Monday, June 6, 2022

உடைந்த கண்ணாடியில் சூர்யோதயம்



மின்சாரப் பெட்டியின் அருகாமையில்
தன்னை விரித்து உறங்கும் சிறுவனை
இறுக்கிப் போர்த்தியிருக்கிறது பாய்
இன்னும் திறக்கப்படாத பிரியாணிக் கடையின் முன்
மியாவ் மியாவ் சத்தம்
அந்தச் சத்தத்தின் மீது
ரொட்டியை வீசுகிறான்
மியாவ் மியாவ் நின்றபாடில்லை.

தொப்புளைத் திறந்து 
பழுப்பு நிறப் பணப் பையை உருவியவள் 
ஆய்ந்து எறிந்த முருங்கைத் தண்டினால்
முதுகு சொரிகிறாள்
கருமையான குறுந்தடியை ஊன்றி
ஒட்டகம் போல் நடக்கும் மூதாட்டி
அவள் முதுகின் கீழ்
தண்ணீர்ப் போத்தல் சலசலக்கிறது. 

குன்றின் வடிவக் கோதுமை மாவை 
உருட்டிப் பிசைகிறான்
ஈரமற்ற மாவின் மீது
அவன் வியர்வைத்துளிகள் விழுந்த பிறகுதான்
பிசைதல் இலகுவானது.   

எடைக்கல்லால் துலாக்கோலினைச் சரிபார்த்தவன்
கிழிந்த அட்டைப் பெட்டியால்
தரையைக் கூட்டுகிறான்
பின் இரும்பு முறமுள்ள 
நெளிந்து அழுக்கடைந்த ஈயச்சட்டியைச் சுமந்து
கிழக்கு திசையை நோக்கிப்
புகையை ஊதினான்
அப்போதுதான்
பாழடைந்த கட்டிடத்தின் உடைந்த கண்ணாடியில்
சூரியன் உதயமானது.
 

No comments:

Post a Comment

  பேச்சுக்குரலில் நவீனப் பட்டினப்பாலை   `கபால நகரம்’ பச்சோந்தியின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பென்று நினைக்கிறேன். அவருடைய முதல் தொகுப்பு, ‘வே...