Monday, June 6, 2022

மெழுகுவத்திச் சுடர்களின் நடுவே


தொலைந்த செம்மறி ஆட்டை

தன் வெண்தாடிக்குள் யேசு தேடுகையில்

இரண்டு மெழுகுவத்திச் சுடர்களின் நடுவே

ஜெபமாலையைக் கவ்விப் பறக்கிறது வெண்புறா.

நீண்டு வளர்ந்த தாடி

ஆலஞ்சடையாய்ப் பூமியெங்கும் வேர்கொண்டது. 

அதன் நிழலில்  

கிழிந்த செருப்பு தையலிடப்படுகிறது

பிளந்த பலாச்சுளை கூறுபோடப்படுகிறது

பூண்டுகள் பாலித்தீனில் இறுக்கி முடியப்படுகின்றன 

மண்ணொட்டிய வேர்க்கடலைகள் படியளக்கப்படுகின்றன.

தாடியிலிருந்து தன்னைப் பிடுங்கியவர்

உலகின் ஒவ்வொரு மனிதரிடமும் சென்று

செம்மறியை விசாரிக்கையில் 

கோடை முடிவுற்றது.

நடுங்கும் பற்களுடன் தெருவிளக்கொளியில்

ஒருக்களித்துப் படுத்திருந்தார் யேசு. 

அந்த நடுக்கத்தின் மீது

கம்பளியைப் போர்த்தினான் ஒரு வழிப்போக்கன்.

யேசுவின் உடல்

இடைவிடாது கத்துகிறது 

மே... 

மே... 

மே...


No comments:

Post a Comment

  பேச்சுக்குரலில் நவீனப் பட்டினப்பாலை   `கபால நகரம்’ பச்சோந்தியின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பென்று நினைக்கிறேன். அவருடைய முதல் தொகுப்பு, ‘வே...