Tuesday, June 14, 2022

நட்சத்திரங்களைக் கோத்தல்...



1

இந்த உலகின் சுவர் இரும்பாலானது

உடைந்த அதன் பெருந்துளையில் நுழைந்துதான்

ஓர் மிருகம் 

தன் இன்னோர் உலகத்தைக் கண்டடைகிறது

வெளியேற்றத்திற்கு முன்

எத்துணைக் கோடி முறை

சுவர்களையே சுற்றிச் சுற்றி வந்தது தெரியுமா

அந்நினைவுகளை அசைபோட நினைக்கையில் 

இப்பிரபஞ்சம் மங்கலாகிவிடுகிறது

2

நடைமேடையை விடச் சற்று உயரமாக வளர்ந்தவள்

பிவிசி குழாயில் கட்டிய நைந்த குடையின் கீழ்

நட்சத்திரங்களைக் கோக்கிறாள்

பின்னலை முடிய காத்திருப்போரின் எண்ணிக்கை

தண்டவாளம் போல் நீண்டு செல்கிறது

3

செங்கல் நிற சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே 

வெறுந்தரையில் படுத்து உருளும் சிறுமி

மயில் பீலியைக் கடித்துச் சுவைக்கிறாள்

குண்டியால் பூமியைத் தேய்த்தபடி

தாயின் திசையைத் துரத்தியவள்

காயத்தின் மீது மண்ணை அள்ளிப் பூசுகிறாள்

நறுக்கிய வெள்ளரிக்காய்களின் இடையே

குறுங்குச்சியைச் செருகியவள் 

நிற்காது அழும் குழந்தையை அள்ளி 

தன் இரு முலைகளையும் சேர்த்து ஊட்டுகிறாள்

4

No Parking பதாகை நிழலில்

வெட்டி வேர்களை சீசாவுக்குள் அடைத்து வைக்கிறாள்  

சீசாவை விற்ற ரூபாய் நோட்டை

மார்பின் நரைமுடியில் ஒளித்த அவள் கணவன்

இரண்டு சீப்பின் விலையை

அவள் மடியில் எறிகிறான்

கழுகு வட்டமிடும் பிரமாண்ட தேசியக் கொடி

மேற்கின் காற்றில் தேசத்தை அசைக்கிறது 

No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...