ராட்டினமாய்ச் சுற்றும் குடையின் கீழ்
நடைமேடையை அள்ளித் தின்னும் சிறுவன்
வெற்றுத் தண்ணீர்ப் போத்தலைக் கவ்வியபடி
வான் நோக்கி நடனமிடுகிறான்
பதாகை கிழிந்த கம்பிகளுக்கிடையே சிக்கிய பறவை
விடுபடமுடியாமல் சிறகடிக்கிறது
மயில் தோகைகளைச் சுமந்து சென்றவன்
தன்னை விரித்து ஆடுகிறான்
மிக்ஸியில் அரைபடும் மாதுளங்கனிக்கு
ஐஸ்கட்டி உடைபடுகிறது
மேகங்கள் பொழியும் மாதுளம் மழையை
வாய் பிளந்து நாக்கடியில் சேகரிக்கிறது மாநகரம்
முன்சக்கரமற்ற துருப்பிடித்த மிதிவண்டி அருகே
நிரம்பி வழியும் குப்பைத்தொட்டி
அதன் உச்சியை இழுத்துச் செல்லும் பூனை
ஒவ்வொரு இரு சக்கர வாகனத்திலும் பதுங்குகிறது
இப்போது மாதுளம் மழை
பாலித்தீனில் வாய் வைத்த
மிருகத்தின் முதுகுத் தண்டில் பெய்கிறது
தன் உடலைக் குலுக்கி ஓடி
செல்போன் கடையின் தூசி படிந்த படிக்கட்டை
நக்குகிறது
அந்த நக்குதலின் மீது
தன் இரைப்பையைப் பகிர்ந்து வைத்த வயோதிகன்
நேர்க்கோட்டைப் போன்ற வானத்தின் அடியில்
அறுந்த கால்களைத் தைத்துக்கொண்டிருக்கிறான்.
No comments:
Post a Comment