Friday, June 3, 2022

எலும்புச் சுள்ளிகளின் கூடுகள்


சுரங்கப்பாதை நடைமேடையில் 

வரமிளகாய் காய்ந்துகொண்டிருந்தது.

அதன் காரத்தைக் கண்களில் கசக்கிய சாம்பல் நிற மிருகம்

வீசியெறிந்த கெட்டிச் சாம்பாரை 

நாவினால் பறித்துச் சுவைக்கையில் 

தொந்தியால் எட்டுவைத்தவன்

அச்சுவை மீது கஞ்சா நெடியை எறிந்தான். 

மேகங்களை வகிடெடுக்கும் உடைந்த கட்டிடத்திலிருந்து

எலும்புச் சுள்ளிகளைக் கவ்வியபடி சிறகடித்த பறவை

அவனின் உச்சந்தலையில் எச்சமிட்டது.

அன்று

வனமற்ற மாநகரில் 

ஒற்றை மரம் முளைத்தெழுந்தது.

இப்படித்தான் மனிதர்களின் தலைகளில்

பழங்கள் பழுத்தன மகனே.

வேர்களின் எடையைத் தாங்க இயலா மானுடம்

தலையை அரிந்து வானில் எறிந்துவிட்டது.

இருப்பதிலேயே பெரிய பழம்

இரவில் வரும் நிலாதான் மகனே

எறியப்பட்ட அத்தனை தலைகளும்

ஒன்றாய்ச் சேர்ந்து எரியும்

மகா கனியைச் சற்றும் புசிக்க விரும்பாதே மகனே

முண்டத்திற்கு வயிறு மட்டும் எதற்கென்று

இரைப்பையையும் பிய்த்து எடுத்துவிட்டோம்

அழுகிய காலை தலைக்கு வைத்து உறங்கும்

ஒரு ஜோடி காலணியில்  

எத்தனை பாதைகள் தேய்ந்தனவோ

அதிர்ச்சியுறாதே மகனே

இது காலணியல்ல

நம் இனத்தின் கடைசிக் கால்கள்.

No comments:

Post a Comment

  பேச்சுக்குரலில் நவீனப் பட்டினப்பாலை   `கபால நகரம்’ பச்சோந்தியின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பென்று நினைக்கிறேன். அவருடைய முதல் தொகுப்பு, ‘வே...