Tuesday, March 30, 2021

கரியப்பிச்சி

வளைந்த வலது காலால் தரைதேய்ந்தபடி நடக்கும் கரியப்பிச்சி இரண்டு சினை ஆடுகளை மேய்ச்சல் நிலத்துக்கு ஓட்டிச்சென்றார். இரண்டும் வெவ்வேறு நிறம். கறுப்பு ஒன்று; செவலை ஒன்று. 

கறுப்பின் கால்தடங்களைப் பின்தொடர்ந்தே செவலை செல்லும். சிறிது நேரம் பிரிந்திருக்காது. ஆதலால், செவலையோ கழுத்துக் கயிறோடு பின் அலையும். செவலையின் கயிற்றைக் கறுப்பாட்டுக் கயிற்றோடு இணைத்துக் கிளுவை முள்ளின் தண்டில் கட்டிவைப்பார் கரியப்பிச்சி. கோரப்புற்களையும் அறுகம்புற்களையும் மேய்ந்து பின் கிளுவை முள்ளின் முக்கூட்டு இலைகளையே தின்னத்தொடங்கும். சற்று உயரமான இலைகளை முன்னங்கால்களால் கவ்வியபடியே சாய்ந்து சாய்ந்து தின்றுகொண்டிருக்கையில் மூக்கில் முள்தைக்க வலியில் அண்ணாந்து வானை வெறித்தது. 

நடக்கவே சிரமப்படும் கரியப்பிச்சி கட்டிப்போட்டுதான் மேய்ப்பார். வழிதவறி வெள்ளாமைக்காட்டில் மேய்ந்தால் ஓடிச்சென்றோ வேகமாய் நடந்தோ அவரால் விரட்ட முடியாது. வளைந்த ஒற்றைக்காலை எளிதில் தூக்கவோ மடக்கவோ முடியாது. பல ஆண்டுகளாகவே நின்றபடியேதான் வெளிக்குப் போவார். அப்படிப் போகும் போது அவரின் முக்கலும் முனகலும் அருகில் இருப்போரைக்கூடக் கலங்கடிக்கச் செய்யும். வயிற்றுப் போக்குப் போகும் தருணங்களில் காலை அகன்று விரிக்கமுடியாது. இதனால், தொடை வழியே வழிந்தொழுகும் நாற்றத்தைத் தாங்கமுடியாமல் கண்களிலிருந்து வழியும் கண்ணீர் கன்னத்தில் படாமல் தரையை நனைக்கும். 

திண்ணையில் கால்களைத் தொங்கப்போட்டுக்கொண்டுதான் சோறு தின்பார். சாப்பாடு, தண்ணீர் எல்லாம் அவர் அமர்ந்திருக்கும் இடத்திற்கே வரும். ஒருநாளும் அவராக தண்ணீர் மொண்டோ சோறு போட்டோ சாப்பிடமாட்டார். ஆனால், தன் சாப்பாட்டை தான் மட்டும் தின்னாமல் வாசலில் வெப்பச்சூட்டைக் கொத்திக்கொண்டிருக்கும் கோழிகளுக்கு எறிவார். அப்பருக்கைகளைப் பங்குபோட வரும் காக்கைகளைக் கொத்தப் பறக்கும் கோழிகள். அக்கொத்தலில் இருந்து தப்பி வீட்டின் மீது அமரும் காக்கைகளுக்கு ஓடுகளின் மீது சோற்றைக் குவித்துவைப்பார். 

நண்பகல் வெயிலின் கள்ளியோரமாக ஆடுகள் கால் நொண்டியபடி கொட்டத்துக்குத் திரும்பிக்கொண்டிருந்தன. ஆடுகளைப் பின்தொடர்ந்துவரும் கரியப்பிச்சி தண்ணீர் இல்லாமல் மேயக்கூட மாட்டிக்கிறது என்று சலிப்பும் வெறுப்பும் கலந்த குரலில் சொன்னார். அந்தச் சலிப்பு மேயாத ஆடுகளின்மீதும் வெறுப்பு மேயும் ஆடுகளுக்குத் தண்ணீர்கொண்டுவரக்கூடாதா என்றபடி குடும்பத்தின்மீதும் வந்தவை. இதை உணர்ந்துகொண்ட கரியப்பிச்சி மகன் `சரி வாங்க தண்ணீர் வைப்போம்' என்றபடி ஆடுகளைப் பிடித்துக் கொட்டத்தில் கட்டினான். பின் சார்ஜர் ஏறிக்கொண்டிருந்த செல்போனை எடுக்கச் சென்றான். 

திண்ணையில் அமர்ந்திருந்த கரியப்பிச்சி ஆட்டுக்குத் தண்ணீர் வைங்கம்மா என்று சற்று அதட்டலுடன் சொன்னார். மீண்டும் `கொஞ்சம் பொறுமையாக இருப்பா வைக்கிறேன்' என்று அவரின் மகன் சொன்னான். தன் பேரனுக்குச் சோறு ஊட்டிக்கொண்டிருந்தாள் அவரின் மகள். பேத்தி அதே திண்ணையில் தூரி ஆடிக்கொண்டிருந்தாள். தூரியாடியவள் கரியப்பிச்சியின்மேல் மோதிவிட்டாள். அவர் கடும் ஆத்திரத்துடன் நாக்கைத் துறுத்திக்கொண்டு கண்ணுமுழியை உருட்டிக்கொண்டும் முழங்கையால் ஓங்கினார். இவ்வளவு கோபத்தை தன் அப்பா இதுவரை தன்னிடம் மட்டுமல்ல யாரிடமும் காட்டியதில்லையே என்று எண்ணினான். 

அப்பாவின் கோபத்தை நினைக்கையில் மகனுக்கும் கோபம் வந்தது. ஆனால், அதைத் தன் அப்பாவிடம் வெளிக்காட்டாமல் தன் மகளின் மீது காட்டினான். தொட்டிலைவிட்டு இறங்கு என்று சொல்லி அவளை அடித்தான். அதோடு விட்டுவிடாமல் தொட்டிலில் இருந்து இறக்கி வீட்டுக்குள் போகும்படி முதுகில் ஒரு குத்துக் குத்தி திறந்திருக்கும் ஒற்றைக் கதவின் வழியாக உள்ளே தள்ளினான். மகள் கதறி அழுதாள். பின் இரண்டு புத்தகங்களை எடுத்துக்கொண்டு கள்ளிநிழலோரம் நடந்துசென்றான். செல்லும்முன் தன் அப்பாவைப் பார்த்தான். திண்ணையில் ஒடுங்கிப்போய் அமர்ந்திருந்தார். அந்த ஒடுங்கல் அவரைத் தாக்கியதாகத் தோன்றவைத்தது. ஏதோ தவறிழைத்தவனாய்க் கள்ளிநிழலிலிருந்து திரும்பிவந்து கட்டிய ஆடுகளை அவிழ்த்துக்கொண்டு அடித்த மகளிடம் வா காட்டுக்கு ஆடுமேய்க்கப்போவோம் என்று அழைத்துச் சென்றான். 

முச்சந்தி வரை வேகமாக நடந்த ஆடுகள் அதைத்தாண்டி நடக்காமல் நின்றன. கயிற்றால் இழுக்கையில் எட்டுக்கால்களும் தரையைத் தேய்த்துக்கொண்டே நகர்ந்தன. இதற்கு முன் ஆடுமேய்த்தது எப்போது என்று யோசித்தான். சிறுவயதில் ஆடுமேய்த்தது. ஏன் இத்தனை ஆண்டுகளில் ஒருநாள் கூட ஆடுகளை மேய்க்கவில்லை. சென்னையில் வேலைவாய்ப்பால் சனி ஞாயிறுகளில்தான் ஊருக்கு வருவான். காலையில் வந்து மாலையில் வீடுதிரும்பிய நாள்கள்தான் அதிகம். அப்படி வரும் பொழுதுகளில் ஊரிலிருந்து வந்த களைப்பால் பாதிநாள் தூங்கிவிடுவான். தூங்கியெழுந்ததும் குளித்துவிட்டு நண்பர்களைப் பார்க்க சீக்கிரமாகவே திண்டுக்கல் கிளம்பிடுவான். ஒரு முழுநாள் ஊரில் இருந்ததுகூட கிடையாது. இப்போது ஊரடங்கு காலம் என்பதால் ஒரு மாதத்துக்கும் மேலாக ஊரில் இருக்கிறான். ஆடுமேய்க்கும் அப்பாவுக்குச் சோறுதண்ணீர் கொண்டுபோவதோடு சரி. இப்போது ஆடுகள் வரமறுப்பது ஒருவகையில் அப்பாவிடம் தான் தோல்வியுற்றதைப் போல் உணர்ந்தான். ஆனால், ஏதோ ஓர் உணர்வு எழுந்து இல்லை இதில் தோற்றுவிடக்கூடாது என்று சிறிது தூரம் இழுத்தபடியே ஆட்டை ஓட்டினான். பிறகு தானாகவே நடக்க ஆரம்பித்தன. 

உலோக மரம் நிறைந்த காட்டில் வேலியோரமாகக் கட்டிவைத்தான். ஆடுகள் மேயாமல் கத்தின. இது மேலும் அப்பாவிடம் தோலியுற்றதை உறுதிப்படுத்தின. பயந்து, இல்லை நாம் இதில் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்று யோசித்தான். பின், கையில் இருந்த புத்தகங்களை மகளிடம் கொடுத்துவிட்டு அருகில் இருந்த உலோக மரத்தை நோக்கி நடந்தான். அது சமீபத்தில் பெய்த மழைக்குச் செழித்து வளர்ந்திருந்தது. நின்றபடி எக்கும் கிளைகளை ஒடித்துவந்து போட்டான். பாதி மட்டுமே தின்றது. பின் புளியமரத்தில் பூக்களற்ற குறுங்கிளைகளை ஒடித்துவந்து ஆடுகளுக்குத் தின்னக்கொடுத்தான். கொத்தாக மிச்சமின்றித் தின்றன. சரி இன்று ஆடுகளை மேய்த்துவிடுவோம் என்ற நம்பிக்கை பிறந்தது. அப்போது அங்குவந்த அக்கா ஆட்டை அவிழ்த்தாள். ஏன் என்று கேட்கையில் `முட்கிளைக்குள் ஆடு சிக்கிக்கொள்ளும் பிடித்து வேறு இடத்தில் கட்டுவோம்' என்றாள். 

 `அப்பா என்ன செய்கிறார்' என்றதும் சாப்பிட்டுக்கொண்டு இருப்பதாகச் சொன்னாள். 
அப்போதுதான் சற்று நிம்மதியாக இருந்தது. 

 `தூரி ஆடும்போது அவர் எலும்பில் பட்டுவிட்டதுபோல' என்றான். 

 `ஆமாம் உடம்பெல்லாம் எலும்புதானே இருக்கு பாவம் வலித்திருக்கும்' என்றாள். 

 `சரி பாப்பாவைக்கூட்டிக்கொண்டு வீட்டுக்குப் போ' என்றான். 

எப்போதும் நான் தானே கோபப்படுவேன் தம்பி ஏன் இப்படிக் கோபத்தை வெளிப்படுத்தினான் என்று அக்கா நினைத்திருப்பாள். தான் பேசவேண்டியதை தம்பி பேசிவிட்டான் என்று ஒருவகையில் அக்கா மகிழ்ச்சியடைந்திருப்பாள். எப்போதும் அன்பும் அக்கறையும்கொண்ட தம்பி இப்படி கோபப்பட்டுவிட்டானே என்று மறுபுறம் வேதனையும் அடைந்திருப்பாள். 

ஆடுகளை அவிழ்த்துவிட்டான். கறுப்பாடு மேயாமல் ஓடியது. அதன் பின்னே செவலையும் ஓட வீட்டுக்கு ஓடிவிடுமோ என்கிற அச்சத்தில் மீண்டும் கட்டிவைத்தான். ஆடுகட்டிய கிளுவை முள்ளின் உச்சியில் கோவாக்கொடி படர்ந்திருந்தது. ஆனால் எட்டும் தூரத்தில் இல்லை. அதன் கீழ்க்கிளையை வளைத்துப் பார்த்தான். அப்படியிருந்தும் மேல்முனை அசையக்கூடவில்லை. தடிமனான கிளுவைக்கிளையின் மேல் கால்வைத்து ஏறலாம் என்று பார்த்தால் கைப்பிடிக்கத் தோதுவாக இல்லை. ஒருவழியாக கோவாக்கொடியைப் பறித்துக்கொடுத்தான். சற்று நேரத்தில் கறுப்பாடு கழியத்தொடங்கியது. அதன்பின் முன்போல் அல்லாமல் மெதுமெதுவாக மேய்ந்தது. சற்றுநேரத்தில் அம்மா அங்கு வந்தாள். 

 ``என்னப்பா நீ ஆடுமேய்க்கிற அப்பா எங்க போனார்" என்று கேட்டவரிடம் நடந்தவற்றைச் சொன்னான். 

 ``அந்த ஆளுக்கு யார்கிட்ட எப்படிப் பேசணும்னே தெரியாது" என்று சொன்னபடியே ``என்னப்பா ஆடு இப்படிக் கழியுது" என்றாள். 

ஒரு குச்சியை எடுத்து கழிந்ததைக் கிண்டிப்பார்த்தார். அது குடலைப்போல் இருந்தது. இன்னும் கண்ணுக்கு அருகில் எடுத்துப் பார்த்து ``கறவக்குட்டி வீசியிருச்சு போல" என்றாள். 

``அப்படின்னா என்னம்மா" என்றான். 

 ``சினை ஆட்டைக் கூட மேயும் ஆடுகள் முட்டினால் உள்ள இருக்கும் குட்டி கழிவா வெளியில வந்திடும்" என்றாள். 

``சரி மேய்ந்தது போதும் வீட்டுக்கு ஓட்டிச் சென்று இலைதழையைக் கட்டுவோம்" எனச் சொல்ல வீடடைந்தோம். 

வீட்டுக்கு வந்ததும் மாதுளை பிஞ்சு, கொய்யா பிஞ்சு, ஆவாரம்பிஞ்சு, நாட்டுக்கருவேல இலை ஆகியவற்றை அம்மியில் இடிச்சு அரைத்து கழிந்த ஆட்டுக்குக் கொடுத்தாள். 

``என்ன மாமா தாத்தாவைச் சொன்னீங்க. பாவம் கொட்டத்தில் போய்ப் படுத்துக்கிட்டார். வாங்க சாப்பிடலாம் என்று கூட்டிவரவும்தான் வந்தார்" என்றாள் மனைவி. 

``நான் ஒண்ணும் சொல்லலை. பாப்பாவைத்தான் அடித்தேன்" என்றான்.

கிழக்கே இருந்து முகத்தைத் தொங்கப் போட்டபடியே வந்தார் அப்பா.

``என்னப்பா எங்க போன என்று விசாரித்தபடி இறுக்கத்தைத் தளர்த்தினேன். ஆடு மேய்க்கப் போனால் சாயங்காலம் வரை ஏன் காட்டிலேயே இருக்கிற. இடையில் வந்து சோறு தண்ணி சாப்பிட நினைக்கமாட்டியா? உன் உடலையும் வருத்திக்கிட்டு ஆட்டையும் வருத்திக்கிறியே. ரொம்ப கஷ்டப்பட்டு ஏன் இப்படி ஆடு மேய்க்கிற. உன்னப் போல ஆடுமாடு மேய்க்கிறவங்க இடையில் வந்து தண்ணிக்கு விட்டுக் கட்டுறாங்க. அவுங்களும் சோறு தண்ணி சாப்பிட்டுக் கொஞ்ச நேரம் படுத்திருந்துட்டுப் பிறகுதான் திரும்பவும் ஆடுமாடுகளை ஓட்டிப் போறாங்க. நீ என்னடான்னா போனா போனமேனிக்குக் காட்டுலயே கிடக்குற" என்றான். சரி சரி இனிமேல் அப்படியே செய்கிறேன் என்பதுபோல தலையை அசைத்தார். 

ஒருமுறை மாமாவின் தோட்டத்தில் இருந்தான். அங்கு குளிக்கவந்தார் கரியப்பிச்சி. குளிக்கவருவதாக அவர் சொன்னால்தான் பிறருக்குத் தெரியும். கையில் சோப்பு இருக்காது. தோளில் துண்டு இருக்காது. குளிக்கவரும் வேளையில் மட்டுமல்ல பெரும்பாலும் சட்டை போட்டிருக்க மாட்டார். மாற்றிக்கொள்ள வேறு துணியும் எடுத்துவரமாட்டார். அவரின் கருத்த மேனி ஆங்காங்கே கரும்புள்ளிகளுடன் வழுவழுப்பா அழுக்குபடிந்துகிடக்கும். சோப்பு போட்டுக் குளிக்கவேண்டியது தானே என்று கேட்டால், நான் என்னைக்குப்பா சோப்புப் போட்டேன். விவரம் தெரிந்த நாளிலிருந்து இப்படித்தான் குளிக்கிறேன் என்பார். பெரும்பாலும் பொழுது சாய்ந்தபின்தான் குளிக்கவருவார். அப்படி ஓர் உருவம் வருவதும் தெரியாது போவதும் தெரியாது. இருளோடு இருளாகவே நடமாடுவார். நீரோசையை வைத்தே குளிப்பதாகக் கண்டுகொள்ள முடியும். அடர்த்தியற்ற மீசை. தாடையில் மட்டுமே தாடி இருக்கும். மற்ற இடங்களில் மழித்ததுபோல்தான் இருக்கும். தொப்பையற்ற வயிறு வரி வரியாகவே காணப்படும். எவ்வளவு சாப்பிட்டாலும் நெஞ்சு அளவைத்தாண்டி வெளியே எட்டிப் பார்க்காது.

எப்போதும் ஆடுகள் கட்டும் கொட்டத்தில்தான் தூங்குவார். அக்கொட்டத்தில் அவருக்கெனத் தனியான இரும்புக் கட்டில் போடப்பட்டிருக்கும். மழைபெய்தால் ஓட்டு வீடுமட்டுமல்ல; கொட்டமும் ஒழுகும். குறிப்பாக அவர் கட்டிலின் தலைமாட்டில் ஒழுகும். அவ்வாறு ஒழுகும் போது எழுந்து அமர்ந்துகொண்டு ஒழுகும் மழையைக் கைகளால் வழித்து வழித்துக் கீழே விடுவார். ஆடுகளும் அடைகாக்கும் கோழியும் ஒழுகுகிறா என்று பார்ப்பார். அவை இருட்டில் இருப்பதால் அவற்றைத் தொட்டுப் பார்த்துதான் அறிந்துகொள்வார். அக்கொட்டத்தில் தேங்காய் நிரப்பிய சாக்கு மூட்டைகளோடு விறகுகளும் அடுக்கப்பட்டிருக்கும். துவைத்த துணிகள் காயும். இவை அத்தனையோடும்தான் கரியப்பிச்சி உறங்கியும் உறங்காமலும் முண்டிக்கொண்டிருப்பார்.

- பச்சோந்தி

No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...