கண்ணாடிச் சில்லுகளால் தூரத்தை எறிந்தபடி
எஞ்சிய கிளையில்
தூளி ஆடுகிறாள் சிறுமி
கால் நுனியால் பூமியை அள்ளிச் சுமந்து
முன்னும் பின்னுமாய்த் திசைகளை ஆட்டுகிறாள்
சிதறி விழாது காலிடுக்கை
இறுக்கிப் பிடித்திருக்கின்றன
கடுகளவிலான பூமிகள்
தக்குதீன்கான் தெருமுனைச் சுவரோடு
கால்பந்தாட்டமாடும் சிறுவன்
துருப்பிடித்த இரு மின் இணைப்புப் பெட்டியின் நடுவே
சராயை அவிழ்த்துச் சிறுநீர் பெய்கிறான்
பெய்தலினிடையே
`தனி வீடு 18 லட்சம்' எஞ்சிய சுவரொட்டியைக் கிழிக்கிறான்
அவனற்றுச் சுவரோடு ஆடி
ஆட்டோவின் அடியில் பதுங்கிய பந்தை
மியாவ் சத்தம் உதைத்துத் தள்ளியது
சுவரில் பொருத்தப்பட்ட அடிகுழாய்
இரும்புக் கம்பிகளை உடுத்தியிருக்கிறது
விதைப்பையைச் சூரியனில் காயவைத்தபடி
மீன்பாடி வண்டியில் உறங்குபவன் மீது
புரண்டு படுக்கிறது நடைமேடை
பானை வயிற்றைத் தடவி
வாசலில் நடமாடும் பெண்
வெற்றிலை எச்சிலால் தெருவையே சிவக்க வைக்கிறாள்
குப்பைத்தொட்டியின் அருகே
தானிய மணிகளை மேயும் கால்நடை
குப்பைத்தொட்டியையும் சேர்த்தே விழுங்குகிறது
ஆலம் விழுதுகள் தூண்களாகிப் போன
வீட்டினைப் பார்த்து
வெகுநேரமாய்க் காத்திருக்கிறது
இந்தச் சாலை
எப்போதுதான் கடக்குமோ
No comments:
Post a Comment