கடலை நகர்த்துதல்
வெள்ளிக் கடல் நுரைகளில்
தன் தாயுடன் கால் நனைக்கும் சிறுவனைக் கண்டேன்
இருவரும் சேர்ந்து
அலைகளின் ஈரத்தில் சிப்பியைப் பொறுக்கினர்
கண்ணாடித் தொட்டியில் நீந்தும் மீனுக்குச் சேகரிப்பதாய்
சிறுவன் சொன்னான்.
கடலை நகர்த்தி நகர்த்தி
அலைகளைப் பொறுக்கலானேன்
பின் பரிச்சயமற்ற அவனின் கைகளில்
உள்ளங்கையளவு சிப்பிகளைப் பரிசளித்தேன்.
முலை வணக்கம்
சந்தன முலைகளால் சூரியனை வணங்கியவள்
சேலையில் தேங்கிய கடலை
கசக்கிப் பிழிந்து உலரவைக்கிறாள்
முன்னதாக
ஆடைகளைக் கரையொதுக்கிய அலைகள்
அவளை மட்டும் இறுக்கி அணைத்துத் தழுவின.
கிழக்கில் ஆடும் வால்
கடற்கரைப் புல்வெளியில்
செங்குத்தான இரண்டு கொம்புகள் மேய்கின்றன
செல்போனில் முகம் புதைத்தபடி
துண்டைக் கட்டி உள்நுழையும் ஆடவர்கள்
தண்ணீர்ப் போத்தலை நட்டுவைத்துக் குத்துக்காலிட்டனர்
ஒருவன்
வெகுநேரமாய்ப் புல்வெளியைக் கழுவிக்கொண்டே இருக்கிறான்
மற்றொருவன்
காலிப் போத்தலுடன் வெளியேறுகிறான்
அப்போது அடித்த பலத்த காற்றில்
கரையில் நழுவிய துண்டு
அலைகளில் மிதந்தலைகிறது
ஏதும் அறியா அவன்
நிர்வாண வீடியோவில் குதூகலிக்கிறான்
புற்களை விட அமோகமாய் விளைந்திருக்கும்
பாலித்தீன்களை மேய்ந்த மாடு
கிழக்கு நோக்கி வாலை ஆட்டுகிறது.
No comments:
Post a Comment