Thursday, September 8, 2022

பச்சோந்தியின் 2 கவிதைகள் - தனிமை இதழில் வெளியானவை

 



நடனமற்றுத் தரையிறங்கும் ஆகாயம்


கோவிந்தப்ப நாயக்கர் தெருவில் நடந்துகொண்டிருந்தேன்.

இடிந்து நொறுங்கிய வீட்டின் எஞ்சிய சுவர்

வேர்களால் வேயப்பட்டிருந்தது.

அதன் மீது சாய்ந்திருக்கிறது

ஒரு முனை உடைந்த மூங்கில் ஏணி.

வெட்டுத் தழும்புகளுடன் நின்றிருக்கும் அரச மரத்தின்

பாதி உடைந்த கிளை

அக்கினி வெய்யிலில் எரிகிறது.

அந்த நெருப்பில் சுருட்டைப் பற்றவைக்கிறான்

வாயற்ற வயோதிகன்.

சுருள் சுருளாய் மேகங்கள் சஞ்சரிக்கையில்தான்

தொண்டையில் மடித்துவைத்திருந்த உதடுகள்

எட்டிப் பார்த்தன.

பழக்கூடையில் ஊன்றிய குடை

காற்றில் சாயாதபடி 

கண்ணாடி வளையல்கள் இறுக்கிப் பிடிக்க

மற்றோர் கையின் வளையலோசை

பலாச் சுளைகள் மீது அமர்ந்த ஈக்களை விரட்டுகிறது.

நடனமற்ற அரசின் பழுத்த இலை

ஆகாயத்தைத் தரையிறக்கும் பொழுதில்

ரத்தக்கறை படிந்த லுங்கியொன்று

நடைமேடை மீது தூங்கித் தூங்கி வழிகிறது.

சிலையாய் நிற்கும் ஜார்ஜ் மன்னன்

சுட்டாலும் பாதத்தை மட்டும் நகர்த்தாமல் 

மண்டையைக் கழட்டிக் கிரீடத்தைச் சொரிகிறான்.



 பத்ரியன் மலர்ச் சந்தையைப் பற்றவைத்தேன் 


பாரிமுனைப் பத்ரியன் மலர்ச் சந்தையை உரசி

சிகரெட்டைப் பற்றவைத்தேன்.

படங்களாய்க் குவிந்து கிடக்கும் கடவுள்களின் மீது

ஊதுவத்தியின் சாம்பல் படர்கிறது.

வட்டமான மூங்கில் கூடையில்

தாழம் பூக்களை அடுக்குபவனிடம்

வாசத்தை நுகரக் கேட்டேன்.

தென்னங்குருத்தைப் போன்ற இலையால்

நாசித் துளைகளை அடித்து விரட்டலானான்.

சற்றும் அசையாது

ஒரு வண்டைப் போல் சதா ரீங்கரித்தேன்.

நடுக்கமுற்ற அவன் தாய்

பூவைப் பிய்த்து என் திசை பார்த்து எறிந்தாள்.

கண்களால் கவ்விச்சென்று

மேற்கூரை இடிந்த வீட்டின் திண்ணையில் அமர்ந்து

முகர்ந்துகொண்டே இருந்தேன்.

நாசியின் விளிம்பில் ஒட்டிய

சாமை போன்ற மென்துகள்களை

நுனி விரலில் கிள்ளி எடுக்கப் பார்த்த போது

என் முதுகு தட்டப்பட்டது.

தட்டிய ஓசையைத் தேடினேன் 

ஆலம் விழுதுகளால் நெய்யப்பட்ட சுவர்தான் நின்றிருந்தது.

பாதி உடைந்த ஜன்னலில் எட்டிப் பார்த்தேன் 

நிழலில் காயவைத்த தாழம் பூவைப் 

பொடிசெய்யும் பசியற்ற வயிறு

வெந்நீரில் கொதித்த தாழம் பூவில்

பனைவெல்லத்தைக் கரைக்கும் தேகச் சூடு உள்ளவன் 

தாழம் பூ இலையை நெய்யில் வதக்கும் நீர்க்கடுப்பு உள்ளவன்

தாழம் பூ இலை கொதித்த நீரில் 

தொண்டையால் நீச்சலடிக்கும் தோல் நோயாளி

எண்ணற்ற நிழல்கள் 

மேற்கூரை இடிந்த சுவருக்குள்

மீண்டும் பற்றவைத்தேன்

மலர்ச் சந்தையை.

பச்சோந்தியின் 7 கவிதைகள் - திணைகள் இதழில் வெளியானவை


 

நின் அப்பம் சிறகுகளாலானது


தண்டீஸ்வரம் பிரதான சாலையின் நடுவே

நசுங்கிய மாங்கனியை மிதித்தவன்

சற்றுத் தொலைவில் பிதுங்கினான்

சேவல்கொண்டைகளாய் உதிர்ந்து கிடக்கும் செங்கொன்றைப் பூக்கள்

ரத்தத் துளிகளாய்ச் சொட்ட

கூட்டிப் பெருக்கி வண்டியில் ஏற்றும் துப்புரவுத் தொழிலாளி

சிவக்கச் சிவக்க வெற்றிலையை வானில் இறைக்கிறார்

யாருமற்ற தேவாலய வாசலில் வெகுநேரமாய் ஏந்தும் கைகளில் கொட்டும்

கருங்கற்களில் வழியும் சிலுவையின் ரத்தம்

சிதறும் தேங்காய்ப் பருப்புகளைக் கவ்விச் செல்லும்

முதுகெலும்புகள் காய்த்த விலங்கு

மட்கும் குப்பையைக் கொத்திப் பறக்கும் அலகுகள் உடைந்த பறவை

அடுக்கிய பழங்களை ரீங்கரித்தபடி துளையிடும் காலிழந்த வண்டு

வெகுநேரமாய் ஏந்திய கைகள் காலியான தூக்கை வான்பார்த்து எறிய

ஆலய மணி ஒலிக்கும் வானில் புறாக்களின் சிறகுகள்.


காற்றில் விளையும் நறுமணம்


மேட்லி சாலையில் முடிவுறாது நிற்கிறது

மாம்பல ரயில்நிலைய இரும்பு மேம்பாலம்

நெருப்புச் சில்லுகள் விழும் அதனடியில் 

கரும்பின் கணுக்களைச் சீவி அடிக்கட்டையை வெட்டி எறிகிறான்

எறும்புகள் மொய்க்கும் இனிப்பென்ற வார்த்தையில்

ஒரு கட்டு அறுகம்புல்லைப் 

பத்து ரூபாய்க்கு விற்பனை செய்பவள் 

நாவற்பழச் சுவை மீது உப்பைத் தடவுகையில்

வெய்யிலில் காயும் பூணூல்

தோல் நீங்கிய சுளைகளில் கண்களைச் செருகுகிறது

வாகனங்களுக்கிடையே ஊக்குகளை வயிற்றில் ஏந்தி விற்பவனிடம்

சந்தைக்கே நறுமணம் பூசியவள்

ஒரு கொத்து ஊக்குகளைக் கூடுதலாய் விலைக்கு வாங்கிச் செல்கிறாள்

நெருக்கடி மிகுந்த அங்காடித் தெருவில் 

மீன் வடிவப் பீப்பியை ஊதுகிறான் சிறுவன்

அது வளைந்து நீண்டு ஒலிக்கிறது

ஒருமுறை வானை இழுத்தும் மறுமுறை பூமியைத் தூக்கியும்

விளக்குகள் எரியா சிக்னலில்

கேள்விக்குறியைக் கைத்தடியாக்கிய பெரியார் சிலை

உச்சந்தலையில் காய்ந்த பறவையின் எச்சத்துடன்

முற்றும் தூசி படிந்துள்ளது.


இரைப்பையைப் பகிர்ந்து ஊட்டுதல்


ராட்டினமாய்ச் சுற்றும் குடையின் கீழ்

நடைமேடையை அள்ளித் தின்னும் சிறுவன்

வெற்றுத் தண்ணீர்ப் போத்தலைக் கவ்வியபடி

வான் நோக்கி நடனமிடுகிறான்

பதாகை கிழிந்த கம்பிகளுக்கிடையே

விடுபடமுடியாச் சிறகடிக்கும் பறவை

மயில் தோகைகளைச் சுமந்து சென்றவன்

தன்னை விரித்து ஆட

மிக்ஸியில் அரைபடும் மாதுளங்கனிக்கு உடைபடும் ஐஸ்கட்டி

மேகங்கள் பொழியும் மாதுளம் மழையை

நாக்கடியில் சேகரிக்கும் மாநகரம்

முன்சக்கரமற்ற மிதிவண்டி அருகே

நிரம்பி வழியும் குப்பைத்தொட்டி

அதன் உச்சியை இழுத்துச் செல்லும் பூனை

பதுங்கிச் செல்லும் வாகன நிழலில்

பாலித்தீனில் வாய் வைத்த மிருகத்தின் முதுகுத்தண்டில் 

மாதுளம் மழை பெய்ய

தன் உடலைக் குலுக்கி ஓடி

செல்போன் கடையின் தூசி படிந்த படிக்கட்டை நக்குகிறது

அந்த நக்குதலின் மீது

தன் இரைப்பையைப் பகிர்ந்து வைத்த வயோதிகன்

நேர்க்கோட்டைப் போன்ற வானத்தின் அடியில்

அறுந்த கால்களைத் தைத்துக்கொண்டிருக்கிறான்.


எலும்புச் சுள்ளிகளின் கூடுகள்


சுரங்கப்பாதை நடையில் வெய்யில் காயும் வரமிளகாய்

காரத்தைக் கண்களில் கசக்கிய சாம்பல் நிற மிருகம்

வீசியெறிந்த கெட்டிச் சாம்பாரை

நாவினால் பறித்துச் சுவைக்கையில்

தொந்தியால் எட்டுவைத்தவன் 

அச்சுவை மீது கஞ்சா நெடியை எறிந்தான்

மேகங்களை வகிடெடுக்கும் உடைந்த கட்டடத்திலிருந்து

எலும்புச் சுள்ளிகளைக் கவ்வியபடி சிறகடித்த பறவை

உச்சந்தலையில் எச்சமிட்டது

அன்று வனமற்ற மாநகரில் ஒற்றை மரம் முளைத்தெழுந்தது

இப்படித்தான் மனிதர்களின் தலைகளில் பழங்கள் பழுத்தன மகனே

வேர்களின் எடையைத் தாங்க இயலா மானுடம் 

தலையை அரிந்து வானில் எறிந்தது

இருப்பதிலேயே பெரிய பழம் 

இரவில் பழுக்கும் நிலாதான் மகனே

எறியப்பட்ட அத்தனை தலைகளும் 

ஒன்றாய்ச் சேர்ந்து எரியும் மகா கனியைச் 

சற்றும் புசிக்க விரும்பாதே மகனே

முண்டத்திற்கு வயிறு மட்டும் எதற்கென்று 

இரைப்பையையும் பிய்த்து எடுத்துவிட்டோம்

அழுகிய காலை தலைக்கு வைத்து உறங்கும் 

ஒரு ஜோடி காலணியில்

எத்தனை பாதைகள் தேய்ந்தனவோ

அதிர்ச்சியுறாதே மகனே

இது காலணியல்ல 

நம் இனத்தின் கடைசிக் கால்கள்.


மெழுகுவத்திச் சுடர்களின் நடுவே


தொலைந்த செம்மறி ஆட்டைத் 

தன் வெண்தாடிக்குள் யேசு தேடுகையில்

இரண்டு மெழுகுவத்திச் சுடர்களின் நடுவே

ஜெபமாலையைக் கவ்விப் பறக்கிறது வெண்புறா

நீண்டு வளர்ந்த தாடி

ஆலஞ்சடையாய்ப் பூமியெங்கும் வேர்விட

கிழிந்த செருப்பைத் தைத்தல்

பலாச்சுளைகளைக் கூறு போடுதல்

பூண்டுகளைப் பாலித்தீனில் இறுக்கி முடிதல்

மண்ணொட்டிய வேர்க்கடலைகளைப் படியளத்தல்

அத்தனையும் அதன் நிழலில் சம்பவிக்க

தாடியிலிருந்து தன்னைப் பிடுங்கியவர்

உலகின் ஒவ்வொரு மனிதரிடமும் சென்று

செம்மறியை விசாரிக்கையில்

கோடை முடிவுற்றது

நடுங்கும் பற்களுடன் தெருவிளக்கொளியில்

ஒருக்களித்துப் படுத்திருந்தார் யேசு

நடுக்கத்தின் மீது

கம்பளியைப் போர்த்தினான் ஒரு வழிப்போக்கன்

யேசுவின் உடல்

இடைவிடாது கத்துகிறது...


உடைந்த கண்ணாடியில் சூர்யோதயம்


தன்னை விரித்து உறங்கும் சிறுவனை

இறுக்கிப் போர்த்தியிருக்கிறது பாய்

இன்னும் திறக்கப்படாத பிரியாணிக் கடையின் முன் 

மியாவ்... மியாவ்... சத்தம்

அந்தச் சத்தத்தின் மீது ரொட்டியை வீசியும்

மியாவ் மியாவ் நின்றபாடில்லை

மின் சாதனப் பெட்டியின் பின்புறம் சிறுநீர் வெப்புராளம்

தொப்புளைத் திறந்து பழுப்பு நிறப் பணப் பையை உருவியவள்

ஆய்ந்து எறிந்த முருங்கைத் தண்டினால் முதுகு சொரிகிறாள்

கருமையான குறுந்தடியை ஊன்றி ஒட்டகம் போல் நடக்கும் மூதாட்டி

அவள் முதுகின் கீழ் தண்ணீர்ப் போத்தல் சலசலக்கிறது.

குன்றின் வடிவக் கோதுமை மாவை உருட்டிப் பிசைகிறான்

ஈரமற்ற மாவின் மீது அவன் வியர்வைத்துளிகள் விழுந்த பிறகுதான்

பிசைதல் இலகுவானது.

எடைக்கல்லால் துலாக்கோலினைச் சரிபார்த்தவன்

கிழிந்த அட்டைப் பெட்டியால் தரையைக் கூட்டுகிறான்

பின் இரும்பு முறமுள்ள நெளிந்து அழுக்கடைந்த ஈயச்சட்டியைச் சுமந்து

கிழக்கு திசையை நோக்கிப் புகையை ஊதுகிறான்

அப்போதுதான்

பாழடைந்த கட்டடத்தின் உடைந்த கண்ணாடியில் சூரியன் உதயமானது.


விதைப்பையைச் சூரியனில் காயவைப்பவன்


எஞ்சிய கிளையில் தூளி ஆடுகிறாள் சிறுமி

கால் நுனியால் பூமியை அள்ளிச் சுமந்து

முன்னும் பின்னுமாய்த் திசைகளை ஆட்டுகிறாள்

சிதறி விழாது காலிடுக்கை இறுக்கிப் பிடித்திருக்கின்றன 

கடுகளவிலான பூமிகள்

தக்குதீன்கான் தெருமுனைச் சுவரோடு கால்பந்தாட்டமாடும் சிறுவன்

துருப்பிடித்த இரு மின் இணைப்புப் பெட்டியின் நடுவே

சராயை அவிழ்த்துச் சிறுநீர் பெய்கிறான்

பெய்தலினிடையே `தனி வீடு 18 லட்சம்’ எஞ்சிய சுவரொட்டியைக் கிழிக்கிறான்

அவனற்றுச் சுவரோடு ஆடி 

ஆட்டோவின் அடியில் பதுங்கிய பந்தை

மியாவ் சத்தம் உதைத்துத் தள்ளியது

இரும்புக் கம்பிகளை உடுத்தியிருக்கும் சுவரில் பொருத்தப்பட்ட அடிகுழாய்

விதைப்பையைச் சூரியனில் காயவைத்தபடி 

மீன்பாடி வண்டியில் உறங்குபவன் மீது

புரண்டு படுக்கிறது நடைமேடை

பானை வயிற்றைத் தடவி வாசலில் நடமாடும் பெண்

வெற்றிலை எச்சிலால் தெருவையே சிவக்க வைக்கிறாள்

அருகே தானிய மணிகளை மேயும் கால்நடை

மூர்க்கத்துடன் குப்பைத்தொட்டியைத் தலையில் கவிழ்த்துக்கொள்கிறது

ஆலம் விழுதுகள் தூண்களாகிப் போன வீட்டினைப் பார்த்து

தலைகுனிந்தபடி வெகுநேரமாய்க் காத்திருக்கிறது இந்தச் சாலை.



Monday, September 5, 2022

மண்டையோடுகளின் பறையிசை


paintingvalley

சுடுகாட்டின் கிழக்கு மேற்காக நீளும்

முதுகெலும்பின் தண்டவாளங்களில் கபால ரயில்

எஞ்சிய புதைமேடுகளை மண்டியிட்டு மேய்ந்த வெள்ளாடுகள்

தேரினை இழுத்துக் கடிக்கின்றன   

சுடுகாட்டின் வடமேற்கைத் தரைமட்டமாக்கி

அளவைக் கல்லை நடும் அதிகாரி

பெயர்த்தெடுத்த மண்டை ஓடுகளை 

அரவை எந்திரத்தில் பொடியாக்குகிறான்

புதைமேட்டைக் கேரம் பலகையாக்கி

அடிப்பானால் காய்களை அடித்துக் கலைக்கும் சிறுவன்

உடைந்து நொறுங்கிய பெயர்ப்பலகையை

நெஞ்சோடு அணைத்துக் கதறியோடுகிறான்  

இரும்பு வேலியைத் தடுப்பாக்கிக்

கூடைப்பந்து விளையாடியவன்  

அம்மாவின் புதைகுழியைத் தேடி

பூமியைக் குத்தி வானத்தை உதைக்கிறான்

காய்ந்த சுள்ளிகளை விறகொடிப்பவள்

குழந்தை புதைந்த இடம்தேடி

பால் கனத்த மார்புகளை அறுத்துத் திசைகளை எறிகிறாள்

வடகிழக்கில் திறந்துகிடக்கும் புதைகுழியை

எட்டிப் பார்க்கிறேன்

சிறுகுட்டையில் தூண்டிலிடும் வாலிபன்

தண்ணீரின் எடையைத் தூக்க முக்கி முனகுகிறான்

கிழக்கை அலறவிட்டபடி

குப்பையைக் கிளர்ந்து தின்னும் வெண்பன்றிகளைக்

கல்லெடுத்து விரட்டும் வயோதிகன்

லுங்கியைத் தூக்கியபடி புதரில் மறைந்தான்

சாராயப் போத்தலைப் புதைமேட்டில் வைத்து

எரிந்து உதிரும் ஊதுபத்தியைக் குனிந்து பார்த்தபடி

கண்ணீர் சொரியும் பெண்ணின் அருகே 

அவளின் மகன் தானும் தலைகுனிந்து நிற்கிறான்

மூலக்கொத்தளம் சுடுகாட்டுக்குள் நுழையும் தங்கரதம்

மண்டை ஓடுகளில் பறையிசைக்கிறது ஆரவாரத்துடன்



Thursday, September 1, 2022

உப்பலையில் கரையும் மாநகரம்

 

pinterest


கக்கத்தில் ஒன்றும் கையில் மற்றொன்றுமாய்

விளக்குமாற்றைச் சுமந்து 

தேங்கிய மழைநீரில் தலைகீழாய் நகர்பவள் 

முகக் கவசத்தைக் கழற்றி எச்சில் பெய்கிறாள் 

மழைநீரின் கொள்ளளவு உயர்கிறது

மினுங்கும் நாவற்பழங்களுக்குப் 

பாடப் புத்தகங்களைக் கிழிப்பவள்

சடுதியில் கொலுசுமணிகளைத் திருகுகிறாள்

கடுகுநிற மணிக்கட்டுகள் 

கழன்று கழன்று விழுந்து வானை முட்டி

மழைத்தாரைகள் சிந்திய நடைமேடையில் உருண்டோடுகின்றன 

உடைந்து நெளிந்த பூக்கடைப் பேருந்து நிழற்குடையின் கீழ்

இளஞ்சிவப்பு சேலை உடுத்திய மூதாட்டி

ஒற்றைக் கண்ணில் நீர்வடிக்கிறாள்

நைந்த வெண்மேகக்கோணியில் 

குவிந்த பலாக்கொட்டைகளின் மீது

ஈக்கள் ரீங்கரிக்கின்றன  

பெயர்ப் பலகையில் அமர்ந்த பறவை

ரீங்காரத்தில் எச்சமிடுகிறது

மற்றைக் கண்ணில் ஒழுகும் நீரில்

மெல்ல கரைகிறது இம்மாநகரம்

  பேச்சுக்குரலில் நவீனப் பட்டினப்பாலை   `கபால நகரம்’ பச்சோந்தியின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பென்று நினைக்கிறேன். அவருடைய முதல் தொகுப்பு, ‘வே...