Thursday, March 18, 2021

பீஃப் கவிதைகளுக்கு கவிஞர் ரமேஷ் பிரேதன் எழுதிய பின்னட்டைக் குறிப்பு



இன்றைய இந்தியக் காலத்தில் பீஃப் என்பது ஓர் உணவுப் பொருள் இல்லை; அதுவோர் உணர்வுப் பொருண்மை. உணர்வைப் பொருண்மை செய்யும் வகைப்பாட்டில் வெளிப்படும் கவி.பச்சோந்தியின் நான்காம் தொகுப்பான ’பீஃப் கவிதைகள்’ பிரம்மனின் உடம்புக்கு வெளியில் வாழும் மக்களின் பண்பாட்டு மானுடவியல் தரவுகளைத் திரட்டித் தருகிறது. ஒரு நாவலையும் ஆவணத் திரைப்பதிவையும் தன்னுள் திணித்துக்கொண்டிருக்கும் இத்தொகுப்பு, தமிழ்க்கவிதை நெடும்பரப்பில் நாவின் சுவை நரம்புகள் தெறிக்க மாட்டிறைச்சியை சூடு பறக்க வறுத்துக்கொட்டிப் பரத்துகிறது. நகுலனின் சாக்லேட் கவிதைகள் போல பச்சோந்தியின் பீஃப் கவிதைகள். ஆம், பார்ப்பனக் கவிதையியலிலிருந்து வெளியேறிய தலித் கவிதையியலின் விடுதலை அழகியலின் புதிய உச்சம். இதுவொரு கவித்துவக் கலகப் பனுவல்.


பொலிப்பில் தவிக்கும் மகளைக் காளையுடன் ஏறித்தழுவவிட்டு, கருத்தரித்தவளைப் பத்தியப் பக்குவம் பார்த்து, சூல் வயிறு கனக்கும் இரவுகளில் உறக்கம் அறுத்து, முக்கிப் பிதுக்கி வெளித்தள்ளும்போது சரிந்த அடிவயிறை அழுத்தமாகத் தடவிக்கொடுத்து, நிற்கத் தடுமாறும் குழந்தையைத் தாங்கிப்பிடித்துத் தாய்முகம் காட்டும்; தீட்டைப் பொருட்படுத்தாதச் சமூகமே மாட்டை வணங்க வளர்க்க தின்னத் தகுதியும் உரிமையும் கொண்டது. மாறாக, குருதி பாலாய்த் திரியக் கறந்து, பாலைத் தயிறாக்கி வெண்ணெய் கடைந்து உருக்கி நெய்யாக்கித் தின்னும் சமூகத்திற்குப் பசுவைத் தெய்வமாய் வணங்க உரிமையில்லை. மாட்டிலும் இறைமை கண்டு மாட்டிறைச்சியிலும் இறைமை காண்பதே உயிரியல் அறம்.

பறைச்சேரி, சூத்திரச்சேரி, பார்ப்பனச்சேரி கடந்து இந்தியச்சேரியில் திரண்ட மாடுகள் பன்னாட்டு அறுவைக்கூடத்தில் தலைக்கீழாய்த் தொங்கியபடி இத்துணைக்கண்டத்தில் தாம் கடந்துவந்த வாழ்க்கையை அசைபோடுகின்றன. அன்றைய யாகச்சாலையில் வெட்டப்பட்டு அஃனி குண்டத்தில் வறுத்துத் தின்னப்பட்ட தாம் மீட்கப்பட்டு இன்றைய கோச்சாலையில் அடைக்கப்பட்டு பன்னாட்டு வர்த்தக ஏற்றுமதிச் சரக்காகி உலகில் முதலிடத்தில் ஆர்யவர்த்தத்தை ஏற்றிவைத்த பீஃப் அரசியலைத் தம் வாழ்வின் இறுதியில் விளங்கிக்கொண்டன. 

தொகுப்பின் ஒவ்வொரு கவிதையாகப் பேசிக்கொண்டேயிருக்கலாம்; இந்திய வாழ்க்கை பற்றிய குறிப்பில் மாடுகளை எழுதுவதா மனிதர்களை எழுதுவதா? அஃறிணைக்கும் உயர்திணைக்கும் அரசியல் ஒன்றே காண். ‘திருப்பிப் போட்ட கேள்விக்குறிக் கொம்பு’ என எழுதும் பச்சோந்தியின் நெற்றியில் முளைத்த கொம்பைப் பற்றி பிறகு எழுதுகிறேன்.

No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...