Thursday, June 16, 2022

துள்ளி வரும் ஏமாந்த நா



திருவான்மியூர் தீவுப் பூங்காவின் இரும்புக் கதவு
துருப்பிடித்திருக்கிறது
எஞ்சிய பகுதிகளையும் இளைக்கும் மாட்டின் கயிறு
இரு மின்கம்பங்களுக்கிடையே 
கேபிள் வயரில் பயணிக்கிறது அணில்
தீவு மூழ்கும்படி பூத்திருக்கும்
இளஞ்சிவப்புக் காகிதப் பூக்கள்
அதன் முள்ளில் ஆடுகிறது சிட்டுக்குருவி
வேர்களில் இரை தேடும் எலி
வாகனச் சத்தத்தில் ஒளிகிறது


சிறுநீர் நாற்றத்தில் நொங்கு விற்கிறான் 
தண்ணீர்ப் போத்தலில் முகங்கழுவிய அவன் மனைவி
கிழக்கை வணங்குகிறாள்
வெகுநேரமாய்த் தலைகோதும் மற்றொரு பெண்
குவிந்து கிடக்கும் வாகன உதிரிப் பாகங்கள் மீது
மூக்கை எறிந்தாள்
பின்பு மாட்டு மூத்திரத்தில் கோணியை விரித்து 
கூம்பு வடிவக் கொண்டைகளோடு 
தேங்காய்களை அடுக்குகிறாள்
தார்ச்சாலையை மறைத்திருக்கும் 
மாட்டுச் சாணத்தில் வாகனத் தடங்கள்
ஒலிக்காமல் கிடக்கும் கழுத்து மணியை உற்று நோக்கித்
தெருவிளக்கின் உச்சியில் அமர்ந்திருக்கிறது பறவை


சாலையோரத்தை அசைபோடும் கொம்புகளை
ஹாரன் சத்தம் இடைவிடாது எழுப்புகிறது
பூமி நடுங்க எழுந்து நகருகையில்
மூங்கில் கழி முதுகெலும்பை நொறுக்கியது
கதறலுடன் சந்தைக்குள் நுழைந்த மாடு
குட்டியானையில் பொறிக்கப்பட்ட 
தேசியக் கொடியின் பச்சையத்தைத் துழாவியது
குப்பை லாரியில் மீந்த காய்கறிகளை எட்டி எட்டிப் பார்த்து
ஏமாந்த நாக்கு 
துள்ளி வருகிறது 
தூரத்தில்




No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...