இருக்கைகளை

உள்ளூர்ச் செய்தியில் வெகுநேரமாய்த் தேய்த்துப் பார்க்கிறான்

கஞ்சா வாசம் குறைந்தபாடில்லை

ரயிலே தேய்ந்துவிடும் அளவுக்கு மீண்டும் தேய்க்கலானான் 

நன்கு விடிந்த பொழுதில்

தன்னருகே அமர்ந்த யுவனைக் கண்டு

முகக் கவசத்திற்குள் புன்னகைத்தாள் 

யுவனுக்கும் புன்னகைக்கும் நடுவே 

காலைச் செருகினான் அவள் கணவன்

கோவைச் சந்திப்பு மென்சாரலில் நனைந்தது ரப்தி சாகர்

வழுக்கும் நடைபாதையில் இறங்கி நடந்த போது 

ஜன்னலில் புன்னகைத்தது வட நாட்டுச் சுருங்கிய முகம்

கையசைத்தபடி நானும் புன்னகைத்தேன் 

கணத்தில் திசைகளைக் கண்டு நடுக்கமுறுகிறான் மலையாளி

மழையில் நீராடிய ரயில் புழு

மேற்கு திசையை வளைத்துச் சுருட்டிச் செல்கிறது

அதிரும் தண்டவாளம் எங்கு தொடங்கி எங்கு முடியுமோ... 


Friday, July 22, 2022

``என் கால்கள் தான்தோன்றித்தனமாக அலைபவை'' – பச்சோந்தி

 


நேர்கண்டவர் : ஷங்கர்ராமசுப்ரமணியன்

நிழற்படம் : க.பாலாஜி

1984-ல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி என்னும் கிராமத்தில் பிறந்த கவிஞர் பச்சோந்தியின் இயற்பெயர் ராச.கணேசன். வேர்முளைத்த உலக்கை, கூடுகளில் தொங்கும் அங்காடி, அம்பட்டன் கலயம், பீஃப் கவிதைகள் ஆகிய தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். கணையாழி, விகடன் இதழ்களில் பத்திரிகையாளராகப் பணியாற்றிய அனுபவம் உள்ள பச்சோந்தி இப்போது நீலம் இதழில் பணியாற்றி வருகிறார். பீஃப் கவிதைகளை எழுதி அது தொகுப்பாக வெளிவரும் வேளையில் அதிலுள்ள சில கவிதைகள் வழியாக, பச்சோந்தியைத் தீவிரமான ஒரு குரலாக உணர்ந்தேன். இவருடைய பீஃப் கவிதைகள் தொகுதி, நூற்றாண்டு காணப்போகும் நவீனக் கவிதை வரலாற்றில் தனித்துவமானது. பார்ப்பவன் காட்சிகள் வழியாகவே, தனது விமர்சனத்தை நிகழ்த்தும் கவிதைப் பாணி இவருடையது. பீஃப் கவிதைகளிலும் இவர் உருவாக்கிய வெவ்வேறு விதமான காட்சிகள் என்னை ஈர்த்தது. பீஃப் கவிதைகள் வழியாகவே அன்றாட எதார்த்தத்தை நெருக்கமான காட்சிகளாக்கி, அந்த யதார்த்தத்தைக் கடந்த உணர்வை உருவாக்கிய பச்சோந்தி, சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ‘சென்னையின் விளிம்புநிலை வாழ்க்கை’ என்று சொல்லத்தக்க அடையாளத்துடன் ஒரு கவிதை வரிசையை எழுதிவருகிறார். பார்ப்பவன் காட்சிகள் வழியாக நடத்தும் நாடகம் தீவிரம் கொண்டு, கூடுதலான மாயத்தன்மையை இந்த வரிசைக் கவிதைகளில் பார்க்கிறேன். அதையொட்டி பச்சோந்தியிடம் ஒரு நேர்காணல் நடத்துவதன் வழியாக, அவரது கவிதை உலகம் மேலும் நெருங்கும் என்ற அடிப்படையில் ஓர் உரையாடலை நடத்துவதற்கு நினைத்தேன். நேரிலும் எனக்கு நன்கு பரிச்சயமான பச்சோந்தி, பரிச்சயமில்லாத உக்கிரத்துடன் ஒவ்வொரு கேள்வியிலும் வெளிப்பட்டிருக்கிறார். கோபம் எதற்கு, நிதானம் நிதானம் என்று சொல்லியும் அவர் அப்படியாக வெளிப்பட்டிருக்கிறார். மிகத் தனியாக, மிகத் தனிமையாக இந்தப் பதில்களில் அவர் வெளிப்பட்டிருக்கிறார். அவரது தனிமையின் உலகை எனது கேள்விகள் ஊடுருவாதது மட்டுமல்ல, ஸ்பரிசிக்கக் கூட முடியாத தோல்வியையும் அடைந்துள்ளன. பதில்களின் வழியாகப் பச்சோந்தி வெற்றியடைந்திருக்கிறார். பெருந்தொற்றின்போது, விகடன் நிறுவனத்திலிருந்து முறைக்கேடாக வேலைநீக்கம் செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களில் ஒருவரான பச்சோந்தி, பணிநீக்கம் செய்யப்பட்ட மற்றவர்கள் யாரும், தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க வல்லாதிக்கம் கொண்ட நிறுவனம் ஒன்றோடு போராட முன்வராத நிலையில், தனியொரு நபராகப் போராடி ஆறுதலான இழப்பீடையும் தற்போது பெற்றுள்ளார். இந்த நேர்காணலில் தன் கவிதை வீட்டின் உள்ளிடங்களையும் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளார். அந்த வகையில் இந்த அனுபவம் எனக்குப் பெறுமதியானது.   

உங்கள் கவிதைகளில் வெளிப்படும் மொழி இறுக்கி நெரிக்கப்பட்ட ஓர் உணர்வைத் தருகிறதே? 

சட்டியில் இருப்பதுதான் அகப்பையில் வரும். மனம் என்னும் சட்டியில் அன்பு இருந்தால் அன்பு, வெறுப்பு இருந்தால் வெறுப்புதான். நம் காலத்தில் யாரிடமும் அமைதியில்லை, யாரிடமும் நிறைவு இல்லை, யாரிடமும் நிலைத்த தன்மையில்லை. சக மனிதருடன் ஏன் வீட்டில் உள்ளவர்களோடுகூட எந்த அளவுக்கு உரையாடுகிறோம்? எதிரில் தென்படும் மனிதரின் முகத்தை நேருக்கு நேராக எங்கே பார்க்கிறோம்? யாரேனும் கேள்வி கேட்டால் அதற்குரிய பதிலைச் சொல்கிறோமா? மாறாக நாம் ஒன்றை அவரிடம் திணிக்கத்தான் முயல்கிறோம்? நம்முடைய வாழ்வே இறுக்கி நெரிக்கப்பட்ட ஒன்றாகிப் போனது. வாழ்வின் வெளிப்பாடுதானே மொழியும். ஆக, என் கவிதைகளிலும் ஆங்காங்கே இதன் தன்மை இருக்கிறதுதான். ஆனால், முழுவதுமாக என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.  

நீங்கள் இப்போது எழுதிவரும் சென்னை வரிசைக் கவிதைகளில் வானம்பாடித் தன்மையும் திரைப்பாடல்களிலேயே பழசாகிவிட்ட படிமங்களையும் தைரியமாகப் பயன்படுத்துகிறீர்கள். ஒரு சர்ரியல் ஓவியத்தன்மையும் இருக்கிறதாக உணர்கிறேன்…. 

சி.மோகனின்`நவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள்’ விகடன் தடம் இதழில் தொடராக வெளிவந்தது. அப்போது விகடன்.காம் பிரிவில் பணிபுரிந்துகொண்டிருந்தேன். என் அன்றாட அலுவல் பணிகளை முடித்துவிட்டுத் தடம் இதழில் இடம்பெறும் படைப்புகளைப் படித்துக் கொடுக்கும் பணிகளையும் செய்து வந்தேன். கிளாடு மோனோவின் இம்ப்ரஷனிஸம், பால் செசானின் பின் – இம்ப்ரஷனிஸம், வான்காவின் வெளிப்பாட்டியம், பால் காகினின் குறியீட்டியம், பிகாஸோவின் க்யூபிஸம், வாஸ்ஸிலி காண்டின்ஸ்கியின் அரூப ஓவியம் உட்பட பதினொரு ஓவியர்கள் அறிமுகமானார்கள். இவர்களில் `கனவின் புகைப்படங்கள்’ என்னும் தலைப்பிலான கட்டுரையில்  இடம்பெற்ற சல்வடார் டாலியின் ஓவியங்கள் பிரமிப்பைக் கொடுத்தன. ஏற்கெனவே பார்த்த சிலுவை, கடிகாரம், ஒட்டகச் சிவிங்கி, யானை, குதிரை போன்ற கருப்பொருள்களை வேறொரு கோணத்தில் அவை காட்டின. கனவுலகில் மட்டும் கண்டதை நேரில் பார்ப்பது போன்ற உணர்வைக் கொடுத்தன. `கனவுப் பிரதேசங்களையும் ஆழ்மன இயல்புகளையும் கலையில் வெளிப்படுத்துவதற்கான படைப்புச் செயல்முறைகளைக் கண்டடைவது’ என்ற சர்ரியலிஸத்தின் தீர்க்கமான குறிக்கோள்; டாடாவாதிகளை மட்டுமல்ல என்னையும் வெகுவாக ஈர்த்தது. மீசையால் எட்டுப் போடும் டாலியின் உருவத்தைத்தான் என் முகநூலின் புரொஃபைலில் பெரும்பாலும் வைத்திருப்பேன். `There is only one difference between a madman and me. The madman thinks he is sane. I know I am mad.’ என்கிற டாலியின் மேற்கோள் எனக்கு மிகப் பிடித்தமானது மட்டுமல்ல நெருக்கமானதுகூட. 

வானம்பாடித்தன்மை என்று நீங்கள் எந்த அர்த்தத்தில் சொல்கிறீர்கள் எனத் தெரியவில்லை. `கலை மக்களுக்கானது’ என்ற வானம்பாடிகளின் கருத்தில் உடன்படுகிறேன். பிறப்பு முதல் இறப்பு வரை எல்லாச் சடங்குகளிலும் திரைப்பாடலைக் கேட்டு வளர்ந்த வாழ்வியலைக் கொண்டவன் நான். அதன் பாதிப்பு என் கவிதையில் இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. பழைய படிமங்களைச் சுட்டிக் காட்டினால் `தைரியமாகவே’ அதுகுறித்து உரையாடலாம்.

பீஃப் கவிதைகளிலும் சரி, இப்போது எழுதிவரும் கவிதைகளிலும் ஒரு கருப்பொருளை மையமாக வைத்து, பூக்கட்டுவது போலக் கோத்துக்கொண்டே போவது உங்களுக்கு உகந்த வடிவமாக இருக்கிறதா? அதிலிருந்து வெளியே வருவதற்கு முயல்கிறீர்களா? அல்லது அதைத்தான் உங்களது வலு என்று கருதுகிறீர்களா? 

ஒரு கருப்பொருளா, ஓராயிரம் கருப்பொருளா என்பதை என் பயணம்தான் தீர்மானிக்கும். என் மூன்றாவது கவிதை நூலான `அம்பட்டன் கலயம்’ முதல் நூலைப் போன்றே என் கிராமத்தை மையமிட்டு உருவானதுதான். ஆனால், அக்காலகட்டத்தில் நிகழ்ந்த கஜா புயல், எட்டு வழிச் சாலை என்னும் இரு பெரும் சம்பவங்கள் என்னை நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய் என்று என் கன்னத்தில் அறைந்து கேட்டன. எனவே, கஜா புயலால் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்றேன். குறிப்பாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்குப் பயணப்பட்டேன். அங்கு வனங்களும் குடியிருப்புகளும் பறவைகளும் விலங்குகளும் பயிர்களும் நிலைகுலைந்திருப்பதைக் கண்டேன். 

சேலம் – சென்னை எட்டுவழிச் சாலைத் திட்டம் அறிவிக்கப்பட்ட போது அடிமலைப் புதூர் என்னும் மலைக் கிராமத்தில் உண்ணாமலை என்னும் மூதாட்டி காவல்துறையின் அடக்குமுறையை எதிர்த்து ஓங்கிய கை என்னை மிகவும் உலுக்கியது. மேலும், கிழங்கின் வேர்களையும் மரங்களைம் கட்டிக்கொண்டு அழுதனர். வயதான ஒருவர் கிணற்றுக்குள் குதித்தது என அக்காலகட்டத்தின் மக்கள் எதிர்ப்பு, பலவடிவங்களில் எதிரொலித்தது. கட்சி, இயக்கம், அதிகாரம், ஆயுதம் என எந்தப் பின்புலமும் இல்லை. என்னிடம் இருக்கும் கோபத்தை, ஆற்றாமையை வெளிப்படுத்த கிடைத்த ஒரே வழி என் எழுத்துதான். இப்படி என் கிராமம், கஜா புயல், எட்டு வழிச் சாலை, சென்னையின் விளிம்பு நிலை மனிதர்கள், கோயம்பேடு சந்தை எனப் பன்முகத்துடன் எழுதப்பட்டதுதான் அம்பட்டன் கலயம். ஆனால், அந்தப் பன்முகத்தை நான் தெரிவு செய்யவில்லை. பீஃப் கவிதைகளில் இடம்பெறும் முன்னறிமுகமற்ற பல பிரதேசங்கள் திட்டமிட்டது அல்ல. எழுதுவதுதான் என் வேலை, அதற்காக நான் மேற்கொள்ளும் பயணம், அதன் தன்மையை, வடிவத்தை சுவீகரித்துக்கொள்கிறது. பலம், பலவீனம் இரண்டும் சமவிகிதத்தில் என்னை ஊடாட்டும். குளிர்சாதன வசதியுள்ள அறையில் சுழலும் மின்விசிறிக்கும் கீழ் அமர்ந்து சங்கத்தையும் மேற்கத்திய தத்துவங்களையும் முற்போக்குக் கருத்தியலையும் நகல் எடுத்துக் கவிதை எழுதும் வித்தையில் துளியும் எனக்கு விருப்பமில்லை.

நான் கவிஞன் என்ற உணர்வை எப்போது அடைந்தீர்கள்… 

ஆயிரமாயிரம் தொன்மையான வரலாறு நம்முடையது என்று சொல்வதற்குக் கல்வெட்டும், கவிதையும்தாம் சான்றாக இருக்கின்றன. அக்காலக் கட்டத்தின் பண்பாடு, உணவு, உடை, இருப்பிடம், தொழில் என்று எதுகுறித்தும் கவிதைகள் மூலம்தான் அறிந்துகொள்கிறோம். மாபெரும் இலக்கியங்கள் படைத்த புலவர்களின் உண்மையான உருவம் நம்மிடம் இல்லை. ஒரு பக்கம் புனைவுகளுக்கு உண்மைத்தன்மையைக் கூட்டி புராணங்களை வளர்க்கிறோம். இன்னொரு பக்கம் உண்மையான வாழ்வை எழுதிச் சென்ற திருவள்ளுவருக்குப் புனைவான உருவம் கொடுக்கிறோம். மேலும் ஒரு படி சென்று வள்ளுவன் பார்ப்பனனா இல்லை பறையனா என்று சாதிய அடையாளத்தைத் தொடுக்கிறோம். முற்காலத்திலும் சமகாலத்திலும் கவிஞன் என்கிற உணர்வை அடைந்ததால் சமூகத்தில் என்ன நிகழ்ந்தது என்று தெரியவில்லை. அப்படியான உணர்வு எப்படி இருக்கும். அப்படியோர் உணர்வு எனக்கு இல்லை. இயல்பான மனிதருக்கு இருக்கும் அகந்தை, காதல், காமம், சிரிப்பு, அழுகை, பசி, சில்லறைத்தனம், உன்னதம் என எல்லாம் நேரத்திற்குத் தகுந்தபடி தோன்றி மறையும். இப்படி ஏதேதோ வந்துசெல்கிறது. ஆனால், நீங்கள் குறிப்பிடும் கவிஞன் என்கிற உணர்வு எப்போது வரும் என்று தெரியவில்லை. என் கிராமத்திற்கு இன்னும் வராத பேருந்தைப்போல இப்போதைக்கு அது வராமல் இருக்கட்டுமே.

இது மிகவும் புத்திசாலித்தனமான, அதேவேளையில் சுவாரஸ்மான பதில். சாமர்த்தியமாகத் தெரிந்தாலும் இது சரியான பதிலில்லை. உங்களுக்கு பொயட் என்கிற போதம் இருக்கு. இன்னும் சொல்லப் போனால் நீங்கள் பொயட்டைத் தவிர வேறு எதுவும் கிடையாது. அந்த உயிர்நிலையின் தன்மையைப் பற்றிக் கொஞ்சம் பேச முயற்சி செய்யுங்களேன் பச்சோந்தி. 

2012 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கல்லூரி நண்பருடன் விளம்பர நிறுவனம் ஒன்றை நடத்திக்கொண்டிருந்தேன். எல்லா வகையிலும் சமபலமற்ற இருவரில் பலமற்ற ஒருவன் எந்த அளவுக்கு அவமானப்படுவானோ, அகச்சிக்கலுக்கு ஆளாவானோ அத்தனையையும் அனுபவித்தேன். அப்படியான சூழலில் எனக்குக் கிடைத்த சிறு சிறு வருமானத்தில் புத்தகங்கள் வாங்க ஆரம்பித்தேன். தொடர்ந்து கிராமப் பின்புலம் சார்ந்த படைப்புகளையே அதிகம் வாசித்தேன். அவ்வாறான வாசிப்பில் `எங்கே நான், எங்கே என் கிராமம்’ என்ற தேடலில் ஏமாற்றமே எஞ்சியது.  ஒருமுறை என் கிராமத்தில் எடுத்த நான்கு நிழற்படங்களையும் போட்டோஷாப்பில் இணைத்து அதில் ஒரு கவிதை எழுதிக் கணையாழிக்கு அனுப்பினேன். `கவிதையாகவில்லை, படம் யோசிக்க வைக்கிறது’ என்னும் பதில் மின்னஞ்சலின் வழியாகக் கிடைக்கப் பெற்றேன். `படம் யோசிக்கவைக்கிறது’ என்னும் சொற்கள் மிகவும் ஆழமாகப் பதிந்துவிட்டன. அச்சொற்களை ஏந்திக்கொண்டு எழுத ஆரம்பித்தேன்.   

நா.முத்துக்குமாரின் `தூர்’ கவிதைதான் என்னாலும் நவீனக்கவிதையை நோக்கி நகர முடியும் என்கிற பெரும் நம்பிக்கையைக் கொடுத்தது. அவரின் `பட்டாம்பூச்சி விற்பவன்’ என்னும் கவிதை நூல் என் பால்ய காலத்தைப் பிரதிபலித்தாலும் போதாமை நிறைந்ததாக இருந்தது.  `மாடுகளின் காலடிச்சுவடுகள்’ என்னும் கவிதை இயக்குநர் ராம் நடத்திய காட்சி இணையதளத்தில் வெளியானது. இதைத் தொடர்ந்து `குடிசைக் குடைக்குள் குட்டை’ என்னும் கவிதை கணையாழியில் வெளியானது. இவை இரண்டும் என்னாலும் கவிதைகள் எழுத முடியும் என்னும் மிகப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்தன. ஒரு புறம் வியாபாரத்தில் அதிருப்தியும் மறுபுறம் பிரசுரம் பெற்ற கவிதைகளால் மிகப் பெரிய அக எழுச்சியும் உண்டாகின. வியாபாரமா, இலக்கியமா என்னும் கேள்வி தொடர்ந்து என்னைத் துரத்த ஆரம்பித்தது. இதனூடாக கணையாழியில் உதவி ஆசிரியர் பணி கிடைத்தது. ஒருகட்டத்தில் வியாபாரத்தைத் தூக்கி எறிந்துவிட்டு இலக்கியத்தைத் தெரிவு செய்தேன்.   

முதல் தொகுப்பு வெளியீட்டு விழாவில் கல்யாணராமனும் சீனு ராமசாமியும் நிகழ்த்திய உரை மிகவும் உற்சாகமாக இருந்தது. இந்நூலுக்கு அணிந்துரை எழுதிய பழமலய், குட்டிரேவதி இருவரும் என்னுடைய தனித்தன்மையைச் சிலாகித்தனர். கிட்டத்தட்ட ஏழு மாவட்டங்களில் நூல் அறிமுக விழா நடைபெற்றது. இந்நூலை வாசித்த செல்மா பிரியதர்ஸன் என்னை போனில் தொடர்புகொண்டு நேரில் சந்திக்க அழைத்தார். சாராம்சமாக இவர்கள் எல்லோரின் குரலும் `இவன் அசலானவன்’ என்று உரக்கச் சொன்னது.  

`இலக்கியம் சோறு போடுமா’ என்கிற தேய்ந்த சொல்லாடல் இன்றும் சமூகத்தில் உலவுவதைக் காண முடிகிறது. உணவு, உடை, இருப்பிடம், பணி, செல்வாக்கு, அதிகாரம், பொருளாதாரம், காமம் இவற்றோடு சாதி, மத அடையாளம் என அனைத்தையும் இலக்கியம் கொடுக்கிறது. இதன் படிநிலைகள் ஏற ஏற இலக்கியத்தைக் கைவிட்டுவிட்டு மற்ற அனைத்தையும் இறுக்கமாகப் பிடித்துக்கொள்ளும் போக்கு மிகவும் துல்லியமாக நடைபெறுகிறது. அவரவர் திறமைக்கு ஏற்ப, சாமர்த்தியத்திற்கு ஏற்ப அந்தந்த நிலையை அடைகின்றனர். கவிதை எழுதுவதையும் வாசிப்பதையும் தவிர்த்து வேறு எந்தச் சாமர்த்தியமும் எனக்குக் கைகூடவில்லை அல்லது அவற்றிற்கு நான் ஒப்புக்கொடுக்கவில்லை. இயல்பாகவே என் கால்கள் தான்தோன்றித்தனமாக அலைபவை. அவ்வாறான அலைக்கழிப்பில் என்னையே மறத்தலும் உலகையே உற்றுநோக்கலும் இரண்டும் நடக்கும். இரண்டாவது நிகழும்போது படைப்புகளாகின்றன. இரண்டாயிரம் ஆண்டு இலக்கிய வரலாற்றில் இன்னும் எழுதப்படாத வாழ்க்கை ஏராளம் உண்டு. அவற்றில் கொஞ்சம் என்னால் எழுதப்படும் என்னும் அபாரமான கனவு மட்டுமே சிறிதும் குன்றாது கனலாய் எரிகிறது. 

கவிதை எழுதுவதையும், கவிதைக்கான கருப்பொருளைத் தேர்ந்தெடுப்பதிலும் உங்களது முறைப்பாட்டைச் (process) சொல்லுங்கள்? 

பதின்ம வயதின் தொடக்க காலத்தில் என் கிராமத்தை விட்டுப் பெருநகரத்திற்குக் குடிபெயர்ந்தேன். அப்போதெல்லாம் தீபாவளி அல்லது பொங்கலுக்கு என வருடத்திற்கு ஒருமுறைதான் சொந்த ஊருக்குச் செல்லும் வாய்ப்பு அமையும். ஓரிரு வருடங்கள் அப்படியான சூழலும் இருக்காது. ஒவ்வொரு முறையும் கிராமத்திற்குச் செல்லும் போதும் விருப்பத்திற்குரிய யாரோ ஒருவர் இறந்து போயிருப்பர், ஏதோ ஒரு குடும்பம் வேறுவோர் ஊருக்கு இடம்பெயர்ந்திருக்கும், தாயம் ஆடிய திண்ணை வீடுகள் குட்டிச் சுவராகி இருக்கும், பசுமையான நிலம் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பாலையாகியிருக்கும். நான் பார்த்த மண்ணும் மனிதர்களும் எங்கே சென்றனர், எப்படி இந்த வெறுமை ஏற்பட்டது என்கிற கேள்விகள் எழும். இவர்களை மறுமுறைப் பார்ப்பேனா என்கிற ஏக்கம் இடைவிடாது என்னில் தேங்கிக் கிடந்தது. ஆனால் நாளாக நாளாக மண்ணும் மனிதர்களும் மேலும் மேலும் மர்மமாகின. பால்யத்தில் கண்ட கிராமத்தை, கிராமத்து மக்களை மீண்டும் காண முடியுமா என்கிற ஏக்கத்திலும் எத்தனிப்பிலும்தான் என் எழுத்து பிறந்தது. அப்படி முழுக்க முழுக்க என் கிராமத்தை மட்டுமே எழுதியதுதான் முதல் நூலான `வேர்முளைத்த உலக்கை’. இந்நூலை மட்டும் எழுதினால் போதும் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், ஒவ்வொரு முறையும் பல்வேறு விதமான இழப்பையும் நெருக்கடிகளையும் என் நிலமும் மக்களும் சந்திப்பதால் அவை என்னைத் தொடர்ந்து எழுத உந்துகின்றன. மற்றபடி முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்பதையெல்லாம் தெரிந்துகொண்டு நான் எழுதவில்லை. இப்படியான யுக்திகளை அங்கங்கே நிகழ்வுகளிலும் பலரின் உரையாடலின் வழியும் கேட்கிறேன். ஆனால், அது என்னவென்று தெரிந்துகொண்டு ரொம்பவும் மண்டைக்குள் ஏற்றிக்கொள்ளாமல் அப்படியே விட்டுவிடுவேன்.   

கவிதை ஒரு வாளாகட்டும் என்ற முழக்கத்துடன்தான் தலித் கவிதை கர்நாடகத்திலும் தமிழகத்திலும் பிறக்கிறது. உங்கள் கவிதைகளில் புகாரோ, சவாலோ, கேள்விகளோ, விசாரணையோ, பாதிக்கப்பட்ட தன்னிலையின் ஓலமோ சின்ன அளவில் கூட இல்லையே… 

தலித் என்னும் மராட்டியச் சொல்லுக்கு மண்சார்ந்த என்கிற பொருளுண்டு. கரிசல், வண்டல், நாஞ்சில், கொங்கு என்ற நிலப்பரப்பின் அடிப்படையில் எழுத்துகளைப் பிரிக்கும் போக்கு நவீன இலக்கியத்தில் உண்டு. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று திணைகளின் அடிப்படையில் சங்க இலக்கியம் உண்டு. தமிழ்ச் சமூகம் வரையறுக்கும் `தலித் இலக்கியம்’ இவற்றில் எந்த வகையைச் சேர்ந்தது. பொதுவாகச் சாதியின் அடிப்படையில் இதை அணுகுவதைத் தொடந்து பார்த்து வருகிறேன். ஏற்கெனவே இமயம் எழுப்பிய கேள்வியையே இங்கு நானும் கேட்க விரும்புகிறேன். பள்ளன், பறையன், சக்கிலியன் எழுதுவதுதான் தலித் இலக்கியம் என்றால் பார்ப்பனர் எழுதுவதைப் பார்ப்பன எழுத்து, பிள்ளைமார் எழுதுவதை பிள்ளைமார் எழுத்து, தேவர் எழுதுவதை தேவர் எழுத்து, கவுண்டர் எழுதுவதை கவுண்டர் எழுத்து இப்படி செட்டியார், முதலியார் எழுதிய எழுத்துகளை அந்தந்தச் சாதியின் அடையாளத்துடன் இதுவரை ஏன் வரையறை செய்யவில்லை.  

பள்ளிக்கூடத்திற்குப் படிக்கச் சென்றால் அங்கே இந்தச் சாதிப் பிள்ளைகள் எல்லாம் கையைத் தூக்குங்க அல்லது எழுந்து நில்லுங்க என்று சொல்கிறார்கள். எழுந்து நிற்பதாலும் அவமானத்தையே சந்திக்கிறோம். பணியிடங்களிலும் சாதி பார்த்துதான் என்ன வேலை தரலாம் என்கிற முடிவுக்கு வருகிறார்கள். எல்லாவற்றிலிருந்தும் விட்டுவிடுதலையாகி எழுத வந்தால் இங்கேயும் `தலித் கவிதை’ என்று முத்திரை குத்துவது எந்தவிதத்தில் நியாயம். இப்படியான சிந்தனையில், வரையறையில் முதலில் திருத்தம் தேவை. மற்றபடி வாள், முழக்கம் என்று தொடங்கிய உங்கள் கேள்வியில் அடுக்கடுக்காக இடம்பெறுகிறது நெடிய…… ஓக்கள்தான். 

உங்கள் கவிதை உலகத்தின் மீது தாக்கம் செலுத்திய கவிஞர்கள், படைப்பாளிகளைப் பற்றிச் சொல்லுங்கள்…

எந்தக் காலகட்டத்திலும் இல்லாத அளவுக்குக் கடந்த பத்தாண்டு காலமாய் மைய அரசின் ஆட்சியில் நிம்மதியற்ற வாழ்வை வாழ்ந்து வருகிறோம். எதையும் தட்டிக் கேட்கும் ஊடகங்களும் சனாதனத்திற்கு விலைபோய்விட்டன. எதுகுறித்தும் இங்கு இருக்கும் எழுத்தாளர்களுக்குக் கவலையில்லை. இன்னொரு பக்கம் நரன், வசுமித்ர போன்றவர்கள் `Banned poems’, `தடைசெய்யப்பட்ட புத்தகம்’ என்று வெறுமனே கவன ஈர்ப்பைக்கொண்டு காமெடி செய்கிறார்கள். தீவிரவாத அமைப்போ, மைய அரசோ அல்லது வேறு எந்த இயக்கமோ இவர்களின் படைப்பைத் தடைசெய்தனவா?. இப்படியான போக்கு சலிப்பையே உண்டு பண்ணுகிறது. இதையெல்லாம் மீறிப் பகடியை வெளிப்படுத்துவதுதான் இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த கலைவடிவம் என்பதெல்லாம் எவ்வளவு பெரிய கேலிக்கூத்து. 

தேவதச்சன், கோணங்கி, யவனிகா ஶ்ரீராம் இப்படியான மூத்தோரின் பாதிப்பில் கவிதைகள் எழுதத் தொடங்கும் போக்கைக் கவனிக்கிறேன். ஆளுமைகளின் தாக்கத்தில் கவிதை எழுத வரவில்லை என்பதை மீண்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். சமீபத்தில் சகக் கவிஞருடன் உடையாடும் போது `சிலர் மேற்கத்தியத் தத்துவங்களைக் கவிதையாக்குகிறார்கள், அதற்கு நேரிடையாக மேற்கத்திய தத்துவங்களையே படித்துவிடுவேன் அல்லவா’ என்றார். `நீங்கள் உட்பட சிலர், சங்க கவிதைகளையே எழுதிக்கொண்டிருக்கிறீர்கள் அதற்கு நான் சங்கக் கவிதைகளையே படித்துவிடுவேன் அல்லவா’ என்றேன். இப்படி நகல் எடுக்கும் தன்மையில் இருந்து விலகி சுய சிந்தனையோடு, எதற்கும் விலைபோகாத, சாதி மதப் பெருமிதமற்ற ஒருவரைத் தமிழில் இதுவரை கண்டதில்லை. 

என்னைப் பாதித்த கவிஞர்கள் என்று சொல்ல தமிழில் ஒருவருமில்லை. அப்படிப் பாதித்த ஒன்றிரண்டு பேரும் அதிகாரத்தின் கைக்கூலிகளாய், நான் வாள் எடுத்தவன், ஏர் பிடித்தவன் என்று சாதிப் பற்றாளராய், உழைத்து வாழத் தெரியாதவராய், சுய புத்தி இல்லாதவராய் இருக்கின்றனர். 

நீங்கள் நிறைய வாசிப்பவர்…மொழிபெயர்ப்பு இலக்கியம் உட்பட….அவர்களும் உங்கள் உலகத்தின் மீது தாக்கம் செலுத்தவில்லையா?

உலக இலக்கியம் படித்துவிட்டு நான் கவிதைகள் எழுத வரவில்லை. சிறுவயதில் என் ஊரின் கிழக்கே இருந்த கரந்தமலையில் இருந்து உதிக்கும் சூரியன், மாலையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் மறையும். இவ்விரண்டு மலைகள்தான் பூமியின் எல்லைகள் என்று சிறுவயதில் நினைத்திருந்தேன். அப்படியான நினைப்பினூடே மலைக்குச் சென்று தொரட்டிப் பழமும் நெல்லிக்காயும் பறித்துத் தின்றிருக்கிறேன். வளர, வளரத்தான் அதற்கு அப்பால் உள்ள நிலங்களை அறிந்துகொண்டேன். அதுபோல் எழுத வரும் போது உலக இலக்கியம் என்கிற பிரக்ஞை இல்லை. பிற்பாடு அப்படியான போக்கு இருப்பதை வாசிப்பின் ஊடே அறிந்துகொண்டேன். எழுத்து வேறு, வாழ்வு வேறு என்று பிரித்தறிய முடியாதபடி இயங்கும் படைப்பாளிகளை மிகவும் பிடிக்கும். இப்படிச் சொல்வதற்கு உலக அளவில் நிறைய பேர் இருந்தாலும் இப்போதைக்கு நினைவில் எழுபவர்களை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். `நான் இறக்கும் தறுவாயில் ஒரு கையில் மதுவும் மறு கையில் மாதுவும் இருந்தால்தான் என் ஆன்மா சாந்தியடையும் என்னும் கண்ணதாசனின் வனவாசம் என் பதின்பருவத்தில் அதாவது இலக்கிய உலகிற்குள் அறிமுகம் ஆகுமுன்னே என்னை மிகவும் பாதித்திருந்தது. பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இலக்கியம் வாசிக்கத் தொடங்கும் போது, கேரள நவீனக் கவிதையின் சொத்து என்று அறியப்படுகிற பாலச்சந்திரன் சுள்ளிக்காட்டின் `சிதம்பர நினைவுகள்’, தன் வீட்டை விட்டு ஓடி இந்தியாவெங்கும் சுற்றியலைந்து பத்தாண்டுகள் கழித்து மீண்டும் வீடு திரும்பிய பஷீரின் நாடோடித்தன்மை இப்போதும் சிலிர்ப்பை உண்டாக்குபவை. கண்ணதாசனின் தத்துவப் பாடல்களின் வழி அறிமுகமான சித்தர் பாடல்களும், `கடவுள் என்ன செவிடா’ என்று கடவுளின் இருப்பைக் கேள்விக்கு உட்படுத்தும் கபீர் பாடல்களின் மீதும் அளப்பரிய காதல் உண்டு. மதிவண்ணன் மொழிபெயர்த்த சரண்குமார் லிம்பாலேவின் `தலித் – பார்ப்பனன்’ என்னும் சிறுகதைகள் திருகலற்ற மொழியில் ராவாக இருக்கும். இக்கதைகள் என் படைப்புலகை இன்னும் கூர்மைப்படுத்தின. குறிப்பாக அந்த நூலில் இடம்பெற்ற `பசுவதை’ சிறுகதையில் இடம்பெறும் விமர்சனப் பாங்கு என் எழுத்தை மறுவிசாரணை செய்தது. 

அயல் இலக்கியத்தில் வ.கீதாவும் எஸ்.வி.ஆரும் இணைந்து மொழிபெயர்த்த `மண்ணும் சொல்லும் – மூன்றாம் உலகக் கவிதைகள்’, பிரம்மராஜன் தொகுத்த `சமகால உலகக் கவிதை’ நூலில் இடம்பெற்ற லத்தீன் அமெரிக்கக் கவிதைகள், அமரந்தா மொழிபெயர்த்த `சொர்க்கத்தின் அருகிலிருந்து வந்தவன்’ என்னும் லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள், யமுனா ராஜேந்திரன் தெரிவு செய்து தொகுத்த பாலஸ்தீனக் கவிஞர் மஹ்மூத் தர்வீஸின் `நான் மடிந்து போவதைக் காணவே அவர்கள் விரும்புகிறார்கள்’, ராமானுஜம் தொகுத்து மொழிபெயர்த்த `மண்டோ படைப்புகள்’ ஆகியவை என் வாசிப்பில் மிக அணுக்கமாகவும் நெருக்கமாகவும் உணர்ந்தவை. 6 வயது இருக்கும் போதே தான் பிறந்த பர்வே என்னும் கிராமத்தை இஸ்ரேலிய ராணுவத்தினரிடம் இழந்தவர் மஹ்மூத் தர்வீஸ். மேலும், இவர் கிராமத்தின் சவக்குழிகள், சிதைவுற்ற எலும்புகள் மீது இஸ்ரேலிய ராணுவம் தார்ச்சாலை அமைத்தது. இவ்வாறான துயரம்தான் இங்கும் நடைபெறுகிறது. இவரின் `எனது அன்னை தரும் ரொட்டிக்காக ஏங்குகிறேன்’ என்னை மிகவும் உலுக்கியது. 13 வயதில் கிராமத்திலிருந்து என் தாயைப் பிரிந்து சென்னைக்கு வந்த நான் இந்த 37 வயதில் என் தாய்மடிக்காக, அவள் பார்வைச் சூட்டின் தகிப்புக்காக இன்னும் ஏங்கிக்கொண்டிருக்கிறேன்.

இன்னொரு பக்கம் பார்ப்பனர்களாலும் பிள்ளைமார்களாலும் என் ஊரின் வரைபடம் சுருங்கிக்கொண்டே செல்கிறது. ஆயிரம் காலத்துக் கோயிலை சாதிய பலத்தாலும் அரசியல் பலத்தாலும் பொருளாதார பலத்தாலும் தங்களின் வசமாக்கி எங்களின் குரல்வளையை நெருக்கிக்கொண்டே செல்கிறார்கள். இதற்கு எங்கள் ஊரைச் சேர்ந்தவர்களும் கைக்கூலியாய் இருப்பது அவலம். இந்த இடத்தில் `எங்கள் நிலத்திலிருந்து வெளியேறுங்கள்’ என்னும் தர்வீஸின் குரல் நினைவுக்கு வந்து செல்கிறது. யார் என்னைப் பாதித்தாலும் எனக்கான வலியை, கொண்டாட்டத்தை, போராட்ட வடிவத்தைத் தனித்துச் சொல்லும் திராணி என்னிடம் உண்டு. இவர்களின் படைப்புலகில் இருந்து ஒருபோதும் இரவல் பெறமாட்டேன். பாதித்தவை குறித்து உரையாட நிறைய உண்டென்றாலும் `துயரம் ஒரு மங்கிய வெள்ளைப் பறவை’ என்னும் தர்வீஸின் வார்த்தைகளோடு உங்களிடமிருந்து தற்போதைக்கு விடைபெறுகிறேன் ஷங்கர்.

(ஜுலை 2022 திணைகள் இணைய இதழில் வெளியான நேர்காணல்)

  பேச்சுக்குரலில் நவீனப் பட்டினப்பாலை   `கபால நகரம்’ பச்சோந்தியின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பென்று நினைக்கிறேன். அவருடைய முதல் தொகுப்பு, ‘வே...