Monday, June 13, 2022

நடைமேடை 5 இல்


ஒட்டடை படிந்த வெளிச்சத்தில் ஒளிரும்

யாருமற்ற சுரங்கப் பாதை

கையேந்தியபடி படியில் அமர்ந்திருப்பவன்

கால்களைக் கழட்டி 

முதுகின் பின் மடித்து வைத்துள்ளான்

கண்ணாடி வளையலோசையில் 

புரண்டு படுக்கிறது நடைமேடை 

வானை உரசி வாயைப் பற்றவைத்தவன்

உதிர்ந்த மல்லிகைப் பூக்களைப் பொறுக்கித் தின்கிறான்

அந்தப் பொறுக்கலின் மீது பெய்கிறது

தூரத்து வாகன வெளிச்சம்

மல்லாக்க உறங்குபவன்

இடுப்புக்கும் கீழ் நுழைத்த வலக்கையை

எடுப்பேனா என்கிறான்

விண்மீனற்ற கருநீல வானின் அடியில்

உடைந்த பொம்மைகளாய்ச் சிதறிக் கிடக்கும் மானிடம்

பூமி வடிவ சிசிடிவி கேமராவின் கீழ்

வெகுநேரமாய் அழுகிறாள் 

வெகு

நேரமாய்....

தாம்பரம் ரயில் நிலைய ஒலிபெருக்கியில்

`சென்னை எக்மோர் வரை செல்லும் நெல்லை எக்ஸ்பிரெஸ்

இன்னும் சற்று நேரத்தில்

நடமேடை 5 ஐ வந்தடையும்.'

 


No comments:

Post a Comment

  பேச்சுக்குரலில் நவீனப் பட்டினப்பாலை   `கபால நகரம்’ பச்சோந்தியின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பென்று நினைக்கிறேன். அவருடைய முதல் தொகுப்பு, ‘வே...