தண்டீஸ்வரம் பிரதான சாலையின் நடுவே
நசுங்கிய மாங்கனியை மிதித்தவன்
சற்று தொலைவில் பிதுங்கிக் கிடக்கிறான்
சேவல்கொண்டைகளாய் உதிர்ந்து கிடக்கும்
செங்கொன்றைப் பூக்கள்
ரத்தத் துளிகளாய்ச் சொட்டுகின்றன
அந்தச் சொட்டுகளைக் கூட்டிப் பெருக்கி
வண்டியில் ஏற்றும் துப்புரவுத் தொழிலாளி
செவக்கச் செவக்க வெற்றிலையை
வானில் இறைக்கிறார்
யாருமற்ற தேவாலய வாசலில்
வெகுநேரமாய் ஏந்தும் கைகளில் கொட்டியது
கருங்கற்களிலிருந்து வழியும் சிலுவையின் ரத்தம்
சிதறிய தேங்காய்ப் பருப்புகளை
முதுகெலும்புகள் காய்த்த விலங்கு கவ்விச் செல்கிறது
மட்கும் குப்பையை
அலகுகள் உடைந்த பறவை கொத்திப் பறக்கிறது
அடுக்கிய பழங்களை
காலிழந்த வண்டு ரீங்கரித்தபடி துளையிடுகிறது
வெகுநேரமாய் ஏந்திய கைகள்
காலியான தூக்கை வான்பார்த்து எறிந்தன
அப்போது ஆலய மணி ஒலிக்கத் தொடங்கியது
புறாக்களின் சிறகுகளால் நிறைந்தது வானம்.
No comments:
Post a Comment