ராணுவ முகாம் பாடி கார்டு முனீஸ்வரர், மூச்சுக் காற்றின் நெருக்கடியால் சாலைக்கு இழுத்து வரப்பட்டார். தற்போது அவர் பல்லவன் சாலை அரச மரநிழலில். இடைவிடாத வாகன இரைச்சல் ஈஸ்வரனின் காதுகளைப் பிடுங்கிச் செல்கிறது.
II
கிழக்கு பார்த்த வாகனங்கள் சந்தனம் குங்குமிட்டுச் சாமந்தியைச் சூடின. அந்தச் சாமந்தியில் சிறிது பறித்து உள்ளங்கையில் திணிக்கிறான் பூசாரி. இறுதியில் வாகன உரிமையாளரிடம் உள்ளங்கையை ஏந்திய பூசாரி, உதடு பிதுக்கித் தலை கவிழ்கிறான்.
III
எலுமிச்சம் பழங்களைச் சக்கரங்களாக்கும் முனீஸ்வரன், சுருட்டைப் பற்றவைத்துக் குதிரையேறிச் செல்கிறான். அவன் காதிடுக்கில் செருகிய சாராய போத்தல் சலசலக்கிறது.
IV
சதுரமான கம்பி வளையத்திற்குள் விபூதியைத் துழாவும் விரல்கள், விபூதியின் மென்மையில் காணாமல் போகின்றன. கம்பிக்கூண்டில் அடைக்கப்பட்ட சேவல் வாழையிலையைக் கொத்தி இழுக்கிறது.
No comments:
Post a Comment