Thursday, March 18, 2021

உன் முத்ததிற்கு என் இடுப்பளவு உயரம் மகளே!




ஏன் என்னை இவ்வளவு காதலிக்கிறாய் மகளே; என் அம்மாவும் உன் அம்மாவும் என்னைக் காதலிப்பதைவிட. என் அம்மா காட்டுமிராண்டித்தனமான கணவனோடும் உன் அம்மா நாடோடித்தன்மையான கணவனோடும் வாழ சபிக்கப்பட்டவர்கள். சகிப்புத்தன்மையைத் தன் தோலாய் உடுத்திக்கொண்ட இருவருக்கும் என்னைப் பிரிதல் என்பது இயல்பாகிவிட்டது. உன்னால் மட்டும் என் பிரிவைத் தாங்கிக்கொள்ளமுடியவில்லையே ஏன்? 

நான் வீடுதிரும்பும் நள்ளிரவில் உன் அம்மாகூட உறங்கிவிடுகிறாள். நீ ஏன் விழித்தே இருக்கிறாய். சாப்பிட்டு முடித்து மொட்டைமாடியில் படித்துக்கொண்டிருக்கையில் பக்கங்களின் ஒளியை நீயும்கூட உற்றுப்பார்த்தபடியே இருக்கிறாய். சற்று நேரத்தில் உட்கார்ந்தபடியே தூங்கிவிழுந்தாய். உள்ளே போய் தூங்குமா என்றேன். என் மடிமீது தலைவைத்து அங்கேயே படுத்துக்கொண்டாய். கண்கள் பக்கங்களைப் பார்த்துக்கொண்டிருந்தாலும் கைகள் உன் நெற்றியில் விழுந்த தலைமுடியைக் கோதிக்கொண்டிருக்க நீ உறங்கிப்போனாய் மகளே! 

முன்னொரு நாள் கிராமத்து வாசலில் நான் அமர்ந்திருக்க, எல்லோரும் திண்ணையில் அமர்ந்திருந்தனர். நீயோ என் கன்னத்தை நோக்கி முத்தமிடவந்து தயங்கிபடி பின்வாங்கியது ஏனம்மா. நான்கூட``உன் அப்பாகிட்ட ஏன் தயங்குற, இது நம்ம வீடுதானே" என்று விளக்கிக்கூறவும் தவறிவிட்டேன். ``அப்பா என்கூட படுப்பா" என்கிறாய். ``கொஞ்சம் உக்காரு பேசலாம், என்னை விட்டுட்டு ஊருக்குப் போன உங்கூட கா விட்டுடுவேன், என்னைக் குளிப்பாட்டி விடு, தலைதுவட்டிவிடு, சாப்பாடு ஊட்டிவிடு, ஜட்டி போட்டுவிடு" போன்ற வார்த்தைகள் என்னைச் சுற்றிச் சுற்றி வருகின்றன. நீ கொடுக்கும் முத்தம் கடலில் ஒரு மழைத்துளி விழுவதுபோல் அல்லது ஒரு துளியில் கடல் கலப்பது போல். 

உன் அப்பனால் நவீனக் கலாச்சாரத்தோடு ஒன்றிப்போக முடியவில்லை மகளே! பழைமையைத் தொங்கிக்கொண்டே அலைகிறான். எல்லோருடனும் சகஜமாகப் பேசிப் பழகாமல் தனித்தும் இறுக்கத்தோடுமே அலைகிறான். இதனால், நேசிப்பதாய் வருபவர்களும் தெறித்து ஓடுகிறார்கள். இந்தத் தனிமையும் இறுக்கமும் உன்னிடம் மட்டும் தானாகவே உடைந்துபோகிறதே மகளே! என் பள்ளி நாள்களில் எத்தனை நண்பர்கள் என்னைத் தேடிவருவார்கள் என்று சொன்னால் நீயேகூட நம்பமாட்டாய். நீ என்னைப் போல் இல்லை மகளே. எதையும் பேசவேண்டிய நேரத்தில் தெளிவாகவே பேசுகிறாய். கூர்மையான அறிவோடும் இருக்கிறாய். எதிர்த்துக் கேள்வி கேட்கிறாய். இதெல்லாம் யாரிடமிருந்து கற்றுக்கொண்டாய் எனக் கேட்டால், ``எல்லாம் உங்கிட்ட தான்ம்பா" என்கிறாய். 

தெருவில் நாம் இருவரும் நடக்கும்போது அப்பா நான் வளர்ந்துட்டேன்ல என்கிறாய், ஆமாம் என் இடுப்பளவு வளர்ந்துவிட்டாய். இன்னும் வளருவாய் மகளே!

No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...